Acts 3 in Tamil ERV Compare Tamil Easy Reading Version
1 ஒருநாள் பேதுருவும் யோவானும் தேவாலயத்துக்குப் போனார்கள். பிற்பகல் மூன்று மணியாகி இருந்தது. அது தினமும் தேவாலயத்தில் பிரார்த்தனை நேரமாகும்.
2 அவர்கள் தேவாலயத்தின் முற்றத்தில் போய்கொண்டிருக்கும்போது, ஒரு மனிதன் அங்கிருந்தான். அவன் பிறந்தது முதல் ஊனமுற்றவனாக இருந்தான். அவனால் நடக்க முடியாததால் அவனது நண்பர்கள் சிலர் அவனைச் சுமந்து வந்தனர். அவனது நண்பர்கள் ஒவ்வொரு நாளும் அவனை தேவாலயத்துக்கு அழைத்து வந்தனர். அவர்கள் ஊனமுற்ற மனிதனை தேவாலயத்துக்கு வெளியே ஒரு பெருங்கதவின் அருகே உட்கார வைத்தனர். அது அலங்கார வாசல் என அழைக்கப்பட்டது. தேவாலயத்துக்குள் போகும் அனைவரிடமும் அம்மனிதன் பணத்திற்காகப் பிச்சை கேட்டான்.
3 அன்றையத்தினம் அம்மனிதன் பேதுருவும், யோவானும் தேவாலயத்துக்குள் போய்க்கொண்டிருப்பதைக் கண்டான். அவன் அவர்களிடம் பணத்திற்காக வேண்டினான்.
4 பேதுருவும் யோவானும் ஊனமுற்ற அம்மனிதனை நோக்கி, “எங்களைப் பார்” என்றனர்.
5 அம்மனிதன் அவர்களைப் பார்த்தான். அவர்கள் ஏதேனும் கொஞ்சம் பணம் கொடுப்பார்களென அவன் எதிர்பார்த்தான்.
6 ஆனால் பேதுரு, “என்னிடம் வெள்ளியோ, பொன்னோ கிடையாது, ஆனால் உனக்குக் கொடுக்கக்கூடிய வேறு பொருள் என்னிடம் உள்ளது. நாசரேத்தைச் சேர்ந்த இயேசு கிறிஸ்துவின் வல்லமையால் எழுந்து நட!” என்று கூறினான்.
7 பின் பேதுரு அம்மனிதனின் வலது கையைப் பிடித்து அவனைத் தூக்கினான். உடனே அம்மனிதனின் பாதங்களும் கால்களும் பலம் பெற்றன.
8 அம்மனிதன் குதித்தெழுந்து, அவனது பாதங்களில் நின்று, நடக்க ஆரம்பித்தான். அவன் அவர்களோடு தேவாலயத்துக்குள் சென்றான். அம்மனிதன் நடந்துகொண்டும், குதித்துக்கொண்டும் தேவனை வாழ்த்தியவனாக இருந்தான்.
9 எல்லா மக்களும் அவனை அடையாளம் கண்டுகொண்டனர். எப்போதும் அலங்கார வாசல் அருகே அமர்ந்து பணத்திற்காகப் பிச்சை கேட்கும் ஊனமுற்ற மனிதனே அவன் என்று மக்கள் அறிந்தனர். இப்போது அதே மனிதன் நடந்துகொண்டிருப்பதையும் தேவனை வாழ்த்திக்கொண்டிருப்பதையும் அவர்கள் கண்டார்கள். மக்கள் ஆச்சரியமடைந்தார்கள். எவ்வாறு இது நடக்கக் கூடுமென்பதை அவர்களால் புரிந்துகொள்ள முடியவில்லை.
11 அம்மனிதன் பேதுருவோடும் யோவானோடும் சேர்ந்துகொண்டிருந்தான். அம்மனிதன் நலம் பெற்றதையறிந்து எல்லா மக்களும் ஆச்சரியம் கொண்டனர். சாலமோனின் மண்டபத்தில் பேதுருவிடமும் யோவானிடமும் அவர்கள் ஓடிச் சென்றனர்.
12 இதைக் கண்டதும் பேதுரு, மக்களை நோக்கி, “எனது யூத சகோதரர்களே, நீங்கள் ஏன் இதைக் கண்டு ஆச்சரியப்படுகிறீர்கள்? இம்மனிதனை எங்களது வல்லமையால் நடக்கும்படியாகச் செய்தோம் என்பது போல் நீங்கள் எங்களைப் பார்க்கிறீர்கள். நாங்கள் நல்லவர்களாக இருப்பதால் இதைச் செய்ய முடிந்தது என்று நீங்கள் நினைக்கிறீர்களா?
13 இல்லை! தேவன் இதைச் செய்தார்! அவர் ‘ஆபிரகாமின் தேவனும் ஈசாக்கின் தேவனும் யாக்கோபின் தேவனும்’ ஆனவர். அவரே நமது முன்னோர்களின் தேவன். அவர் தனது விசேஷ ஊழியரான இயேசுவுக்கு மகிமையை அளித்தார். ஆனால் நீங்களோ இயேசுவைக் கொல்லும்படியாகக் கொடுத்தீர்கள். பிலாத்து இயேசுவுக்கு விடுதலையளிக்க முடிவு செய்தான். ஆனால் உங்களுக்கு இயேசு வேண்டாதவரென நீங்கள் பிலாத்துவுக்குக் கூறினீர்கள்.
