1 கர்த்தரை துதி! என் ஆத்துமாவே, கர்த்தரைத் துதி!

2 என் வாழ்க்கை முழுவதும் நான் கர்த்தரைத் துதிப்பேன். என் வாழ்க்கை முழுவதும் நான் அவருக்குத் துதிகளைப் பாடுவேன்.

3 உதவிக்காக உங்கள் தலைவர்களை சார்ந்திராதீர்கள். ஜனங்களை நம்பாதீர்கள். ஏனெனில் ஜனங்கள் உங்களைக் காப்பாற்றமுடியாது.

4 ஜனங்கள் மரித்தபின் புதைக்கப்படுவார்கள். அப்போது உதவி செய்வதற்கான அவர்கள் திட்டங்கள் எல்லாம் மறைந்துபோகும்.

5 ஆனால் தேவனிடம் உதவி வேண்டுகிற ஜனங்கள் மகிழ்ச்சியாயிருக்கிறார்கள். அந்த ஜனங்கள் அவர்களின் தேவனாகிய கர்த்தரை சார்ந்திருக்கிறார்கள்.

6 கர்த்தர் பரலோகத்தையும், பூமியையும் உண்டாக்கினார். கர்த்தர் கடலையும் அதிலுள்ள எல்லாவற்றையும் உண்டாக்கினார். கர்த்தர் அவற்றை என்றென்றும் பாதுகாப்பார்.

7 ஒடுக்கப்பட்ட ஜனங்களுக்கு ஆண்டவர் நீதி வழங்குகிறார். தேவன் ஏழைகளுக்கு உணவளிக்கிறார். சிறைகளில் பூட்டி வைக்கப்பட்ட ஜனங்களைக் கர்த்தர் விடுவிக்கிறார்.

8 குருடர் மீண்டும் காண்பதற்குக் கர்த்தர் உதவுகிறார். தொல்லையில் சிக்குண்ட ஜனங்களுக்குக் கர்த்தர் உதவுகிறார். கர்த்தர் நல்லோரை நேசிக்கிறார்.

9 நம் நாட்டிலுள்ள அந்நியர்களைக் கர்த்தர் காப்பாற்றுகிறார். விதவைகளையும் அநாதைகளையும் கர்த்தர் கவனித்துக் காக்கிறார். ஆனால் கர்த்தர் தீயோரை அழிக்கிறார்.

10 கர்த்தர் என்றென்றும் அரசாளுவார்! சீயோனே, உன் தேவன் என்றென்றும் எப்போதும் அரசாளுவார்! கர்த்தரைத் துதியுங்கள்!

Psalm 146 ERV IRV TRV