அப்போஸ்தலர் 2

fullscreen1 பெந்தெகொஸ்தே என்னும் நாள் வந்தபோது, அவர்களெல்லாரும் ஒருமனப்பட்டு ஓரிடத்திலே வந்திருந்தார்கள்.

fullscreen2 அப்பொழுது பலத்த காற்று அடிக்கிற முழக்கம் போல, வானத்திலிருந்து சடிதியாய் ஒரு முழக்கமுண்டாகி, அவர்கள் உட்கார்ந்திருந்த வீடு முழுவதையும் நிரப்பிற்று.

fullscreen3 அல்லாமலும் அக்கினிமயமான நாவுகள்போலப் பிரிந்திருக்கும் நாவுகள் அவர்களுக்குக் காணப்பட்டு அவர்கள் ஒவ்வொருவர்மேலும் வந்து அமர்ந்தது.

fullscreen4 அவர்களெல்லாரும் பரிசுத்த ஆவியினாலே நிரப்பப்பட்டு, ஆவியானவர் தங்களுக்குத் தந்தருளின வரத்தின்படியே வெவ்வேறு பாஷைகளிலே பேசத்தொடங்கினார்கள்.

fullscreen5 வானத்தின் கீழிருக்கிற சகல தேசத்தாரிலுமிருந்துவந்த தேவபக்தியுள்ள யூதர்கள் அப்பொழுது எருசலேமிலே வாசம்பண்ணினார்கள்.

fullscreen6 அந்தச் சத்தம் உண்டானபோது, திரளான ஜனங்கள் கூடிவந்து, தங்கள் தங்கள் பாஷையிலே அவர்கள் பேசுகிறதை அவரவர்கள் கேட்டபடியினாலே கலக்கமடைந்தார்கள்.

fullscreen7 எல்லாரும் பிரமித்து ஆச்சரியப்பட்டு, ஒருவரையொருவர் பார்த்து: இதோ, பேசுகிற இவர்களெல்லாரும் கலிலேயரல்லவா?

fullscreen8 அப்படியிருக்க நம்மில் அவரவர்களுடைய ஜென்மபாஷைகளிலே இவர்கள் பேசக் கேட்கிறோமே, இதெப்படி?

fullscreen9 பார்த்தரும், மேதரும், எலாமீத்தரும், மெசொப்பொத்தாமியா, யூதேயா, கப்பத்தோக்கியா, பொந்து, ஆசியா, பிரிகியா,

fullscreen10 பம்பிலியா, எகிப்து என்னும் தேசத்தார்களும், சிரேனே பட்டணத்தைச் சுற்றியிருக்கிற லிபியாவின் திசைகளிலே குடியிருக்கிறவர்களும், இங்கே சஞ்சரிக்கிற ரோமாபுரியாரும், யூதரும், யூதமார்க்கத்தமைந்தவர்களும்,

fullscreen11 கிரேத்தரும், அரபியருமாகிய நாம் நம்முடைய பாஷைகளிலே இவர்கள் தேவனுடைய மகத்துவங்களைப் பேசக்கேட்கிறோமே என்றார்கள்.

fullscreen12 எல்லாரும் பிரமித்துச் சந்தேகப்பட்டு, இதென்னமாய் முடியுமோ என்று ஒருவரோடொருவர் சொல்லிக்கொண்டார்கள்.

fullscreen13 மற்றவர்களோ: இவர்கள் மதுபானத்தினால் நிறைந்திருக்கிறார்களென்று பரியாசம்பண்ணினார்கள்.

fullscreen14 அப்பொழுது பேதுரு பதினொருவரோடுங்கூட நின்று, அவர்களை நோக்கி: உரத்த சத்தமாய்: யூதர்களே, எருசலேமில் வாசம்பண்ணுகிற ஜனங்களே, நீங்களெல்லாரும் அறிந்துகொள்வீர்களாக, என் வார்த்தைகளுக்குச் செவிகொடுங்கள்.

fullscreen15 நீங்கள் நினைக்கிறபடி இவர்கள் வெறிகொண்டவர்களல்ல, பொழுது விடிந்து மூன்றாம் மணி வேளையாயிருக்கிறதே.

fullscreen16 தீர்க்கதரிசியாகிய யோவேலினால் உரைக்கப்பட்டபடியே இது நடந்தேறுகிறது.