14 இயேசு தூயவராகவும் நல்லவராகவும் இருந்தார். ஆனால் நீங்கள் அவர் தேவையில்லையெனக் கூறினீர்கள். இயேசுவுக்குப் பதிலாக ஒரு கொலையாளியை உங்களுக்குத் தரும்படியாக நீங்கள் பிலாத்துவை வேண்டினீர்கள்.
15 உயிரளிக்கிறவரை நீங்கள் கொன்றீர்கள். ஆனால் தேவனோ அவரை மரணத்திலிருந்து எழுப்பினார். நாங்கள் இதற்கு சாட்சிகள். எங்கள் கண்களாலேயே இதைக் கண்டோம்.
16 “இயேசுவின் வல்லமையே ஊனமுற்ற மனிதனை நன்றாக நடக்கும்படிச் செய்தது. இயேசுவின் வல்லமையில் நாங்கள் நம்பிக்கை வைத்ததால் இது நிகழ்ந்தது. நீங்கள் இம்மனிதனைப் பார்க்க முடிகிறது. உங்களுக்கு இவனைத் தெரியும். இயேசுவின் மீதுள்ள நம்பிக்கையால் அவன் முழுக்கக் குணமடைந்தான். அது நிகழ்ந்ததை நீங்கள் எல்லாரும் கண்டீர்கள்.
17 “எனது சகோதரர்களே, நீங்கள் செய்வதை அறியாததால் அவற்றை இயேசுவுக்குச் செய்தீர்கள் என்பதை நான் அறிவேன். உங்கள் தலைவர்களும் அதைப் புரிந்துகொள்ளவில்லை.
18 இக்காரியங்கள் நடந்தேறுமென தேவன் கூறினார். அவரது கிறிஸ்து துன்புற்று இறப்பார் என்பதை தேவன் தம் தீர்க்கதரிசிகள் மூலமாகக் கூறினார். தேவன் இதை எவ்வாறு நிறைவேற்றினார் என்பதை உங்களுக்குக் கூறியுள்ளேன்.
19 எனவே நீங்கள் உங்கள் இருதயங்களையும், வாழ்க்கையையும் மாற்றிக்கொள்ளுங்கள்! தேவனிடம் திரும்புங்கள். அவர் உங்கள் பாவங்களை மன்னிப்பார்.
20 பின் ஆண்டவர் உங்களுக்கு ஆவிக்குரிய இளைப்பாறுதலை நல்குவார். கிறிஸ்துவாக இருக்கத் தேர்ந்தெடுக்கப்பட்டவராகிய இயேசுவை அவர் உங்களுக்குக் கொடுப்பார்.
21 “ஆனால் எல்லாக் காரியங்களும் மீண்டும் சரியாகும் வரை இயேசு பரலோகத்தில் இருக்க வேண்டும். பல்லாண்டுகளுக்கு முன்னரே தேவன் தனது பரிசுத்த தீர்க்கதரிசிகள் மூலமாகப் பேசியபோதே, இவற்றைப்பற்றிக் கூறியுள்ளார்.
22 மோசே, ‘கர்த்தராகிய உங்கள் தேவன் உங்களுக்கு ஒரு தீர்க்கதரிசியை அளிப்பார். உங்கள் சொந்த மக்களிடையேயிருந்து அந்தத் தீர்க்கதரிசி தோன்றுவார். அவர் என்னைப் போலவே இருப்பார். அத்தீர்க்கதரிசி உங்களுக்குக் கூறுகின்ற எல்லாவற்றிற்கும் நீங்கள் கீழ்ப்படிய வேண்டும்.
23 எந்த மனிதனாகிலும் அந்தத் தீர்க்கதரிசிக்குக் கீழ்ப்படிய மறுத்தால் அப்போது அம்மனிதன் தேவனுடைய மக்களிடமிருந்து பிரிந்து இறப்பான்’” என்றான்.
24 “தேவனுக்காகப் பேசிய சாமுவேலும் அவருக்குப் பின் வந்த மற்ற எல்லாத் தீர்க்கதரிசிகளும் இக்காலத்தைக் குறித்துப் பேசினார்கள்.
25 தீர்க்கதரிசிகள் பேசிய அனைத்தையும் நீங்கள் பெற்றீர்கள். அதைப் போலவே தேவன் உங்கள் முன்னோரோடு செய்த உடன்படிக்கையையும் நீங்கள் பெற்றீர்கள். தேவன் உங்கள் தந்தையாகிய ஆபிரகாமிடம், ‘உன் தலைமுறையினரால் உலகின் ஒவ்வொரு தேசமும் ஆசீர்வதிக்கப்படும்’ என்று கூறினார்.
26 தேவன் தனது விசேஷ ஊழியரை அனுப்பியுள்ளார். தேவன் அவரை முதலாவதாக உங்களிடம் அனுப்பினார். உங்களை ஆசீர்வதிப்பதற்கு தேவன் இயேசுவை அனுப்பினார். நீங்கள் ஒவ்வொருவரும் தீய செயல்களைச் செய்கிறதிலிருந்து உங்களைத் திருப்புவதின் மூலம் தேவன் இதைச் செய்கிறார்” என்றான்.