Leviticus 1 in Tamil ERV Compare Tamil Easy Reading Version
1 தேவனாகிய கர்த்தர் மோசேயைக் கூப்பிட்டு ஆசாரிப்புக் கூடாரத்திலிருந்து அவனிடம்,
2 “நீ இஸ்ரவேல் ஜனங்களிடம் கூற வேண்டியதாவது: நீங்கள் கர்த்தருக்குப் பலி செலுத்த வரும்பொழுது அப்பலி உங்கள் மந்தையில் உள்ள பசுவாகவோ, ஆடாகவோ அல்லது வெள்ளாடாகவோ இருக்கலாம்.
3 “ஒருவன் தனக்குச் சொந்தமான மாடுகளில் ஒன்றைத் தகனபலியாகச் செலுத்த விரும்பினால் அது எவ்விதமான குறையுமற்ற காளையாக இருக்க வேண்டும். அந்தக் காளையை அவன் ஆசாரிப்புக் கூடார வாசலுக்குக் கொண்டு வர வேண்டும். பிறகு கர்த்தர் அதனை ஏற்றுக்கொள்வார்.
4 அம்மிருகம் பலியிடப்படும்போது அவன் அதன் தலையில் தன் கைகளை வைக்க வேண்டும். அந்த மனிதன் பரிசுத்தம் அடைவதற்கான விலையாகக் கர்த்தர் அதனை ஏற்றுக்கொள்வார்.
5 “அவன் அந்த இளம் காளையை கர்த்தருக்கு முன்பாகக் கொல்ல வேண்டும். பிறகு ஆரோனின் மகன்களாகிய ஆசாரியர்கள் அதன் இரத்தத்தை எடுத்து ஆசரிப்புக் கூடாரத்தின் வாசலில் உள்ள பலிபீடத்தின் மேலும், அதைச் சுற்றிலும் தெளிக்க வேண்டும்.
6 அம்மிருகத்தின் தோலை வெட்டிய பிறகு ஆசாரியன் மிருகத்தை துண்டு துண்டாக வெட்டவேண்டும்.
7 ஆரோனின் மகன்களாகிய ஆசாரியர்கள் பலிபீடத்தில் நெருப்பிட்டு கட்டைகளை அடுக்கி
8 துண்டுகளை (மிருகத்தின் தலையையும் கொழுப்பையும்) பலிபீடத்தின் மேலுள்ள நெருப்பிலுள்ள கட்டைகளின்மேல் அடுக்கி வைக்க வேண்டும்.
9 பின் அதன் கால்களையும் உட்பகுதிகளையும் தண்ணீரால் கழுவவேண்டும். அதன் அனைத்துப் பகுதிகளையும் பலிபீடத்தின் மேல் நெருப்பில் எரிக்க வேண்டும். இது நெருப்பாலான தகனபலி. இதன் வாசனை கர்த்தருக்கு விருப்பமானதாக இருக்கும்.
10 “ஒருவன் தன் ஆட்டு மந்தையிலிருந்து ஒரு வெள்ளாட்டையோ அல்லது செம்மறியாட்டையோ நெருப்பிலிட்டு தகன பலியிட விரும்பினால் அது ஆண் மிருகமாக இருக்க வேண்டும். அதில் எவ்விதக் குறைபாடும் இருக்கக் கூடாது.
11 அதனைக் கர்த்தருக்கு முன்பு பலி பீடத்தின் வடக்குத் திசையில் வைத்துக் கொல்லவேண்டும். ஆரோனின் மகன்களாகிய ஆசாரியர்கள் அதன் இரத்தத்தைப் பலிபீடத்தின் மேல் சுற்றிலும் தெளிக்க வேண்டும்.
12 பிறகு அம்மிருகத்தை ஆசாரியன் வெட்டித் துண்டாக்க வேண்டும். அவன் அந்தத் துண்டுகளை (தலை மற்றும் கொழுப்பு) பலிபீடத்திலுள்ள நெருப்பின் மேலுள்ள கட்டைகளின் மேல் வைக்க வேண்டும்.
13 அதன் கால்களையும், உட்பாகத்தையும் ஆசாரியர்கள் தண்ணீரால் கழுவ வேண்டும். பிறகு துண்டாக வெட்டப்பட்ட மிருகத்தின் எல்லா பாகங்களையும் பலிபீடத்தில் வைத்து எரிக்க வேண்டும். இது நெருப்பால் செய்யப்படுகிற தகனபலி. இதன் வாசனை கர்த்தருக்கு விருப்பமானதாக இருக்கும்.
14 “எவராவது ஒரு பறவையைக் கர்த்தருக்குப் பலியிட விரும்பினால் புறாவையாவது, இளம் புறாக்குஞ்சையாவது தேர்ந்தெடுக்க வேண்டும்.
15 ஆசாரியன் அதனைப் பலிபீடத்திற்கு கொண்டு வந்து, அதன் தலையை கிள்ளி பலிபீடத்தில் எரிக்க வேண்டும். அப்பறவையின் இரத்தம் பலிபீடத்தின் பக்கத்தில் சிந்த வேண்டும்.
16 ஆசாரியன் அப்பறவையின் இரைப்பையையும், முடிகளையும் அகற்றி பலிபீடத்தின் கிழக்குப் பக்கமாக எறிய வேண்டும். அங்கேதான் பலிபீடத்தின் சாம்பலைப் போடுவார்கள்.
17 ஆசாரியன் அதன் சிறகுகளை இரண்டாகப் பிளந்துவிடாமல் கவனமுடன் கிழிக்க வேண்டும். பிறகு அப்பறவையைப் பலிபீடத்தில் கட்டைகளின் மேல் வைத்து எரிக்க வேண்டும். இது நெருப்பினால் செய்யப்படுகிற தகன பலி. இதன் வாசனை கர்த்தருக்கு விருப்பமானதாக இருக்கும்.”