எஸ்தர் 8

fullscreen1 அன்றையதினம் அகாஸ்வேரு ராஜா யூதரின் சத்துருவாயிருந்த ஆமானின் வீட்டை ராஜாத்தியாகிய எஸ்தருக்குக் கொடுத்தான்; மொர்தெகாய் ராஜசமுகத்தில் வந்தான்; அவன் தனக்கு இன்ன உறவு என்று எஸ்தர் அறிவித்திருந்தாள்.

fullscreen2 ராஜா ஆமானின் கையிலிருந்து வாங்கிப்போட்ட தம்முடைய மோதிரத்தை எடுத்து, அதை மொர்தெகாய்க்குக் கொடுத்தான்; எஸ்தர் மொர்தெகாயை ஆமானின் அரமனைக்கு அதிகாரியாக வைத்தாள்.

fullscreen3 பின்னும் எஸ்தர் ராஜசமுகத்தில்பேசி, அவன் பாதங்களில் விழுந்து அது, ஆகாயனான ஆமானின் தீவினையையும் அவன் யூதருக்கு விரோதஞ்செய்ய யோசித்த யோசனையையும் பரிகரிக்க அவனிடத்தில் விண்ணப்பம்பண்ணினாள்.

fullscreen4 அப்பொழுது ராஜா பொற்செங்கோலை எஸ்தருக்கு நீட்டினான்; எஸ்தர் எழுந்திருந்து ராஜசமுகத்தில் நின்றாள்.

fullscreen5 ராஜாவுக்குச் சித்தமாயிருந்து அவர் சமுகத்தில் எனக்குக் கிருபைகிடைத்து, ராஜசமுகத்தில் நான் சொல்லும் வார்த்தை சரியென்று காணப்பட்டு, அவருடைய கண்களுக்கு நான் பிரியமாயிருந்தால், ராஜாவின் நாடுகளிலெல்லாம் இருக்கிற யூதரை அழிக்கவேண்டும் என்று அம்மெதாத்தாவின் குமாரனாகிய ஆமான் என்னும் ஆகாகியன் தீவினையாய் எழுதினகட்டளைகள் செல்லாமற்போகப்பண்ணும்படி எழுதி அனுப்பப்படவேண்டும்.

fullscreen6 என் ஜனத்தின்மேல் வரும் பொல்லாப்பை நான் எப்படிப் பார்க்கக்கூடும்? என் குலத்துக்கு வரும் அழிவை நான் எப்படிச் சகிக்கக்கூடும்? என்றாள்.

fullscreen7 அப்பொழுது அகாஸ்வேரு ராஜா ராஜாத்தியாகிய எஸ்தரையும் யூதனாகிய மொர்தெகாயையும் நோக்கி: இதோ, ஆமானின் வீட்டை எஸ்தருக்குக் கொடுத்தேன்; அவன் யூதர்மேல் தன் கையைப்போட எத்தனித்தபடியினால் அவனை மரத்திலே தூக்கிப்போட்டார்கள்.

fullscreen8 இப்போதும் உங்களுக்கு இஷ்டமானபடி நீங்கள் ராஜாவின் நாமத்தினால் யூதருக்காக எழுதி, ராஜாவின் மோதிரத்தினால் முத்திரைபோடுங்கள்; ராஜாவின்பேரால் எழுதப்பட்டு, ராஜாவின் மோதிரத்தினால் முத்திரைபோடப்பட்டதைச் செல்லாமற் போகப்பண்ண ஒருவராலும் கூடாது என்றான்.

fullscreen9 சீவான் மாதம் என்னும் மூன்றாம் மாதம் இருபத்துமூன்றாந்தேதியாகிய அக்காலத்திலேதானே ராஜாவின் சம்பிரதிகள் அழைக்கப்பட்டார்கள்; மொர்தெகாய் கற்பித்தபடியெல்லாம் யூதருக்கும் இந்துதேசம்முதல் எத்தியோப்பியா தேசமட்டுமுள்ள நூற்றிருபத்தேழு நாடுகளின் தேசாதிபதிகளுக்கும், அதிபதிகளுக்கும், அதிகாரிகளுக்கும், அந்தந்த நாட்டில் வழங்கும் அட்சரத்திலும், அந்தந்த ஜாதியார் பேசும் பாஷையிலும், யூதருக்கும் அவர்கள் அட்சரத்திலும் அவர்கள் பாஷையிலும் எழுதப்பட்டது.

