Daniel 4 in Tamil IRV Compare Tamil Indian Revised Version
1 ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் பூமி எங்கும் குடியிருக்கிற சகல மக்களுக்கும் தேசத்தார்களுக்கும் பல மொழி பேசுகிறவர்களுக்கும் எழுதுகிறது என்னவென்றால்: உங்களுக்குச் சமாதானம் பெருகுவதாக.
2 உன்னதமான தேவன் என்னிடத்தில் செய்த அடையாளங்களையும் அற்புதங்களையும் பிரசித்தப்படுத்துவது எனக்கு நன்மையாகக் கண்டது.
3 அவருடைய அடையாளங்கள் எவ்வளவு மகத்துவமும், அவருடைய அற்புதங்கள் எவ்வளவு வல்லமையுமாயிருக்கிறது; அவருடைய ராஜ்ஜியம் நித்தியராஜ்ஜியம்; அவருடைய ஆளுகை தலைமுறை தலைமுறையாக நிற்கும்.
4 நேபுகாத்நேச்சாராகிய நான் என் வீட்டிலே செல்வச்செழிப்புள்ளவனாயிருந்து என் அரண்மனையிலே வாழ்ந்துகொண்டிருந்தேன்.
5 நான் ஒரு கனவைக் கண்டேன்; அது எனக்கு மிகவும் பயத்தை உண்டாக்கியது; என் படுக்கையின்மேல் எனக்குள் உண்டான நினைவுகளும், என் எண்ணத்தில் தோன்றின தரிசனங்களும் என்னைக் கலங்கச்செய்தது.
6 ஆகையால் கனவின் அர்த்தத்தை எனக்குத் தெரிவிப்பதற்காகப் பாபிலோன் ஞானிகள் அனைவரையும் என்னிடத்தில் அழைத்துவரும்படி கட்டளையிட்டேன்.
7 அப்பொழுது ஞானிகளும், சோதிடர்களும், கல்தேயர்களும், குறிசொல்லுகிறவர்களும் என்னிடத்திலே வந்தார்கள்; கனவை நான் அவர்களுக்குச் சொன்னேன்; ஆனாலும் அதின் அர்த்தத்தை எனக்கு சொல்லமுடியாமற்போனார்கள்.
8 கடைசியிலே என் தேவனுடைய நாமத்தின்படியே பெல்தெஷாத்சார் என்னும் பெயரிடப்பட்டு, பரிசுத்த தேவர்களின் ஆவியையுடைய தானியேல் என்னிடத்தில் கொண்டுவரப்பட்டான்; அவனிடத்தில் நான் கனவை விவரித்துச் சொன்னதாவது:
9 ஞானிகளின் அதிபதியாகிய பெல்தெஷாத்சாரே, பரிசுத்த தேவர்களுடைய ஆவி உனக்குள் இருக்கிறதென்றும், எந்த மறைபொருளையும் அறிவது உனக்கு கடினமல்லவென்றும் நான் அறிவேன்; நான் கண்ட என் கனவின் தரிசனங்களையும் அதின் அர்த்தத்தையும் சொல்.
10 நான் படுத்திருந்தபோது என் எண்ணத்தில் தோன்றின தரிசனங்கள் என்னவென்றால்: இதோ, தேசத்தின் மத்தியிலே மிகவும் உயரமான ஒரு மரத்தைக் கண்டேன்.
11 அந்த மரம் வளர்ந்து பலத்து, தேசத்தின் எல்லைவரை காணப்படத்தக்கதாக அதின் உயரம் வானம்வரை எட்டினது.
12 அதின் இலைகள் அழகாகவும், அதின் பழங்கள் அதிகமாகவும் இருந்தது; எல்லா உயிரினங்களுக்கும் அதில் ஆகாரம் உண்டாயிருந்தது; அதின் கீழே காட்டுமிருகங்கள் நிழலுக்கு ஒதுங்கினது; அதின் கிளைகளில் ஆகாயத்துப் பறவைகள் வசித்துச் சகல பிராணிகளும் அதினால் போஷிக்கப்பட்டது.
13 நான் படுத்திருக்கும்போது என் எண்ணத்தில் தோன்றின தரிசனங்களைக் காணும்போது, காவலாளனாகிய பரிசுத்தவான் ஒருவன் வானத்திலிருந்து இறங்கக்கண்டேன்.
14 அவன் உரத்த சத்தமிட்டு: இந்த மரத்தை வெட்டி, இதின் கிளைகளை வெட்டிப்போடுங்கள்; இதின் இலைகளை உதிர்த்து, இதின் பழங்களைச் சிதறடியுங்கள்; இதின் கீழுள்ள மிருகங்களும் இதின் கிளைகளிலுள்ள பறவைகளும் போய்விடட்டும்.
15 ஆனாலும் இதின் வேர்களுள்ள அடிமரம் பூமியில் இருக்கட்டும்; இரும்பும் வெண்கலமுமான விலங்கு போடப்பட்டு, வெளியின் பசும்புல்லிலே தங்கி, ஆகாயத்துப் பனியிலே நனைவதாக; மிருகங்களோடே பூமியின் தாவரத்திலே அவனுக்குப் பங்கு இருப்பதாக.
16 அவனுடைய இருதயம் மனித இருதயமாயிராமல் மாறும்படி, மிருக இருதயம் அவனுக்குக் கொடுக்கப்படவேண்டும்; இப்படியிருக்கிற அவன்மேல் ஏழு வருடங்கள் கடந்துபோகவேண்டும்.
