Deuteronomy 7 ERV IRV TRV KJV ASV BBE DBY WBT WEB YLT
1 நீ உரிமையாக்கிக் கொள்ளைப்போகும் நாட்டில், உன் கடவுளாகிய ஆண்டவர் உன்னைப் புகச்செய்து, உன்னைவிட வலிமையிலும் எண்ணிக்கையிலும் மிகுந்த மக்களாகிய இத்தியர், கிர்காசியர், எமோரியர், கானானியர், பெரிசியர், இவ்வியர், எபூசியர் எனும் ஏழு மக்களினங்களையும் உன் கண்முன்னே விரட்டியடித்து,2 உன் கடவுளாகிய ஆண்டவர் அவர்களை உன்னிடம் கையளிக்கும்போது, நீ அவர்களை முறியடித்து முற்றிலும் அழிப்பாய். அவர்களோடு உடன்படிக்கை செய்து கொள்ளவோ அவர்களுக்கு இரங்கவோ வேண்டாம்.3 நீ அவர்களோடு திருமண ஒப்பந்தம் செய்து கொள்ளாதே. உன் மகளை அவர்கள் மகனுக்குக் கொடுக்காதே. உன் மகனுக்கு அவர்கள் மகளைக் கொள்ளாதே.4 ஏனெனில், என்னைப் பின்பற்றுவதிலிருந்து உன் பிள்ளைகளை அவர்கள் விலக்கி, வேற்றுத் தெய்வங்களை வணங்கும்படி செய்வார்கள். அதனால், ஆண்டவரின் சினம் உனக்கெதிராய் மூண்டு உன்னை விரைவில் அழிக்கும்.5 மாறாக, நீ அவர்களுக்கு இவ்வாறு செய்; அவர்களின் பலிபீடங்களை இடித்து, அவர்களின் சிலைத் தூண்களை உடைத்து, அவர்களின் அசேராக் கம்பங்களை வெட்டி, அவர்களின் கைவினையான சிலைகளைத் தீயில் எரித்துவிடு.6 ஏனெனில், உங்கள் கடவுளாகிய ஆண்டவரின் தூய மக்களினம் நீங்கள். மண்ணிலுள்ள எல்லா மக்களினங்களிலும் உங்களையே தம் சொந்த மக்களாக கடவுளாகிய ஆண்டவர் தேர்ந்து கொண்டார்.7 எல்லா மக்களிலும் நீங்கள் திரளானவர்கள் என்பதற்காக ஆண்டவர் உங்கள்மீது அன்பு கொண்டு உங்களைத் தேர்ந்து கொள்ளவில்லை. உண்மையில், எல்லா மக்களிலும் நீங்கள் சொற்பமானவர்களே!8 மாறாக, உங்களிடம் அன்புகூர்ந்ததனாலும், உங்கள் மூதாதையருக்கு ஆணையிட்டுக் கொடுத்த வாக்கைக் காப்பாற்றும் பொருட்டும், ஆண்டவர் தமது வலிமைமிகு கரத்தால் உங்களைப் புறப்படச் செய்து, அடிமைத்தன வீட்டினின்றும் எகிப்து மன்னனாகிய பார்வோனின் கையினின்றும் உங்களை விடுவித்தார்.9 எனவே, உங்கள் கடவுளாகிய ஆண்டவரே கடவுள் எனவும், அவரே உண்மையான இறைவன் எனவும் அறிந்து கொள்ளுங்கள். அவர்மீது அன்பு கூர்வோர்க்கும் அவரின் கட்டளைகளைக் கடைப்பிடிப்போருக்கும் ஆயிரம் தலைமுறைவரைக்கும் தம் இரக்கத்தின் உடன்படிக்கையைக் காக்கின்றவர் அவரே!10 ஆனால், அவரைப் பகைப்பவரை அழிப்பதன் மூலம் நேரடியாகப் பதிலளிப்பார்; அவரை வெறுப்பவரை நேரடியாகத் தண்டிப்பதற்கும் காலம் தாழ்த்த மாட்டார்.11 எனவே, நீங்கள் கடைப்பிடிக்கும்படி நான் உங்களுக்கு இன்று இடும் கட்டளைகளையும், நியமங்களையும், முறைமைகளையும் நிறைவேற்றுங்கள்.12 இந்த முறைமைகளை நீங்கள் கேட்டு, அவைகளைக் கடைப்பிடித்து நிறைவேற்றுவீர்களாயின் உங்கள் கடவுளாகிய ஆண்டவர் உங்கள் மூதாதையரிடம் ஆணையிட்டுச் செய்த இரக்கத்தின் உடன்படிக்கையைக் காப்பார்.13 அவர் உங்களிடம் அன்பு கூர்வார். உங்களுக்குத் தரப்படுமென்று உங்கள் மூதாதையருக்கு அவர் ஆணையிட்டு வாக்களித்த நாட்டில் உங்களைப் பெருகச் செய்வார். உங்கள் கருவின் கனிகளும், தானியம், திராட்சை இரசம், எண்ணெய் ஆகிய