1 ⁽ஞானமுள்ள மகன் தந்தையின் நற்பயிற்சியை ஏற்றுக்கொள்வான்; இறுமாப்புள்ளவனோ கண்டிக்கப்படுதலைப் பொருட்படுத்த மாட்டான்.⁾

2 ⁽நல்லோர் தம் சொற்களின் பலனான நல்லுணவை உண்கிறார்; வஞ்சகச் செயல்களே வஞ்சகர் உண்ணும் உணவு.⁾

3 ⁽நாவைக் காப்பவர் தம் உயிரையே காத்துக் கொள்கிறார்; நாவைக் காவாதவன் கெட்டழிவான்.⁾

4 ⁽சோம்பேறிகள் உண்ண விரும்புகிறார்கள், உணவோ இல்லை; ஊக்கமுள்ளவரோ உண்டு கொழுக்கிறார்.⁾

5 ⁽நல்லார் பொய்யுரையை வெறுப்பர்; பொல்லாரோ வெட்கக்கேடாகவும் இழிவாகவும் நடந்துகொள்வர்.⁾

6 ⁽நேர்மையாக நடப்போரை நீதி பாதுகாக்கும்; பொல்லாரை அவர்களின் பாவம் கீழே வீழ்த்தும்.⁾

7 ⁽ஒன்றுமில்லாதிருந்தும் செல்வர் போல நடிப்போருமுண்டு; மிகுந்த செல்வமிருந்தும் ஏழைகள் போல நடிப்போருமுண்டு.⁾

8 ⁽அச்சுறுத்தப்படும்போது செல்வர் தம் பொருளைத் தந்து தம் உயிரை மீட்டுக்கொள்வர். ஏழையோ அச்சுறுத்துதலுக்கு அஞ்சான்.⁾

9 ⁽சான்றோரின் ஒளி சுடர்வீசிப் பெருகும்; பொல்லாரின் விளக்கோ அணைக்கப்படும்.⁾

10 ⁽மூடன் தன் இறுமாப்பினாலே சண்டை மூட்டுவான்; பிறருடைய அறிவுரைகளை ஏற்போரிடம் ஞானம் காணப்படும்.⁾

11 ⁽விரைவில் வரும் செல்வம் விரைவில் கரையும்; சிறிது சிறிதாய்ச் சேர்ப்பவனின் செல்வமே பெருகும்.⁾

12 ⁽நெடுநாள் எதிர்நோக்கியிருப்பது மனச் சோர்வை உண்டாக்கும்; விரும்பியது கிடைப்பது சாகாவரத்தைப் பெறுவது போலாகும்.⁾

13 ⁽அறிவுரையைப் புறக்கணிக்கிறவர் அழிவுறுவார்; போதிக்கிறவரின் சொல்லை மதிக்கிறவர் பயனடைவார்.⁾

14 ⁽ஞானமுள்ளவரது அறிவுரை வாழ் வளிக்கும் ஊற்றாகும்; அது ஒருவரைச் சாவை விளைவிக்கும் கண்ணிகளிலிருந்து தப்புவிக்கும்.⁾

15 ⁽நல்லறிவு மக்களின் நல்லெண்ணத்தை வருவிக்கும்; நம்பிக்கைத் துரோகமோ கேடு அடையச் செய்யும்.⁾

16 ⁽கூர்மதிவாய்ந்த எவரும் நல்லறிவோடு நடந்துகொள்வார்; மூடர் தன் மடமையை விளம்பரப்படுத்துவார்.⁾

17 ⁽தீய தூதர் தொல்லையில் ஆழ்த்துவார்; நல்ல தூதரோ அமைதி நிலவச் செய்வார்.⁾

18 ⁽நல்லுரையைப் புறக்கணிப்பவர் வறுமையும் இகழ்ச்சியும் அடைவார்; கண்டிப்புரையை ஏற்பவரோ புகழடைவார்.⁾

19 ⁽நினைத்தது கிடைப்பின் மனத்திற்கு இன்பம்; மூடர் தம் தீமையை வெறுக்காதிருப்பதும் இதனாலேயே.⁾

20 ⁽ஞானமுள்ளவர்களோடு உறவாடுகிறவர் ஞானமுள்ளவராவர்; மூடரோடு நட்புக் கொள்கிறவர் துன்புறுவார்.⁾

21 ⁽பாவிகளைத் தீங்கு பின்தொடரும்; கடவுளுக்கு அஞ்சி நடப்போருக்கு நற்பேறு கிட்டும்.⁾

22 ⁽நல்லவரது சொத்து அவருடைய மரபினரைச் சேரும்; பாவி சேர்த்த செல்வமோ கடவுளுக்கு அஞ்சி நடப்போரை வந்தடையும்.⁾

23 ⁽தரிசு நிலம் ஏழைக்கு ஓரளவு உணவு தரும்; ஆனால் நியாயம் கிடைக்காத இடத்தில் அதுவும் பறிபோகும்.⁾

24 ⁽பிரம்பைக் கையாளதவர் தம் மகனை நேசிக்காதவர்; மகனை நேசிப்பவரோ அவனைத் தண்டிக்கத் தயங்கமாட்டார்.⁾

25 ⁽கடவுளுக்கு அஞ்சி நடப்போருக்கு வயிறார உணவு கிடைக்கும்; பொல்லாரின் வயிறோ பசியால் வாடும்.⁾

Proverbs 13 ERV IRV TRV