Deuteronomy 29 in Tamil ERV Compare Tamil Easy Reading Version
1 கர்த்தர், இஸ்ரவேல் ஜனங்களோடு ஓரேப் மலையின் (சீனாய்) மேல் உடன்படிக்கை செய்தார். அவர்கள் மோவாபில் இருக்கும்போது உடன்படிக்கையோடு கர்த்தர், இன்னொரு உடன்படிக்கையைச் செய்துகொள்ளும்படி மோசேக்குக் கட்டளையிட்டார். இதுதான் அந்த உடன்படிக்கை:
2 மோசே இஸ்ரவேல் ஜனங்கள் அனைவரையும் கூட்டி அழைத்தான். அவன் அவர்களிடம், “நீங்கள் கர்த்தர் எகிப்தில் செய்த எல்லாவற்றையும் பார்த்தீர்கள். அவர் பார்வோனுக்கும், பார்வோனின் அதிகாரிகளுக்கும், நாடு முழுவதற்கும் செய்தவற்றை நீங்கள் பார்த்தீர்கள்.
3 அவர் கொடுத்த பெருந் துன்பங்களையும் நீங்கள் பார்த்தீர்கள். அவர் செய்த அற்புதங்களையும், வியக்கத்தக்கவற்றையும் பார்த்தீர்கள்.
4 ஆனால், இன்றுவரை என்ன நடந்தது என்று நீங்கள் புரிந்துகொள்ளவில்லை. நீங்கள் பார்த்தவற்றையும் கேட்டவற்றையும் பற்றி உண்மையிலேயே புரிந்துகொள்ள கர்த்தர் அனுமதிக்கவில்லை.
5 கர்த்தர் 40 ஆண்டுகளாக உங்களை வனாந்தரத்தில் வழி நடத்தினார். அக்காலம் முழுவதும் உங்கள் ஆடைகளும் பாதரட்சைகளும் கிழிந்து போகவில்லை.
6 உங்களோடு எவ்வித உணவும் இருக்கவில்லை. உங்களிடம் குடிப்பதற்குத் திராட்சைரசமோ வேறு பானமோ இருக்கவில்லை. ஆனால், கர்த்தர் உங்களைக் கவனிக்கும் பொறுப்பை எடுத்துக்கொண்டார். அவரே உங்கள் தேவனாகிய கர்த்தர் என்பதைப் புரிந்து கொள்ளும்படி அவர் இதனைச் செய்தார்.
7 “நீங்கள் இந்த இடத்திற்கு வந்தீர்கள். நமக்கு எதிராகச் சண்டையிட எஸ்போனின் அரசனாகிய சீகோனும், பாசானின் அரசனாகிய ஓகும் வந்தார்கள். ஆனால் நாம் அவர்களைத் தோற்கடித்தோம்.
8 பிறகு நாம் அவர்களுடைய நாடுகளை எடுத்து ரூபனியருக்கும், காத்தியருக்கும், மனாசேயின் பாதிக் கோத்திரத்திற்கும் கொடுத்தோம்.
9 இந்த உடன்படிக்கையில் உள்ள அனைத்துக் கட்டளைகளுக்கும் நீ கீழ்ப்படிந்தால் பிறகு நீ செய்கிற எல்லாவற்றிலும் தொடர்ந்து வெற்றிபெறுவாய்.
10 “இன்று அனைத்து இஸ்ரவேல் ஜனங்களும் உங்கள் தேவனாகிய கர்த்தருக்கு முன் நின்று கொண்டிருக்கிறீர்கள். உங்கள் தலைவர்கள், அதிகாரிகள், மூப்பர்கள் மற்றும் எல்லா மனிதர்களும்,
11 உங்கள் மனைவிகளும் பிள்ளைகளும் இங்கே இருக்கிறார்கள். உங்களிடையே அயல் நாட்டுக் குடிகள் வாழ்கிறார்கள். அவர்கள் உங்களுக்கென்று மரத்தை வெட்டி, தண்ணீரைக்கொண்டு வருகிறார்கள்.
12 உங்கள் தேவனாகிய கர்த்தரிடம் உடன்படிக்கை செய்ய நீங்கள் அனைவரும் இங்கே இருக்கிறீர்கள். கர்த்தர் இன்று உங்களோடு இந்த உடன்படிக்கையைச் செய்கிறார்.
13 இந்த உடன்படிக்கையோடு, கர்த்தர் உங்களைத் தமது சொந்த விசேஷமான ஜனங்களாக்கிக்கொண்டிருக்கிறார். அவர்தாமே உங்கள் தேவன் ஆவார். அவர் இதை உனக்குக் கூறுகிறார். அவர் உனது முற்பிதாக்களான ஆபிரகாம், ஈசாக்கு மற்றும் யாக்கோபு ஆகியோர்களுக்கு வாக்களித்திருக்கிறார்.
14 கர்த்தர் இந்த உடன்படிக்கையை தமது வாக்குறுதிகளோடு உங்களுக்கு மட்டும் கொடுக்கவில்லை.
15 நமது தேவனாகிய கர்த்தருக்கு முன்பு நிற்கிற நம் அனைவரோடும் அவர் உடன்படிக்கை செய்திருக்கிறார். ஆனால் இந்த உடன்படிக்கை இன்று நம்மோடு இங்கே இல்லாத நமது சந்ததிகளுக்கும் உரியதாகிறது.
16 நாம் எகிப்து நாட்டில் எப்படி வாழ்ந்தோம் என்றும், நாம் கடந்து வந்த வழியிலுள்ள இந்நாடுகளில் எப்படிப் பயணம் செய்தோம் என்றும் நினைத்துக்கொள்ளுங்கள்.