fullscreen17 கடைசிநாட்களில் நான் மாம்சமான யாவர்மேலும் என் ஆவியை ஊற்றுவேன், அப்பொழுது உங்கள் குமாரரும் உங்கள் குமாரத்திகளும் தீர்க்கதரிசனஞ்சொல்லுவார்கள்; உங்கள் வாலிபர் தரிசனங்களை அடைவார்கள்; உங்கள் மூப்பர் சொப்பனங்களைக் காண்பார்கள்;

fullscreen18 என்னுடைய ஊழியக்காரர்மேலும், என்னுடைய ஊழியக்காரிகள்மேலும் அந்நாட்களில் என் ஆவியை ஊற்றுவேன், அப்பொழுது அவர்கள் தீர்க்கதரிசனஞ் சொல்லுவார்கள்.

fullscreen19 அல்லாமலும் உயர வானத்திலே அற்புதங்களையும், தாழ பூமியிலே இரத்தம், அக்கினி, புகைக்காடாகிய அதிசயங்களையும் காட்டுவேன்.

fullscreen20 கர்த்தருடைய பெரிதும் பிரகாசமுமான நாள் வருமுன்னே சூரியன் இருளாகவும், சந்திரன் இரத்தமாகவும் மாறும்.

fullscreen21 அப்பொழுது கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொள்ளுகிறவனெவனோ அவன் இரட்சிக்கப்படுவான் என்று தேவன் உரைத்திருக்கிறார்.

fullscreen22 இஸ்ரவேலரே, நான் சொல்லும் வார்த்தைகளைக் கேளுங்கள்; நீங்கள் அறிந்திருக்கிறபடி நசரேயனாகிய இயேசுவைத் தேவன் உங்களுக்குள்ளே பலத்த செய்கைகளையும், அற்புதங்களையும், அடையாளங்களையும் நடப்பித்து, அவைகளினாலே அவரை உங்களுக்கு வெளிப்படுத்தினார்.

fullscreen23 அப்படியிருந்தும், தேவன் நிர்ணயித்திருந்த ஆலோசனையின்படியேயும், அவருடைய முன்னறிவின்படியேயும் ஒப்புக்கொடுக்கப்பட்ட அந்த இயேசுவை நீங்கள் பிடித்து, அக்கிரமக்காரருடைய கைகளினாலே சிலுவையில் ஆணியடித்துக் கொலைசெய்தீர்கள்.

fullscreen24 தேவன் அவருடைய மரண உபாதிகளின் கட்டை அவிழ்த்து, அவரை எழுப்பினார்; அவர் மரணத்தினால் கட்டப்பட்டிருக்கக்கூடாதிருந்தது.

fullscreen25 அவரைக்குறித்துத் தாவீது: கர்த்தரை எப்பொழுதும் எனக்குமுன்பாக நிறுத்தி நோக்கிக்கொண்டிருக்கிறேன்; நான் அசைக்கப்படாதபடி அவர் என் வலதுபாரிசத்திலே இருக்கிறார்;

fullscreen26 அதினாலே என் இருதயம் மகிழ்ந்தது, என் நாவு களிகூர்ந்தது, என் மாம்சமும் நம்பிக்கையோடே தங்கியிருக்கும்;

fullscreen27 என் ஆத்துமாவைப் பாதாளத்தில் விடீர், உம்முடைய பரிசுத்தர் அழிவைக்காணவொட்டீர்;

fullscreen28 ஜீவமார்க்கங்களை எனக்குத் தெரியப்படுத்தினீர்; உம்முடைய சந்நிதானத்திலே என்னைச் சந்தோஷத்தினால் நிரப்புவீர் என்று சொல்லுகிறான்.

fullscreen29 சகோதரரே, கோத்திரத் தலைவனாகிய தாவீதைக்குறித்து நான் உங்களுடனே தைரியமாய்ப் பேசுகிறதற்கு இடங்கொடுங்கள்; அவன் மரணமடைந்து அடக்கம்பண்ணப்பட்டான்; அவனுடைய கல்லறை இந்நாள்வரைக்கும் நம்மிடத்திலிருக்கிறது.

fullscreen30 அவர் தீர்க்கதரிசியாயிருந்து: உன் சிங்காசனத்தில் வீற்றிருக்க மாம்சத்தின்படி உன் சந்ததியிலே கிறிஸ்துவை எழும்பப்பண்ணுவேன் என்று தேவன் தனக்குச் சத்தியம்பண்ணினதை அறிந்தபடியினால்,

fullscreen31 அவன் கிறிஸ்துவினுடைய ஆத்துமா பாதாளத்திலே விடப்படுவதில்லையென்றும், அவருடைய மாம்சம் அழிவைக் காண்பதில்லையென்றும் முன்னறிந்து, அவர் உயிர்த்தெழுதலைக்குறித்து இப்படிச் சொன்னான்.

