Psalm 9 in Tamil IRV Compare Tamil Indian Revised Version
1 முத்லபேன் என்ற இசைக்கருவியில் வாசிக்க இராகத் தலைவனுக்கு தாவீது தந்த பாடல் கர்த்தாவே, என் முழு இருதயத்தோடும் உம்மைத் துதிப்பேன்; உம்முடைய அதிசயங்களையெல்லாம் விவரிப்பேன்.
2 உம்மில் மகிழ்ந்து சந்தோஷப்படுவேன்; உன்னதமானவரே, உமது பெயரைப் புகழ்ந்து பாடுவேன்.
3 என்னுடைய எதிரிகள் பின்னாகத் திரும்பும்போது, உமது சமுகத்தில் அவர்கள் இடறி அழிந்துபோவார்கள்.
4 நீர் என்னுடைய நியாயத்தையும் என்னுடைய வழக்கையும் தீர்த்து, நீதியுள்ள நியாயாதிபதியாக சிங்காசனத்தின்மேல் அமர்ந்திருக்கிறீர்.
5 தேசங்களைக் கடிந்துகொண்டு, துன்மார்க்கர்களை அழித்து, அவர்கள் பெயரை என்றென்றைக்கும் இல்லாமல் குலைத்துப்போட்டீர்.
6 எதிரிகள் என்றென்றைக்கும் பாழாக்கப்பட்டார்கள்; அவர்கள் பட்டணங்களைத் தரைமட்டமாக்கினீர்; அவர்களைப் பற்றிய நினைவும் அழிந்துபோனது.
7 கர்த்தரோ என்றென்றைக்கும் அமர்ந்திருப்பார்; தம்முடைய சிங்காசனத்தை நியாயத்தீர்ப்புக்கென்று ஏற்படுத்தியிருக்கிறார்.
8 அவர் உலகில் உள்ளவர்களை நீதியாக நியாயந்தீர்த்து, எல்லா மக்களுக்கும் செம்மையாக நீதிசெய்வார்.
9 சிறுமைப்பட்டவனுக்குக் கர்த்தர் அடைக்கலமானவர்; நெருக்கப்படுகிற காலங்களில் அவரே தஞ்சமானவர்.
10 கர்த்தாவே, உம்மைத் தேடுகிறவர்களை நீர் கைவிடுகிறதில்லை; ஆதலால், உமது பெயரை அறிந்தவர்கள் உம்மை நம்பி இருப்பார்கள்.
11 சீயோனில் அரசாளுகிற கர்த்தரைப் புகழ்ந்து பாடி, அவர் செய்கைகளை மக்களுக்குள்ளே அறிவியுங்கள்.
12 ஏனெனில் இரத்தப்பழிகளைக்குறித்து அவர் விசாரணை செய்யும்போது, அவர்களை நினைக்கிறார்; எளியவர்களுடைய கூக்குரலை மறக்கமாட்டார்.
13 மரணவாசல்களிலிருந்து என்னைத் தூக்கிவிடுகிற கர்த்தாவே, நான் உம்முடைய துதிகளையெல்லாம் மகளாகிய சீயோன் வாசல்களில் விவரித்து, உம்முடைய இரட்சிப்பினால் மகிழ்வதற்கு,
14 தேவனே நீர் எனக்கு இரங்கி, என்னைப் பகைக்கிறவர்களால் எனக்கு வரும் துன்பத்தை நோக்கிப்பாரும்.
15 தேசங்கள் தாங்கள் வெட்டின குழியில் தாங்களே விழுந்தார்கள்: அவர்கள் மறைவாக வைத்த வலையில் அவர்களுடைய கால்களே அகப்பட்டுக்கொண்டன.
16 கர்த்தர் தாம் செய்த நியாயத்தினால் அறியப்படுகிறார்; துன்மார்க்கன் தன்னுடைய கைகளின் செயல்களினால் சிக்கிக்கொண்டான். (இகாயோன், சேலா.)
17 துன்மார்க்கர்களும், தேவனை மறக்கிற எல்லா இனத்தார்களும், நரகத்திலே தள்ளப்படுவார்கள்.
18 எளியவன் என்றைக்கும் மறக்கப்படுவதில்லை; ஏழைகளுடைய நம்பிக்கை ஒருபோதும் கெட்டுப்போவதில்லை.
19 எழுந்தருளும் கர்த்தாவே, மனிதன் பெலன்கொள்ளாதபடி செய்யும்; தேசத்தார்கள் உம்முடைய சமுகத்தில் நியாயந்தீர்க்கப்பட வேண்டும்
20 தேசங்கள் தாங்கள் மனிதர்கள்தான் என்று அறிவதற்கு, அவர்களுக்குப் பயமுண்டாக்கும், கர்த்தாவே. (சேலா)