17 அவர்களது வெறுக்கத்தக்க பொருட்களான மரத்தாலும், கல்லாலும், வெள்ளியாலும், தங்கத்தாலும் செய்யப்பட்ட விக்கிரகங்களை பார்த்தீர்கள்.
18 இங்கே ஒரு ஆணோ, பெண்ணோ, கோத்திரமோ இன்று, நமது தேவனாகிய கர்த்தரைவிட்டு விலகாதபடி உறுதியாயிருங்கள். அந்நிய நாடுகளிலுள்ள தெய்வங்களுக்கு சேவை செய்ய எவரும் போகவேண்டாம். அவ்வாறு செய்கிற ஜனங்கள் கசப்பும், விஷத் தன்மையும் உள்ள கனியுள்ள செடி போல இருப்பார்கள்.
19 “ஒருவன் இந்தச் சாபங்களைக் கேட்கலாம். ஆனால் அவன் தன்னை ஆறுதல்படுத்திக்கொண்டு தனக்குள், ‘நான் என் விருப்பம் போல்தான் செய்வேன். எனக்கு எந்தத் தீமையும் ஏற்படாது’ என்று சொல்லலாம். அவன் தனக்கு மட்டும் தீமையை வரவழைப்பதில்லை. ஆனால் எல்லோருக்கும், நல்லவர்களுக்கும் கூடத் தீமையை வரவழைக்கிறான்.
20 கர்த்தர் அவனை மன்னிப்பதில்லை. அவன்மேல் கர்த்தர் கோபமும் எரிச்சலும் அடைவார். அவனைக் கர்த்தர் தண்டிப்பார். கர்த்தர் அவனது பெயரை வானத்தின் கீழிருந்து அழித்துப் போடுவார். கர்த்தர் அவனை முழுமையாக அழிப்பார். இப்புத்தகத்தில் எழுதப்பட்டுள்ள எல்லாத் தீமைகளும் அவனுக்கு ஏற்படும். இந்தப் போதனைகளின் புத்தகத்தில் எழுதப்பட்டுள்ள உடன்படிக்கையின் ஒரு பகுதியாக அவை இருக்கும்.
22 “எதிர்காலத்தில் உங்கள் சந்ததிகளும், தொலை தூரத்து அயல்நாட்டுக் குடிகளும் இந்நாடு எவ்வாறு பாழானது என்று காண்பார்கள். கர்த்தர் இந்த நாட்டிற்குக் கொண்டு வந்திருக்கிற நோய்களையும் பார்ப்பார்கள்.
23 அனைத்து நாடுகளும் பயனற்றுப்போகும். எரிகின்ற கந்தகத்தால் அழிக்கப்பட்டு உப்பால் மூடப்படும். எதுவும் நடுவதற்கு ஏற்றதாக பூமி இருக்காது. களைகள் கூட வளராத அளவிற்குப் பாழாய் போகும். கர்த்தர் மிகக் கோபத்தோடு இருந்தபோது, நகரங்களான சோதோமையும், கொமோராவையும், அத்மாவையும், செபோயீமையும் அழித்தது போன்று இந்த நாடும் அழிக்கப்படும்.
24 “‘கர்த்தர் இந்த நாட்டிற்கு ஏன் இவ்வாறு செய்தார்? அவர் ஏன் இவ்வளவு கோபமாக இருக்கிறார்?’ மற்ற அனைத்து நாடுகளும் கேட்கும்.
25 அதன் பதில் இவ்வாறு இருக்கும்: ‘கர்த்தர் கோபமாக இருக்கிறார். ஏனென்றால், இஸ்ரவேல் ஜனங்கள் தங்கள் முற்பிதாக்களின் தேவனாகிய கர்த்தருடைய உடன்படிக்கையை விட்டுவிலகிப் போனார்கள். அவர்களைக் கர்த்தர் எகிப்தை விட்டு வெளியே கொண்டுவந்தபோது அவர்களோடு அவர் செய்த உடன்படிக்கையை பின்பற்றுவதை நிறுத்தினர்.
26 இஸ்ரவேல் ஜனங்கள் அந்நிய தெய்வங்களுக்கும், இதற்குமுன்பு தொழுதுகொள்ளாத தெய்வங்களுக்கும் பணிவிடை செய்யத் தொடங்கினார்கள். அத்தெய்வங்களை ஆராதிக்க வேண்டாம் என்று கர்த்தர் அந்த ஜனங்களிடம் கூறினார்.
27 அதனால்தான், கர்த்தர் அந்நாட்டு ஜனங்களுக்கு எதிராக மிகவும் கோபங்கொண்டார். எனவே, புத்தகத்தில் எழுதப்பட்ட எல்லா சாபங்களையும் அவர்களுக்கு அவர் கொண்டு வந்தார்.
28 கர்த்தர் அவர்கள்மேல் மிகவும் கோபங்கொண்டு எரிச்சல் அடைந்தார். எனவே, அவர்களை அவர் அந்நாட்டைவிட்டு வெளியே எடுத்தார். அவர் அவர்களை இன்று இருக்கிற நாட்டில் விட்டார்.’
29 “நமது தேவனாகிய கர்த்தர் சில காரியங்களை இரகசியமாக வைத்துள்ளார். அவற்றை அவர் மட்டுமே தெரிந்திருக்கிறார். ஆனால் கர்த்தர் தமது போதனைகளை நமக்கும் நமது சந்ததிகளுக்கும் என்றென்றைக்கும் கொடுத்திருக்கிறார். அந்தச் சட்டத்திலுள்ள எல்லா கட்டளைகளுக்கும் நாம் கீழ்ப்படிய வேண்டும்.