Hosea 6 in Tamil ERV Compare Tamil Easy Reading Version
1 “வா, நாம் கர்த்தரிடம் திரும்பிப் போவோம். அவர் நம்மைப் புண்படுத்தினார். ஆனால் அவர் நம்மைக் குணப்படுத்துவார். அவர் நம்மைக் காயப்படுத்தினார். ஆனால் அவர் நமக்குக் கட்டுகளைப் போடுவார்.
2 இரண்டு நாட்களுக்குப் பிறகு நமக்கு அவர் திருப்பவும் உயிரைக் கொண்டுவருவார். அவர் மூன்றாவது நாள் நம்மை எழுப்புவார். பிறகு நாம் அவரருகில் வாழ முடியும்.
3 கர்த்தரைப்பற்றி கற்றுக்கொள்வோம். கர்த்தரை அறிந்துக்கொள்ள மிகக் கடுமையாக முயல்வோம். அவர் வந்துக்கொண்டிருக்கிறார் என்பதை நாம் காலைநேரம் வந்துக்கொண்டிருக்கிறது என்பதைப் போன்று அறிகிறோம். கர்த்தர் நம்மிடம் பூமியை நனைக்க வரும் மழையைப்போன்று வருவார்.”
4 “எப்பிராயீமே. நான் உன்னை என்ன செய்வது? யூதா, நான் உன்னை என்ன செய்வது? உனது விசுவாசம் காலை மூடுபனியைப் போன்று உள்ளது. உனது விசுவாசத் தன்மை காலையில் மறையும் பனித்துளியைப் போன்று உள்ளது.
5 நான் தீர்க்கதரிசிகளைப் பயன்படுத்தி ஜனங்களுக்காக சட்டங்களைச் செய்தேன். எனது கட்டளைகளால் ஜனங்கள் கொல்லப்பட்டார்கள். ஆனால் அந்த முடிவுகளிலிருந்து நன்மைகள் வரும்.
6 ஏனென்றால் நான் பலிகளை அல்ல. விசுவாசமுள்ள அன்பையே விரும்புகிறேன். நான் ஜனங்கள் தகன பலிகளை கொண்டு வருவதையல்ல ஜனங்கள் தேவனை அறிந்துகொள்வதையே விரும்புகிறேன்.
7 ஆனால் ஜனங்கள் ஆதாமைப்போன்று உடன்படிக்கையை உடைத்தார்கள் அவர்கள் தமது நாட்டில் எனக்கு விசுவாசம் இல்லாதவர்களாய் இருந்தார்கள்.
8 கீலேயாத். தீமை செய்கிறவர்களின் நகரமாயிருக்கிறது. அங்கு ஜனங்கள் மற்றவர்களைத் தந்திரம் செய்து கொல்லுகிறார்கள்.
9 வழிப்பறிக்காரர்கள் மறைந்திருந்து மற்றவர்களைத் தாக்கக் காத்திருக்கிறார்கள். அதைப் போலவே, சீகேமுக்குப் போகும் சாலையில் அவ்வழியில் செல்லும் ஜனங்களைத் தாக்க ஆசாரியர்கள் காத்திருக்கின்றார்கள். அவர்கள் தீமைகளைச் செய்திருக்கிறார்கள்.
10 நான் இஸ்ரவேல் நாட்டில் பயங்கரமானவற்றைப் பார்த்திருக்கிறேன். எப்பிராயீம் தேவனுக்கு விசுவாசம் இல்லாமல் போனான். இஸ்ரவேல் பாவத்தால் அழுக்கானது.
11 யூதா, உனக்கும் அறுவடைகாலம் இருக்கிறது. நான் எனது ஜனங்களைச் சிறைமீட்டு வரும்போது இது நிகழும்”