fullscreen32 இந்த இயேசுவை தேவன் எழுப்பினார்; இதற்கு நாங்களெல்லாரும் சாட்சிகளாயிருக்கிறோம்.

fullscreen33 அவர் தேவனுடைய வலதுகரத்தினாலே உயர்த்தப்பட்டு, பிதா அருளிய வாக்குத்தத்தத்தின்படி பரிசுத்த ஆவியைப் பெற்று, நீங்கள் இப்பொழுது காண்கிறதும் கேட்கிறதுமாகிய இதைப் பொழிந்தருளினார்.

fullscreen34 தாவீது பரலோகத்திற்கு எழுந்துபோகவில்லையே. நான் உம்முடைய சத்துருக்களை உமக்குப் பாதபடியாக்கிப்போடும் வரைக்கும்,

fullscreen35 நீர் என் வலதுபாரிசத்தில் உட்காருமென்று கர்த்தர் என் ஆண்டவருடனே சொன்னார் என்று அவனே சொல்லியிருக்கிறான்.

fullscreen36 ஆகையினால், நீங்கள் சிலுவையில் அறைந்த இந்த இயேசுவையே தேவன் ஆண்டவரும் கிறிஸ்துவுமாக்கினாரென்று இஸ்ரவேல் குடும்பத்தார் யாவரும் நிச்சயமாய் அறியக்கடவர்கள் என்றான்.

fullscreen37 இதை அவர்கள் கேட்டபொழுது, இருதயத்திலே குத்தப்பட்டவர்களாகி, பேதுருவையும் மற்ற அப்போஸ்தலரையும் பார்த்து. சகோதரரே, நாங்கள் என்ன செய்யவேண்டும் என்றார்கள்.

fullscreen38 பேதுரு அவர்களை நோக்கி: நீங்கள் மனந்திரும்பி, ஒவ்வொருவரும் பாவமன்னிப்புக்கென்று இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் பெற்றுக்கொள்ளுங்கள், அப்பொழுது பரிசுத்த ஆவியின் வரத்தைப் பெறுவீர்கள்.

fullscreen39 வாக்குத்தத்தமானது உங்களுக்கும், உங்கள் பிள்ளைகளுக்கும், நம்முடைய தேவனாகிய கர்த்தர் வரவழைக்கும் தூரத்திலுள்ள யாவருக்கும் உண்டாயிருக்கிறது என்று சொல்லி;

fullscreen40 இன்னும் அநேக வார்த்தைகளாலும் சாட்சிகூறி, மாறுபாடுள்ள இந்தச் சந்ததியை விட்டு விலகி உங்களை இரட்சித்துக்கொள்ளுங்கள் என்றும் புத்திசொன்னான்.

fullscreen41 அவனுடைய வார்த்தையைச் சந்தோஷமாய் ஏற்றுக்கொண்டவர்கள் ஞானஸ்நானம் பெற்றார்கள். அன்றையத்தினம் ஏறக்குறைய மூவாயிரம்பேர் சேர்த்துக்கொள்ளப்பட்டார்கள்.

fullscreen42 அவர்கள் அப்போஸ்தலருடைய உபதேசத்திலும், அந்நியோந்நியத்திலும், அப்பம் பிட்குதலிலும், ஜெபம்பண்ணுதலிலும் உறுதியாய்த் தரித்திருந்தார்கள்.

fullscreen43 எல்லாருக்கும் பயமுண்டாயிற்று. அப்போஸ்தலர்களாலே அநேக அற்புதங்களும் அடையாளங்களும் செய்யப்பட்டது.

fullscreen44 விசுவாசிகளெல்லாரும் ஒருமித்திருந்து, சகலத்தையும் பொதுவாய் வைத்து அநுபவித்தார்கள்.

fullscreen45 காணியாட்சிகளையும் ஆஸ்திகளையும் விற்று, ஒவ்வொருவனுக்கும் தேவையானதற்குத்தக்கதாக அவைகளில் எல்லாருக்கும் பகிர்ந்து கொடுத்தார்கள்.

fullscreen46 அவர்கள் ஒருமனப்பட்டவர்களாய் தேவாலயத்திலே அநுதினமும் தரித்திருந்து, வீடுகள்தோறும் அப்பம்பிட்டு மகிழ்ச்சியோடும் கபடமில்லலாத இருதயத்தோடும் போஜனம்பண்ணி,

fullscreen47 தேவனைத் துதித்து, ஜனங்களெல்லாரிடத்திலும் தயவுபெற்றிருந்தார்கள். இரட்சிக்கப்படுகிறவர்களைக் கர்த்தர் அநுதினமும் சபையிலே சேர்த்துக்கொண்டு வந்தார்.