Acts 10 in Tamil IRV Compare Tamil Indian Revised Version
1 இத்தாலியா இராணுவத்தில் நூறுபேர்கொண்ட படைப்பிரிவிற்கு கொர்நேலியு என்னும் பெயர்கொண்ட ஒரு மனிதன் தலைவனாக இருந்தான். அவன் செசரியா பட்டணத்தில் வாழ்ந்து வந்தான்.
2 அவன் தேவபக்தியுள்ளவனும் தன் குடும்பத்தாரோடும் தேவனுக்குப் பயந்தவனுமாக இருந்து, மக்களுக்கு அதிக தருமங்களைச் செய்து, எப்பொழுதும் தேவனை நோக்கி ஜெபம்பண்ணிக்கொண்டிருந்தான்.
3 பிற்பகலில் ஏறக்குறைய மூன்று மணியளவில் தேவனுடைய தூதன் அவனிடத்தில் வந்து, கொர்நேலியுவே! என்று அழைத்ததை தெளிவாய் தரிசனம் கண்டு,
4 அவனை உற்றுப்பார்த்து, பயந்து: ஆண்டவரே, என்ன என்றான். அப்பொழுது அவன்: உன் ஜெபங்களும் உன் தருமங்களும் தேவனுக்கு நினைப்பூட்டுதலாக அவர் சமூகத்தில் வந்து சேர்ந்திருக்கிறது.
5 இப்பொழுது நீ யோப்பா பட்டணத்திற்கு மனிதர்களை அனுப்பி, பேதுரு என்று மறுபெயர்கொண்ட சீமோனை கூப்பிடு.
6 அவன் தோல்பதனிடுகிறவனாகிய சீமோன் என்னும் ஒருவனிடத்தில் தங்கியிருக்கிறான்; அவனுடைய வீடு கடலோரத்திலிருக்கிறது. நீ செய்யவேண்டியதை அவன் உனக்குச் சொல்லுவான் என்றான்.
7 கொர்நேலியு தன்னோடு பேசின தேவதூதன் போனபின்பு, தன் வீட்டு மனிதர்களில் இரண்டுபேரையும் தன்னிடத்தில் வேலைசெய்கிற இராணுவ வீரர்களில் தேவபக்தியுள்ள ஒருவனையும் அழைத்து,
8 எல்லாவற்றையும் அவர்களுக்கு விளக்கிச் சொல்லி, அவர்களை யோப்பா பட்டணத்திற்கு அனுப்பினான்.
9 மறுநாளிலே அவர்கள் பயணப்பட்டு, அந்தப் பட்டணத்திற்கு அருகில் வரும்போது, பேதுரு மதியம் பன்னிரண்டு மணியளவிலே ஜெபம்பண்ணும்படி மேல்வீட்டில் ஏறினான்.
10 அவன் அதிக பசியடைந்து சாப்பிட விரும்பினான்; அதற்கு அவர்கள் ஆயத்தம்பண்ணும்போது, அவன் தரிசனத்தில்,
11 வானம் திறந்திருக்கிறதாகவும், நான்கு முனைகளும் கட்டப்பட்ட பெரிய விரிப்பு ஒருவிதமான கூடுபோல தன்னிடத்தில் இறங்கித் தரையில் விடப்பட்டிருக்கிறதாகவும்,
12 அதிலே பூமியிலுள்ள எல்லாவிதமான நான்குகால் ஜீவன்களும், காட்டுமிருகங்களும், ஊரும் பிராணிகளும், ஆகாயத்துப் பறவைகளும் இருக்கிறதாகவும் கண்டான்.
13 அல்லாமலும்: பேதுருவே, எழுந்திரு, அடித்து சாப்பிடு என்று அவனுக்குச் சொல்லும் ஒரு சத்தம் கேட்டது.
14 அதற்குப் பேதுரு: அப்படியல்ல, ஆண்டவரே, தீட்டும் அசுத்தமுமாக இருக்கிற எதையும் நான் எப்போதும் சாப்பிட்டதில்லை என்றான்.
15 அப்பொழுது: தேவன் சுத்தமாக்கினவைகளை நீ தீட்டாக நினைக்காதே என்று இரண்டாம்முறையும் அவனுக்கு சத்தம் கேட்டது.
16 மூன்றாம்முறையும் அப்படியே கேட்டது. பின்பு அந்தக் கூடு திரும்ப வானத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
17 அப்பொழுது பேதுரு, தான் கண்ட தரிசனத்தைப்பற்றி தன் மனதில் சந்தேகப்படும்போது, இதோ, கொர்நேலியுவினால் அனுப்பப்பட்ட மனிதர்கள் சீமோனுடைய வீட்டை விசாரித்துக்கொண்டு வாசற்படியிலே வந்துநின்று:
18 பேதுரு என்று மறுபெயர்கொண்ட சீமோன் இங்கே தங்கியிருக்கிறாரா என்று கேட்டார்கள்.
