Amos 2 in Tamil ERV Compare Tamil Easy Reading Version
1 கர்த்தர் இவற்றைக் கூறுகிறார்: “நான் நிச்சயமாக மோவாப் ஜனங்களை அவர்கள் செய்த பல குற்றங்களுக்காகத் தண்டிப்பேன். ஏனென்றால் மோவாபியர், ஏதோம் அரசனின் எலுப்புகளைச் சுண்ணாம்பில் எரித்தார்கள்.
2 எனவே நான் மோவாப் நாட்டில் நெருப்பைப் பற்றவைப்பேன். அந்த நெருப்பு கீரியோத்தின் உயர்ந்த கோபுரங்களை அழிக்கும். அங்கே பயங்கர சத்தமும் எக்காளச் சத்தமும் கேட்க அவர்கள் மரிபார்கள்.
3 எனவே நான் மோவாபின் அரசர்களுக்கு ஒரு முடிவைக் கொண்டுவருவேன். நான் மோவாபின் அனைத்துத் தலைவர்களையும் கொல்வேன்” கர்த்தர் இதனைக் கூறினார்.
4 கர்த்தர் இவற்றைக் கூறுகிறார்: “நான் நிச்சயமாக யூதாவை அவர்களது பல குற்றங்களுக்காகத் தண்டிப்பேன். ஏனென்றால் அவர்கள் கர்த்தருடைய கட்டளைகளுக்கு அடிபணிய மறுத்தார்கள். அவர்கள் அவரது கட்டளைகளைக் கைக்கொள்ளவில்லை. அவர்கள் முற்பிதாக்கள் பொய்களை நம்பினார்கள். அதே பொய்கள் யூதாவின் ஜனங்கள் தேவனைப் பின்பற்றுவதை நிறுத்தக் காரணமாயிருந்தது.
5 எனவே. நான் யூதாவில் நெருப்பை பற்றவைப்பேன். அந்த நெருப்பு எருசலேமிலுள்ள உயர்ந்த கோபுரங்களை அழிக்கும்.”
6 கர்த்தர் இதனைக் கூறுகிறார்: “நான் நிச்சயமாக இஸ்ரவேலர்களை அவர்களது பல குற்றறங்களுக்காகத் தண்டிப்பேன். ஏனென்றால் அவர்கள் கொஞ்சம் வெள்ளிக்காக அப்பாவி ஜனங்களை விற்றார்கள். அவர்கள் ஏழை ஜனங்களை பாதரட்சைளுக்காக விற்றார்கள்.
7 அவர்கள் ஏழை ஜனங்களை முகம் குப்புற தரையில் தள்ளி அவர்கள் மேல் நடந்தார்கள். அவர்கள் துன்பப்படுகிற ஜனங்களின் சத்தத்தைக் கேட்பதை நிறுத்தினர். தந்தைகளும் மகன்களும் ஒரே பெண்ணிடம் பாலினஉறவு கொள்கிறார்கள். அவர்கள் எனது பரிசுத்தமான நாமத்தை பாழாக்கி விட்டார்கள்.
8 அவர்கள் ஏழைகளிடமிருந்து ஆடைகளை எடுத்து அந்த ஆடைகளின் மேல் உட்கார்ந்து அவர்கள் பலிபீடங்களில் ஆராதிக்கிறார்கள். அவர்கள் ஏழை ஜனங்களுக்கு கடன் தந்து அவர்கள் ஆடைகளை அடைமானமாக எடுத்தார்கள். அவர்கள் ஜனங்கள் அபராதம் செலுத்தும்படிச் செய்தார்கள். அப்பணத்தில் மது வாங்கி அவர்கள் பொய் தெய்வத்தின் கோயிலில் குடித்து மகிழ்ந்தார்கள்.
9 “ஆனால் அவர்களுக்கு முன்பாகவே எமோரியர்களை அழித்தது நான். எமோரியர்கள் கேதுரு மரங்களைப்போன்று உயரமானவர்கள். அவர்கள் கர்வாலிமரங்களைப்போல்வைரமாயிருந்தவர்கள். ஆனால் நான் அவர்களது மேலே உள்ள பழங்களையும்கீழேயுள்ளவேர்களையும்அழித்தேன்.
10 “நானே உங்களை எகிப்து நாட்டின் அடிமைத்தனத்திலிருந்து மீட்டு வந்தேன். நான் 40 வருடங்கள் உங்களை வானந்தரத்தில் வழிநடத்தினேன். நீங்கள் எமோரியரின் நாட்டை எடுத்துக்கொள்ள உதவினேன்.
11 நான் உங்கள் மகன்களில் சிலரைத் தீர்க்கதரிசிகள் ஆக்கினேன். நான் உங்களது இளைஞர்களில் சிலரை நசரேயர்களாக ஆக்கினேன். இஸ்ரவேல் ஜனங்களே, இது உண்மை” என்று கர்த்தர் சொல்லுகிறார்.
12 “ஆனால் நீங்கள் நசரேயர்களை மது குடிக்கச் செய்தீர்கள். நீங்கள் தீர்க்கதரிசிகளை தீர்க்கதரிசனம் சொல்லவேண்டாம் என்று சொன்னீர்கள்.
13 நீங்கள் எனக்குப் பெரிய பாரத்தைப் போன்றவர்கள். நான் பாரம் ஏற்றப்பட்ட வண்டியைப்போன்று வளைந்திருக்கிறேன்.
14 என்னிடமிருந்து எவரும், வேகமான ஒட்டக்காரன் கூடத் தப்பிக்க முடியாது. பலவான்களுக்குப் போதுமான பலம் இருக்காது. படைவீரர்கள் தம்மைத்தாம் காப்பாற்றிக்கொள்ள முடியாது.
15 ஜனங்கள் வில்லோடும் அம்போடும் இருந்தும் உயிர் பிழைப்பதில்லை. வேகமாக ஓடுபவனும் தப்ப முடியாது. குதிரையில் வருகிறவர்களும் உயிரோடு தப்ப முடியாது.
16 அப்போது மிகத் தைரியமான வீரனும் ஓடிப்போவான். அவர்கள் தம் ஆடைகளை அணிந்துகொள்ளக் கூட நேரம் எடுத்துக்கொள்ளமாட்டார்கள்” என்று கர்த்தர் கூறினார்.