Jeremiah 30 in Tamil ERV Compare Tamil Easy Reading Version
1 இதுதான் கர்த்தரிடமிருந்து எரேமியாவிற்கு வந்த வார்த்தை.
2 இஸ்ரவேலரின் தேவனாகிய கர்த்தர் கூறினார்: “எரேமியா நான் உன்னிடம் பேசியிருக்கின்றவற்றையெல்லாம் நீ புத்தகத்தில் எழுது. இப்புத்தகத்தை உனக்காக எழுது.
3 இதைச் செய். ஏனென்றால் நாட்கள் வரும்” என்று கர்த்தர் சொல்லுகிறார். “நான் எனது ஜனங்களை, இஸ்ரவேல் மற்றும் யூதாவை சிறையிருப்பிலிருந்து அழைத்துவரும்போது” இந்த வார்த்தை கர்த்தரிடமிருந்து வருகிறது. “நான் அவர்களது முற்பிதாக்களுக்கு அளித்த நாட்டிற்குள் திரும்பவும் அவர்களைக் குடியேற வைப்பேன். பிறகு, எனது ஜனங்கள் மீண்டும் அந்த நாட்டைச் சொந்தமாக்கிக்கொள்வார்கள்.”
4 இஸ்ரவேல் மற்றும் யூதா ஜனங்களைப்பற்றி கர்த்தர் இச்செய்தியைப் பேசினார்.
5 கர்த்தர் கூறியது இதுதான்: நான் ஜனங்கள் பயத்தால் அலறிக்கொண்டிருப்பதைக் கேட்கிறேன்! ஜனங்கள் பயந்திருக்கின்றனர்! சமாதானம் இல்லை!
6 “இக்கேள்வியைக் கேள். இதனை சிந்தித்துக்கொள். ஒரு ஆண், குழந்தை பெறமுடியுமா? நிச்சயமாக முடியாது! பிறகு ஏன் ஒவ்வொரு பலமுள்ள ஆணும் தம் கையை வயிற்றில், பிரசவ வேதனைப்படுகிற பெண்ணைப்போன்று வைத்திருக்கிறார்கள்? ஏன் ஒவ்வொருவரின் முகமும் மரித்த மனிதனைப் போன்று வெளுப்பாக மாறியுள்ளது? ஏனென்றால், அந்த ஆண்கள் மிகவும் பயந்துள்ளனர்.
7 “இது யாக்கோபுக்கு மிகவும் முக்கியமான நேரம். இது பெருந்துன்பத்திற்கான நேரம். இதுபோல் இன்னொரு நேரம் இராது. ஆனால் யாக்கோபு காப்பாற்றப்படுவான்.
8 “அந்நேரத்தில்”, இந்த வார்த்தை சர்வ வல்லமையுள்ள கர்த்தரிடமிருந்து வந்தது. “நான் இஸ்ரவேல் மற்றும் யூதா ஜனங்களின் கழுத்தில் உள்ள நுகத்தை உடைப்பேன். உங்களைக் கட்டியுள்ள கயிறுகளை அறுப்பேன். அயல்நாடுகளில் உள்ள ஜனங்கள் எனது ஜனங்களை மீண்டும் அடிமையாகும்படி பலவந்தப்படுத்தமாட்டார்கள்.
9 இஸ்ரவேல் மற்றும் யூதா ஜனங்கள் அயல் நாடுகளுக்கு சேவை செய்யமாட்டார்கள். இல்லை, அவர்கள் தமது தேவனாகிய கர்த்தருக்கு சேவைசெய்வார்கள். அவர்கள் தமது அரசனான தாவீதுக்கு சேவைசெய்வார்கள். நான் அந்த அரசனை அவர்களிடம் அனுப்புவேன்.
10 “எனவே, எனது தாசனாகிய யாக்கோபுவே, பயப்படவேண்டாம்!” இந்த வார்த்தை கர்த்தரிடமிருந்து வருகிறது. “இஸ்ரவேலே, பயப்படவேண்டாம். நான் உன்னை தொலைதூர இடத்திலிருந்து காப்பாற்றுவேன். நீங்கள் தொலைதூர நாடுகளில் கைதிகளாக இருந்தீர்கள். ஆனால் உங்கள் சந்ததிகளை நான் காப்பாற்றுவேன். நான் அவர்களை சிறையிருப்பிலிருந்து மீண்டும் அழைத்து வருவேன். யாக்கோபுக்கு மீண்டும் சமாதானம் உண்டாகும். ஒரு எதிரியும் அவனை இனி தொந்தரவு செய்யவோ பயப்படுத்தவோமாட்டான். ஆதலால் அவன் பத்திரமாகவும் பாதுகாப்பாகவும் இருப்பான்.
11 இஸ்ரவேல் மற்றும் யூதா ஜனங்களே, நான் உங்களோடு இருக்கிறேன்” இந்த வார்த்தை கர்த்தரிடமிருந்து வருகிறது “நான் உங்களைக் காப்பேன். நான் அந்நாடுகளுக்கு உங்களை அனுப்பினேன். ஆனால் நான் அந்நாடுகளை முழுமையாக அழிப்பேன். இது உண்மை. நான் அந்நாடுகளை அழிப்பேன். ஆனால் உங்களை அழிக்கமாட்டேன். நீங்கள் செய்த தீயவற்றுக்காக நீங்கள் தண்டிக்கப்பட வேண்டும் ஆனால் நான் சரியாக உங்களை ஒழுங்குப்படுத்துவேன்.”
12 கர்த்தர் கூறுகிறார்: “இஸ்ரவேல் மற்றும் யூதா ஜனங்களே! ஆற்ற முடியாத காயத்தை நீங்கள் பெற்றிருக்கிறீர்கள். குணப்படுத்த முடியாத ஒரு காயத்தைப் பெற்றிருக்கிறீர்கள்.
