Judges 8:22

அப்பொழுது இஸ்ரவேல் மனுஷர் கிதியோனை நோக்கி: நீர் எங்களை மீதியானியர் கைக்கு நீங்கலாக்கிவிட்டபடியினால் நீரும் உம்முடைய குமாரனும், உம்முடைய குமாரனின் குமாரனும், எங்களை ஆளக்கடவீர்கள் என்றார்கள்.

Judges 8:23

அதற்குக் கிதியோன்: நான் உங்களை ஆளமாட்டேன்; என் குமாரனும் உங்களை ஆளமாட்டான்; கர்த்தரே உங்களை ஆளுவாராக என்றான்.

Judges 8:24

பின்பு கிதியோன் அவர்களை நோக்கி: உங்களிடத்தில் ஒரு காரியத்தைக் கேட்கிறேன்; நீங்கள் அவரவர் கொள்ளையிட்ட கடுக்கன்களை என்னிடத்தில் கொண்டுவாருங்கள் என்றான். அவர்கள் இஸ்மவேலராயிருந்தபடியினால் அவர்களிடத்தில் பொன்கடுக்கன்கள் இருந்தது.

Judges 8:25

இஸ்ரவேலர்: சந்தோஷமாய்க் கொடுப்போம் என்று சொல்லி, ஒரு வஸ்திரத்தை விரித்து, அவரவர் கொள்ளையிட்ட கடுக்கன்களை அதிலே போட்டார்கள்.

Judges 8:26

பிறைச் சிந்தாக்குகளும், ஆரங்களும், மீதியானியரின் ராஜாக்கள் போர்த்துக்கொண்டிருந்த இரத்தாம்பரங்களும், அவர்களுடைய ஒட்டகங்களின் கழுத்துகளிலிருந்த சரப்பணிகளும் அல்லாமல், அவன் கேட்டு வாங்கின பொன்கடுக்கன்களின் நிறை ஆயிரத்து எழுநூறு பொன் சேக்கலின் நிறையாயிருந்தது.

Judges 8:27

அதினால் கிதியோன் ஒரு எபோத்தை உண்டாக்கி, அதைத் தன் ஊரான ஒப்ராவிலே வைத்தான்; இஸ்ரவேலரெல்லாரும் அதைப் பின்பற்றிச் சோரம்போனார்கள்; அது கிதியோனுக்கும் அவன் வீட்டாருக்கும் கண்ணியாயிற்று.