ஏசாயா 59

fullscreen1 இதோ, இரட்சிக்கக் கூடாதடிக்குக் கர்த்தருடைய கை குறுகிப்போகவுமில்லை; கேட்கக் கூடாதபடிக்கு அவருடைய செவி மந்தமாகவுமில்லை.

fullscreen2 உங்கள் அக்கிரமங்களே உங்களுக்கும் உங்கள் தேவனுக்கும் நடுவாகப் பிரிவினை உண்டாக்குகிறது; உங்கள் பாவங்களே அவர் உங்களுக்குச் செவிகொடாதபடிக்கு அவருடைய முகத்தை உங்களுக்கு மறைக்கிறது.

fullscreen3 ஏனென்றால், உங்கள் கைகள் இரத்தத்தாலும், உங்கள் விரல்கள் அக்கிரமத்தாலும், கறைப்பட்டிருக்கிறது, உங்கள் உதடுகள் பொய்யைப் பேசி, உங்கள் நாவு நியாயக்கேட்டை வசனிக்கிறது.

fullscreen4 நீதியைத் தேடுகிறவனுமில்லை, சத்தியத்தின்படி வழக்காடுகிறவனுமில்லை; மாயையை நம்பி, அபத்தமானதைப் பேசுகிறார்கள்; தீமையைக் கர்ப்பந்தரித்து, அக்கிரமத்தைப் பெறுகிறார்கள்.

fullscreen5 கட்டுவிரியனின் முட்டைகளை அடைகாத்து, சிலந்தியின் நெசவுகளை நெய்கிறார்கள்; அவைகளின் முட்டைகளைச் சாப்பிடுகிறவன் சாவான்; அவைகள் நெருக்கப்பட்டதேயானால் விரியன் புறப்படும்.

fullscreen6 அவைகளின் நெசவுகள் வஸ்திரங்களுக்கேற்றவைகள் அல்ல; தங்கள் கிரியைகளாலே தங்களை மூடிக்கொள்ளமாட்டார்கள்; அவர்கள் கிரியைகள் அக்கிரமக்கிரியைகள்; கொடுமையான செய்கை அவர்கள் கைகளிலிருக்கிறது.

fullscreen7 அவர்கள் கால்கள் பொல்லாப்புச் செய்ய ஓடி, குற்றமில்லாத இரத்தத்தைச் சிந்தத் தீவிரிக்கிறது, அவர்கள் நினைவுகள் அக்கிரமநினைவுகள்; பாழ்க்கடிப்பும் அழிவும் அவர்கள் வழிகளிலிருக்கிறது.

fullscreen8 சமாதான வழியை அறியார்கள்; அவர்கள் நடைகளில் நியாயமில்லை; தங்கள் பாதைகளைத் தாங்களே கோணலாக்கிக்கொண்டார்கள்; அவைகளில் நடக்கிற ஒருவனும் சமாதானத்தை அறியான்.

fullscreen9 ஆதலால், நியாயம் எங்களுக்குத் தூரமாயிருக்கிறது, நீதி எங்களைத் தொடர்ந்து பிடிக்காது; வெளிச்சத்துக்குக் காத்திருந்தோம், இதோ, இருள்; பிரகாசத்துக்குக் காத்திருந்தோம், ஆனாலும் அந்தகாரத்திலே நடக்கிறோம்.

fullscreen10 நாங்கள் குருடரைப்போல் சுவரைப் பிடித்து, கண்ணில்லாதவர்களைப்போல் தடவுகிறோம்; இரவில் இடறுகிறதுபோலப் பட்டப்பகலிலும் இடறுகிறோம்; செத்தவர்களைப்போல் பாழிடங்களில் இருக்கிறோம்.

fullscreen11 நாங்கள் அனைவரும் கரடிகளைப்போல உறுமி, புறாக்களைப்போலக் கூவிக்கொண்டிருக்கிறோம், நியாயத்துக்குக் காத்திருந்தோம், அதைக்காணோம்; இரட்சிப்புக்குக் காத்திருந்தோம், அது எங்களுக்குத் தூரமாயிற்று.