13 உங்கள் புண்களைப்பற்றி அக்கறை எடுக்க யாருமில்லை. எனவே நீங்கள் குணம் பெறமாட்டீர்கள்.
14 நீங்கள் பல நாடுகளோடு நட்புக்கொண்டீர்கள். ஆனால் அந்நாடுகள் உங்களைப்பற்றி கவலைப்படுவதில்லை. உங்கள் ‘நண்பர்கள்’ உங்களை மறந்துவிட்டனர். நான் உங்களைப் பகைவனைப் போன்று தண்டித்தேன். நான் உங்களை மிகக் கடுமையாகத் தண்டித்தேன். உங்களது அநேக குற்றங்களால் நான் இதனைச் செய்தேன். உங்களது எண்ணிலடங்கா பாவங்களால் நான் இதனைச் செய்தேன்.
15 இஸ்ரவேல் மற்றும் யூதாவே, உங்களது காயங்களைப்பற்றி ஏன் அழுகிறீர்கள்? உங்கள் காயங்கள் வலியுடையன. அவற்றுக்கு மருந்து இல்லை. கர்த்தராகிய நான் இதனைச் செய்தேன். காரணம் உங்கள் பெரும் குற்றம்தான். உங்களது பல பாவங்களின் காரணமாக கர்த்தராகிய நான் இதனைச் செய்தேன்.
16 அந்நாடுகள் உங்களை அழித்தனர். ஆனால் இப்பொழுது அந்நாடுகள் அழிக்கப்பட்டிருக்கின்றன. இஸ்ரவேல் மற்றும் யூதாவே, உங்கள் பகைவர்கள் கைதிகளாவார்கள். அந்த ஜனங்கள் உங்களிடமிருந்து திருடினார்கள். ஆனால் அவர்களிடமிருந்து மற்றவர்கள் திருடுவார்கள். அந்த ஜனங்கள் போரில் உங்களிடமிருந்து பொருட்களை எடுத்துக் கொண்டனர். ஆனால் போரில் பிறர் அவர்களை கொள்ளையடிப்பார்கள்.
17 நான் உங்களது உடல் நலத்தைத் திரும்ப கொண்டு வருவேன். நான் உங்களது காயங்களைக் குணப்படுத்துவேன்” என்று கர்த்தர் சொல்லுகிறார். “ஏனென்றால், மற்ற ஜனங்கள் உங்களை தள்ளுண்டவர்கள் என்று சொன்னார்கள். அந்த ஜனங்கள் ‘சீயோனைப்பற்றி யாரும் அக்கறைகொள்ளமாட்டார்கள்’” என்று சொன்னார்கள்.
18 கர்த்தர் கூறுகிறார்: “யாக்கோபின் ஜனங்கள் இப்போது சிறையிருப்பில் இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் திரும்ப வருவார்கள். யாக்கோபின் வீடுகளில் நான் இரக்கம்கொள்வேன். இப்பொழுது நகரம் காலியான குன்றுபோல அழிந்த கட்டிடங்களோடு இருக்கின்றது. ஆனால் நகரம் மீண்டும் கட்டப்படும். அரசனின் வீடும் மீண்டும் எங்கிருக்க வேண்டுமோ அங்கே கட்டப்படும்.
19 அவ்விடங்களில் உள்ள ஜனங்கள் துதிப்பாடல்களைப் பாடுவார்கள். அங்கே சந்தோஷத்தின் ஆரவார ஓசை இருக்கும். நான் அவர்களுக்குப் பல குழந்தைகளைக் கொடுப்பேன். இஸ்ரவேல் மற்றும் யூதா சிறியவை ஆகாது. நான் அவர்களுக்கு மேன்மையை கொண்டுவருவேன். எவரும் அதனை கீழாகப் பார்க்கமுடியாது.
20 யாக்கோபுவின் குடும்பம் முன்பு இஸ்ரவேல் குடும்பம் இருந்ததுபோல ஆகும். நான் இஸ்ரவேல் மற்றும் யூதாவை பலமுள்ளதாக்குவேன். அவர்களைப் புண்படுத்தியவர்களை நான் தண்டிப்பேன்.
21 அந்த ஜனங்களின் சொந்தத்தில் ஒருவனே அவர்களை வழிநடத்திச் செல்வான். அந்த அரசன் எனது ஜனங்களிடமிருந்து வருவான். ஜனங்களை நான் அழைத்தால் அவர்கள் நெருக்கமாக வரமுடியும். எனவே, நான் அந்தத் தலைவனை என் அருகில் வரச்சொல்லுவேன். அவன் எனக்கு நெருக்கமாக வருவான்.
22 நீங்கள் எனது ஜனங்களாக இருப்பீர்கள். நான் உங்களது தேவனாக இருப்பேன்.”
23 “கர்த்தர் மிகவும் கோபமாக இருந்தார்! அவர் ஜனங்களைத் தண்டித்தார். அத்தண்டனைப் புயலைப்போன்று வந்தது. அத்தீய ஜனங்களுக்கு எதிராகத் தண்டனையானது பெருங்காற்றாக அடித்தது.
24 கர்த்தர் அந்த ஜனங்களைத் தண்டித்து முடிக்கும்வரை கோபமாக இருப்பார். கர்த்தர் திட்டமிட்டபடி தனது தண்டனையை முடிக்கும்வரை அவர் கோபமாக இருப்பார். அந்தக் கால முடிவில் யூதா ஜனங்களாகிய நீங்கள் புரிந்துக்கொள்வீர்கள்.”