fullscreen10 அந்தக் கட்டளைகள் அகாஸ்வேரு ராஜாவின் பேரால் எழுதப்பட்டு, ராஜாவின் மோதிரத்தினால் முத்திரை போடப்பட்டபின், குதிரைகள்மேலும் வேகமான ஒட்டகங்கள்மேலும், கோவேறு கழுதைகள்மேலும் ஏறிப்போகிற அஞ்சற்காரர் கையில் அனுப்பப்பட்டது.

fullscreen11 அவைகளில், அகாஸ்வேரு ராஜாவுடைய எல்லா நாடுகளிலும் ஆதார் மாதம் என்கிற பன்னிரண்டாம் மாதம் பதின்மூன்றாந்தேதியாகிய அந்த ஒரேநாளிலே,

fullscreen12 அந்தந்தப் பட்டணத்திலிருக்கிற யூதர் ஒன்றாய்ச் சேர்ந்து, தங்கள் பிராணனைக் காப்பாற்றவும், தங்களை விரோதிக்கும் சத்துருக்களாகிய ஜனத்தாரும் தேசத்தாருமான எல்லாரையும், அவர்கள் குழந்தைகளையும், ஸ்திரீகளையும் அழித்துக் கொன்று நிர்மூலமாக்கவும், அவர்கள் உடைமைகளைக் கொள்ளையிடவும், ராஜா யூதருக்குக் கட்டளையிட்டாரென்று எழுதியிருந்தது.

fullscreen13 யூதர் தங்கள் பகைஞருக்குச் சரிக்குச் சரிக்கட்டும்படி நியமித்த அன்றையதினத்தில் ஆயத்தமாயிருக்கவேண்டுமென்று அந்தந்த நாட்டிலுள்ள சகல ஜனங்களுக்கும் கூறப்படுகிறதற்காகக் கொடுக்கப்பட்ட கட்டளையின் நகல் இதுவே; இது ஒவ்வொரு நாட்டிலும் பிரசித்தம்பண்ணப்பட்டது.

fullscreen14 அப்படியே வேகமான ஒட்டகங்கள்மேலும், கோவேறு கழுதைகள்மேலும் ஏறின அஞ்சற்காரர் ராஜாவின் வார்த்தையினாலே ஏவப்பட்டு, தீவிரத்தோடே புறப்பட்டுப்போனார்கள்; அந்தக் கட்டளை சூசான் அரமனையில் கொடுக்கப்பட்டது.

fullscreen15 அப்பொழுது மொர்தெகாய் இளநீலமும் வெள்ளையுமான ராஜவஸ்திரமும், பெரிய பொன்முடியும், பட்டும் இரத்தாம்பரமும் அணிந்தவனாய் ராஜாவினிடத்திலிருந்து புறப்பட்டான்; சூசான்நகரம் ஆர்ப்பரித்து மகிழ்ந்திருந்தது.

fullscreen16 இவ்விதமாய் யூதருக்கு வெளிச்சமும், மகிழ்ச்சியும், களிப்பும், கனமுமுண்டாயிற்று.

fullscreen17 ராஜாவின் வார்த்தையும் அவனுடைய கட்டளையும் போய்ச்சேர்ந்த எல்லா நாடுகளிலும், எல்லாப் பட்டணங்களிலும், யூதருக்குள்ளே அது மகிழ்ச்சியும், களிப்பும், விருந்துண்டு கொண்டாடும் நல்ல நாளுமாயிருந்தது; யூதருக்குப் பயப்படுகிறபயம் தேசத்து ஜனங்களைப் பிடித்ததினால், அவர்களில் அநேகர் யூதமார்க்கத்தில் அமைந்தார்கள்.