உங்கள் நிலத்தின் விளைவுகளும், உங்கள் கால்நடையின் கன்றுகளும், உங்கள் மந்தையின் குட்டிகளும் பெருகும்படி செய்து ஆசி வழங்குவார்.14 மற்றெல்லா மக்களினங்களையும்விட நீங்கள் ஆசி பெற்றவர்களாய் இருப்பீர்கள். உங்களுக்குள்ளும் உங்கள் கால்நடைகளுக்குள்ளும் ஆணிலும் பெண்ணிலும் மலடு இராது.15 எல்லா நோய்களும் உங்களிடமிருந்து அகலும்படி ஆண்டவர் செய்வார். நீங்கள் அறிந்துள்ள எகிப்தியரின் கொடிய நோய்கள் எல்லாம் உங்களிடையே இல்லாமல் உங்கள்பகைவர் மேல் வரும்படி செய்வார்.16 உங்கள் கடவுளாகிய ஆண்டவர் உங்களிடம் கையளிக்கவிருக்கும் எல்லா மக்களையும் முற்றிலும் அழித்துவிடுங்கள். உங்கள் கண்கள் அவர்களுக்கு இரங்காதிருக்கட்டும். அவர்களின் தெய்வங்களுக்கு நீங்கள் பணிய வேண்டாம். அது உங்களுக்குக் கண்ணியாக ஆகிவிடும்.17 இந்த மக்களினங்கள் எல்லாம் எங்களைவிடத் திரளானவர்களாய் உள்ளதால், அவர்களை விரட்டியடிக்க எங்களால் எப்படி முடியும் என்று உங்கள் உள்ளத்தில் நீங்கள் உரையாடும்போது,18 அவர்களுக்கு நீங்கள் அஞ்ச வேண்டாம். மாறாக, பார்வோனுக்கும் எகிப்தியர் அனைவருக்கும் உங்கள் கடவுளாகிய ஆண்டவர் செய்ததை நினைவில் நிறுத்துங்கள்.19 உங்கள் கண்கள் கண்ட கொடிய வாதைகளையும், உங்களைப் புறப்படும்படி செய்யுமாறு, உங்கள் கடவுளாகிய ஆண்டவர் தம் வலிமைமிகு கரத்தினாலும் ஓங்கிய புயத்தினாலும், புரிந்த அடையாளங்களையும் அருஞ்செயல்களையும் நினைவில் நிறுத்துங்கள்; நீங்கள் அஞ்சுகின்ற எல்லா மக்களினங்களுக்கும் உங்கள் கடவுளாகிய ஆண்டவர் அவ்வாறே செய்வார்.20 அதற்கும் தப்பி, உங்களிடமிருந்து ஓடி ஒளிந்து கொள்பவர்களுக்குள்ளே உங்கள் கடவுளாகிய ஆண்டவர் செங்குளவிகளை அனுப்பி அவர்களை அழிப்பார்.21 அவர்களுக்கு அஞ்சவேண்டாம்; ஏனெனில், உங்கள் கடவுளாகிய ஆண்டவர் உங்களிடையே உள்ளார்; அஞ்சுதற்குரிய ஆற்றல்மிகு கடவுள் அவரே.22 உங்கள் கடவுளாகிய ஆண்டவர் அந்த மக்களை, உங்கள் கண்கள் காண, கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து போகச் செய்வார். உடனடியாக அவர்களை அழித்துவிட வேண்டாம். அப்படிச் செய்தால், உங்களிடையே காட்டு விலங்குகள் பெருகிவிடும்.23 உங்கள் கடவுளாகிய ஆண்டவர் அவர்களை உங்களிடம் கையளிப்பார். அவர்கள் அழிந்துபோகுமட்டும் அவர்களைப் பெரிதாகக் கலங்கடிப்பார்.24 அவர்களின் மன்னர்களையும் உங்களிடம் கையளிப்பார். அவர்களது பெயர் மண்ணினின்று மறைந்து போகச் செய்யுங்கள். நீங்கள் அவர்களை முற்றிலும் அழிக்கும்வரை எந்த மனிதரும் உங்களுக்கு எதிராக நிற்க முடியாது.25 கைவினையான அவர்களின் தெய்வச் சிலைகளைத் தீயில் எரித்து விடுங்கள்; அவைகளின் மேலுள்ள வெள்ளியையோ தங்கத்தையோ நீங்கள் விரும்பவோ உங்களுக்காக எடுக்கவோ வேண்டாம்; ஏனெனில், அவை உங்களுக்குக் கண்ணியாக ஆகிவிடும். அவை உங்கள் கடவுளாகிய ஆண்டவருக்கு அருவருப்பானவை.26 அவைகளைப்போலச் சாபத்துக்கு உள்ளாகாதபடி, அருவருப்பான எதையும் உங்கள் வீட்டுக்குக் கொண்டு வராதிருங்கள், அவைகளை முற்றிலும் அருவருக்கவேண்டும். ஏனெனில், அவை சாபத்துக்கு உள்ளானவை.