19 பேதுரு அந்தத் தரிசனத்தைக்குறித்து யோசனை செய்துகொண்டிருக்கும்போது, ஆவியானவர்: இதோ, மூன்று மனிதர்கள் உன்னைத் தேடுகிறார்கள்.
20 நீ எழுந்து, இறங்கி, எதைக்குறித்தும் சந்தேகப்படாமல், அவர்களோடு போ; நானே அவர்களை அனுப்பினேன் என்று அவனுக்குச் சொன்னார்.
21 அப்பொழுது பேதுரு கொர்நேலியுவினால் தன்னிடத்தில் அனுப்பப்பட்ட மனிதர்களிடத்திற்கு இறங்கிப்போய்: இதோ, நீங்கள் தேடுகிறவன் நான்தான், நீங்கள் வந்திருக்கிற விஷயம் என்ன என்றான்.
22 அதற்கு அவர்கள்: நீதிமானும், தேவனுக்குப் பயப்படுகிறவரும், யூதமக்களால் நல்லவரென்று சாட்சி பெற்றவருமாகிய கொர்நேலியு என்னும் நூறுபேர்கொண்ட படைப்பிரிவின் தலைவர் உம்மைத் தன்னுடைய வீட்டிற்கு அழைத்து, உம்மால் சொல்லப்படும் வார்த்தைகளைக் கேட்கும்படி தேவனுடைய பரிசுத்த தூதனாலே கட்டளை பெற்றார் என்றார்கள்.
23 அப்பொழுது பேதுரு அவர்களை உள்ளே அழைத்து, தங்க வைத்து வேண்டிய உதவிகளைச் செய்தான். மறுநாளிலே அவர்களோடு புறப்பட்டான்; யோப்பா பட்டணத்து சகோதரர்களில் சிலரும் அவனோடுகூட போனார்கள்.
24 மறுநாளிலே செசரியா பட்டணத்திற்கு வந்துசேர்ந்தார்கள். கொர்நேலியு தன் உறவினரையும் தன்னுடைய நெருங்கிய நண்பர்களையும் வரவழைத்து, அவர்களுக்காகக் காத்திருந்தான்.
25 பேதுரு உள்ளே நுழையும்பொழுது, கொர்நேலியு அவனுக்கு எதிரேபோய், அவன் பாதத்தில் விழுந்து, பணிந்துகொண்டான்.
26 பேதுரு அவனைத் தூக்கியெடுத்து: எழுந்திரும், நானும் ஒரு மனிதன்தான் என்றான்.
27 அவனோடுகூட பேசிக்கொண்டு உள்ளேபோய், அநேக மக்கள் கூடிவந்திருக்கிறதைக் கண்டு,
28 அவர்களை நோக்கி: யூதரல்லாதவனோடு கலந்து அவனிடத்தில் போக்கும் வரத்துமாக இருப்பது யூத சட்டத்திற்கு எதிரானது என்று நீங்கள் தெரிந்திருக்கிறீர்கள்; அப்படியிருந்தும், எந்த மனிதனையும் தீட்டுள்ளவன் என்றும் அசுத்தமுள்ளவன் என்றும் நான் சொல்லாதபடிக்கு தேவன் எனக்குத் தரிசனத்தில் காண்பித்திருக்கிறார்.
29 ஆகவே, நீங்கள் என்னை அழைத்தபோது நான் மறுப்பு சொல்லாமல் வந்தேன். இப்போதும் என்ன காரியத்துக்காக என்னை அழைத்தீர்கள் என்று கேட்கிறேன் என்றான்.
30 அதற்குக் கொர்நேலியு: நான்கு நாட்களுக்கு முன்னே இந்நேரத்திலே நான் உபவாசித்து, பிற்பகல் மூன்று மணியளவில் என் வீட்டிலே ஜெபம்பண்ணிக்கொண்டிருந்தேன்; அப்பொழுது வெண்மையான ஆடை அணிந்த மனிதன் ஒருவன் எனக்கு முன்பாக நின்று:
31 கொர்நேலியுவே, உன் ஜெபம் கேட்கப்பட்டது, உன் தானதருமங்கள் தேவ சமுகத்தில் நினைக்கப்பட்டது.
32 யோப்பா பட்டணத்திற்கு ஆள் அனுப்பி, பேதுரு என்னும் மறுபெயர்கொண்ட சீமோனை வரவழைப்பாயாக, அவன் கடலோரத்திலே தோல்பதனிடுகிறவனாகிய சீமோனுடைய வீட்டிலே தங்கியிருக்கிறான்; அவன் வந்து உன்னிடத்தில் பேசுவான் என்றார்.