fullscreen12 எங்கள் மீறுதல்கள் உமக்கு முன்பாக மிகுதியாயிருந்து, எங்கள் பாவங்கள் எங்களுக்கு விரோதமாய்ச் சாட்சிசொல்லுகிறது, எங்கள் மீறுதல்கள் எங்களோடே இருக்கிறது; எங்கள் அக்கிரமங்களை அறிந்திருக்கிறோம்.

fullscreen13 கர்த்தருக்கு விரோதமாய்த் துரோகம்பண்ணி, பொய்பேசி, எங்கள் தேவனைவிட்டுப் பின்வாங்கினோம்; கொடுமையாகவும் கலகமாகவும் பேசினோம்; கள்ளவார்த்தைகளைக் கர்ப்பந்தரித்து, இருதயத்திலிருந்து பிறப்பிக்கப்பண்ணினோம்.

fullscreen14 நியாயம் பின்னிட்டு அகன்றது; நீதி தூரமாய் நின்றது; சத்தியம் வீதியிலே இடறி, யதார்த்தம் வந்து சேரமாட்டாமற்போகிறது.

fullscreen15 சத்தியம் தள்ளுபடியாயிற்று; பொல்லாப்பை விட்டு விலகுகிறவன் கொள்ளையாகிறான்; இதைக் கர்த்தர் பார்த்து நியாயமில்லையென்று விசனமுள்ளவரானார்.

fullscreen16 ஒருவரும் இல்லையென்று கண்டு, விண்ணப்பம் பண்ணுகிறவன் இல்லையென்று ஆச்சரியப்பட்டார்; ஆதலால் அவருடைய புயமே அவருக்கு இரட்சிப்பாகி, அவருடைய நீதியே அவரைத் தாங்குகிறது.

fullscreen17 அவர் நீதியை மார்க்கவசமாக அணிந்து, இரட்சிப்பென்னும் சீராவைத் தமது சிரசில் தரித்து, நீதிசரிக்கட்டுதலென்னும் வஸ்திரங்களை உடுப்பாக உடுத்து, வைராக்கியத்தைச் சால்வையாகப் போர்த்துக்கொண்டார்.

fullscreen18 கிரியைகளுக்குத்தக்க பலனை அளிப்பார், தம்முடைய சத்துருக்களிடத்தில் உக்கிரத்தை சரிக்கட்டி, தம்முடைய பகைஞருக்குத் தக்க பலனையும், தீவுகளுக்குத்தக்க பலனையும் சரிக்கட்டுவார்.

fullscreen19 அப்பொழுது சூரியன் அஸ்தமிக்குந்திசைதொடங்கி கர்த்தரின் நாமத்துக்கும், சூரியன் உதிக்குந்திசைதொடங்கி அவருடைய மகிமைக்கும் பயப்படுவார்கள்; வெள்ளம்போல் சத்துரு வரும்போது, கர்த்தருடைய ஆவியானவர் அவனுக்கு விரோதமாய்க் கொடியேற்றுவார்.

fullscreen20 மீட்பர் சீயோனுக்கும், யாக்கோபிலே மீறுதலைவிட்டுத் திரும்புகிறவர்களுக்கும், வருவார் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

fullscreen21 உன்மேலிருக்கிற என் ஆவியும், நான் உன் வாயில் அருளிய என் வார்த்தைகளும், இதுமுதல் என்றென்றைக்கும் உன் வாயிலிருந்தும், உன் சந்ததியின் வாயிலிருந்தும், உன் சந்ததியினுடைய சந்ததியின் வாயிலிருந்தும் நீங்குவதில்லையென்று கர்த்தர் சொல்லுகிறார்; இது எனக்கு அவர்களோடிருக்கும் என் உடன்படிக்கையென்று கர்த்தர் சொல்லுகிறார்.