33 அந்தப்படியே நான் உடனே உம்மிடத்திற்கு ஆள் அனுப்பினேன்; நீர் வந்தது நல்லது; தேவனாலே உமக்குக் கட்டளையிடப்பட்ட எல்லாவற்றையும் கேட்க நாங்கள் எல்லோரும் இப்பொழுது இங்கே தேவனுடைய சமுகத்தில் கூடியிருக்கிறோம் என்றான்.
34 அப்பொழுது பேதுரு பேசத்தொடங்கி: தேவன் பட்சபாதமுள்ளவரல்ல என்றும்,
35 எந்த இனமாக இருந்தாலும் அவருக்குப் பயந்திருந்து நேர்மையானதைச் செய்கிறவன் எவனோ அவனே அவருக்குப் பிரியமானவன் என்றும் நிச்சயமாகத் தெரிந்திருக்கிறேன்.
36 எல்லோருக்கும் கர்த்தராக இருக்கிற இயேசுகிறிஸ்துவைக்கொண்டு அவர் சமாதானத்தை நற்செய்தியாகக் கூறி, இஸ்ரவேல் மக்களுக்கு அனுப்பின வார்த்தையை தெரிந்திருக்கிறீர்களே.
37 யோவான் ஞானஸ்நானத்தைக்குறித்துப் போதித்தப்பின்பு, கலிலேயா தேசத்தில் துவங்கி யூதேயா தேசமெங்கும் நடந்த சம்பவங்கள் இவைகளே.
38 நசரேயனாகிய இயேசுவை தேவன் பரிசுத்த ஆவியானவராலும் வல்லமையினாலும் அபிஷேகம்பண்ணினார்; தேவன் அவருடனேகூட இருந்தபடியினாலே அவர் நன்மைசெய்கிறவராகவும் பிசாசின் பிடியில் சிக்கின எல்லோரையும் குணமாக்குகிறவராகவும் சுற்றித்திரிந்தார்.
39 யூதர்களுடைய தேசத்திலும் எருசலேமிலும் அவர் செய்த எல்லாவற்றிற்கும் நாங்கள் சாட்சிகளாக இருக்கிறோம். அவரை மரத்திலே தூக்கிக் கொலைசெய்தார்கள்.
40 மூன்றாம்நாளிலே தேவன் அவரை உயிரோடு எழுப்பி நாம் அவரைக் காணும்படிச்செய்தார்.
41 என்றாலும், எல்லா மக்களும் அவரைக் காணும்படிச்செய்யாமல், அவர் உயிரோடு எழுந்தபின்பு அவரோடு சாப்பிட்டு குடித்தவர்களும் தேவனால் நியமிக்கப்பட்ட சாட்சிகளாகிய நாங்கள் காணும்படிச்செய்தார்.
42 அவரே உயிரோடிருக்கிறவர்களுக்கும் மரித்தோர்களுக்கும் தேவனால் நியமிக்கப்பட்ட நியாயாதிபதியென்று மக்களுக்குப் போதிக்கவும், சாட்சியாக அறிவிக்கவும், அவர் எங்களுக்குக் கட்டளையிட்டார்.
43 அவரை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் அவருடைய நாமத்தினாலே பாவமன்னிப்பைப் பெறுவான் என்று தீர்க்கதரிசிகள் எல்லோரும் அவரைக்குறித்தே சாட்சிகொடுக்கிறார்கள் என்றான்.
44 இந்த வார்த்தைகளைப் பேதுரு பேசிக்கொண்டிருக்கும்போது வசனத்தைக் கேட்ட எல்லோர்மேலும் பரிசுத்த ஆவியானவர் இறங்கினார்.
45 அவர்கள் பலவிதமான மொழிகளைப் பேசுகிறதையும், தேவனைப் புகழ்வதையும்,
46 பேதுருவுடன் வந்திருந்த விருத்தசேதனம்பண்ணப்பட்ட விசுவாசிகள் கேட்கும்போது, பரிசுத்த ஆவியானவரின் வரம் யூதரல்லாதவர்கள்மேலும், பொழிந்தருளப்பட்டதைக்குறித்து வியப்படைந்தார்கள்.
47 அப்பொழுது பேதுரு: நம்மைப்போல பரிசுத்த ஆவியானவரைப் பெற்ற இவர்களும் தண்ணீரில் ஞானஸ்நானம் பெறாதபடி இவர்களைத் தடைசெய்யலாமா? என்று சொல்லி,
48 கர்த்தருடைய நாமத்தினாலே அவர்களுக்கு ஞானஸ்நானம் கொடுக்கும்படிக் கட்டளையிட்டான். அப்பொழுது சிலநாட்கள் அங்கே தங்கும்படி அவனைக் கேட்டுக்கொண்டார்கள்.