17 உன்னதமானவர் மனிதர்களுடைய ராஜ்ஜியத்தில் ஆளுகைசெய்து, தமக்குச் சித்தமானவனுக்கு அதைக் கொடுத்து, மனிதர்களில் தாழ்ந்தவனையும் அதின்மேல் அதிகாரியாக்குகிறார் என்று மனுக்குலம் அறிந்து கொள்வதற்காக காவலாளர்களின் அறிக்கையினால் இந்தக் காரியமும், பரிசுத்தவான்களின் வாய்மொழியினால் இந்த விசாரணையும் தீர்மானிக்கப்பட்டது என்றான்.
18 நேபுகாத்நேச்சார் என்னும் ராஜாவாகிய நான் கண்ட கனவு இதுவே; இப்போது பெல்தெஷாத்சாரே, நீ இதின் அர்த்தத்தைச் சொல்; என் ராஜ்ஜியத்திலுள்ள ஞானிகள் எல்லோராலும் இதின் அர்த்தத்தை எனக்குத் சொல்லமுடியாமல்போனது; நீயோ இதைத் தெரிவிக்கத்தக்கவன்; பரிசுத்த தேவர்களுடைய ஆவி உனக்குள் இருக்கிறதே என்றான்.
19 அப்பொழுது பெல்தெஷாத்சாரென்னும் பெயருள்ள தானியேல் சற்றுநேரம் திகைத்துச் சிந்தித்துக் கலங்கினான். ராஜா அவனை நோக்கி: பெல்தெஷாத்சாரே, கனவும் அதின் அர்த்தமும் உன்னைக் கலங்கச்செய்யவேண்டியதில்லை என்றான்; அப்பொழுது பெல்தெஷாத்சார் மறுமொழியாக: என் எஜமானனே, அந்தச் கனவு உம்முடைய பகைவர்களிடத்திலும், அதின் அர்த்தம் உம்முடைய எதிரிகளிடத்திலும் பலிக்கக்கடவது.
20 நீர் கண்ட மரம் வளர்ந்து பலத்து, தேசத்தின் எல்லைவரை காணப்படத்தக்கதாக அதின் உயரம் வானம்வரை எட்டினது.
21 அதின் இலைகள் அழகாகவும், அதின் பழங்கள் அதிகமாகவும் இருந்தது; எல்லா உயிரினங்களுக்கும் அதில் ஆகாரம் உண்டாயிருந்தது; அதின் கீழ் காட்டுமிருகங்கள் தங்கினது, அதின் கிளைகளில் ஆகாயத்துப் பறவைகள் வசித்தது.
22 அது பெரியவரும் பலத்தவருமாயிருக்கிற ராஜாவாகிய நீர்தாமே; உமது மகத்துவம் பெருகி வானம்வரைக்கும், உமது ராஜரீகம் பூமியின் எல்லைவரைக்கும் எட்டியிருக்கிறது.
23 இந்த மரத்தை வெட்டி, இதை அழித்துப்போடுங்கள்; ஆனாலும் இதின் வேர்களாகிய அடிமரம் தரையில் இருக்கட்டும் என்றும், இரும்பும் வெண்கலமுமான விலங்கு போடப்பட்டு, வெளியின் பசும்புல்லிலே தங்கி, ஆகாயத்துப் பனியில் நனைவதாக; ஏழு வருடங்கள் அவன்மேல் கடந்துபோகும்வரை மிருகங்களோடே அவனுடைய பங்கு இருக்கவேண்டும் என்றும், வானத்திலிருந்து இறங்கிவந்து சொன்ன பரிசுத்த காவலாளனை ராஜாவாகிய நீர் கண்டீரே.
24 ராஜாவே, அதின் அர்த்தமும் ராஜாவாகிய என் ஆண்டவன்மேல் வந்த உன்னதமானவருடைய தீர்மானமும் என்னவென்றால்: மனிதர்களிலிருந்து நீர் தள்ளிவிடப்படுவீர்; வெளியின் மிருகங்களுடன் வசிப்பீர்; மாடுகளைப்போலப் புல்லைமேய்ந்து, ஆகாயத்துப் பனியிலே நனைவீர்.
25 உன்னதமானவர் மனிதர்களுடைய ராஜ்ஜியத்தில் ஆளுகைசெய்து, தமக்கு விருப்பமாயிருக்கிறவனுக்கு அதைக் கொடுக்கிறார் என்பதை நீர் அறிந்துகொள்ளும்வரை ஏழு வருடங்கள் உம்முடைய வாழ்நாளில் கடந்துபோகவேண்டும்.
26 ஆனாலும் மரத்தின் வேர்களாகிய அடிமரம் தரையில் இருக்கட்டும் என்று சொல்லப்பட்டது என்னவென்றால்: நீர் தேவனின் அதிகாரத்தை அறிந்தபின், ராஜ்ஜியம் உமக்கு நிலைநிற்கும்.
27 ஆகையால் ராஜாவே, நான் சொல்லும் ஆலோசனையை நீர் அங்கீகரித்துக்கொண்டு நீதியைச் செய்து உமது பாவங்களையும், சிறுமையானவர்களுக்கு மனமிரங்கி, உமது அக்கிரமங்களையும் அகற்றிவிடும்; அப்பொழுது உம்முடைய வாழ்வு நீடித்திருக்கலாம் என்றான்.
28 இதெல்லாம் ராஜாவாகிய நேபுகாத்நேச்சாரின்மேல் வந்தது.
29 பன்னிரண்டு மாதம் சென்ற பின்பு, ராஜா பாபிலோன் ராஜ்ஜியத்தின் அரண்மனைமேல் உலாவிக்கொண்டிருக்கும்போது:
30 இது என் வல்லமையின் பராக்கிரமத்தினால், என் புகழ்ச்சியின் பிரஸ்தாபத்திற்கென்று, ராஜ்ஜியத்திற்கு அரண்மனையாக நான் கட்டின மகா பாபிலோன் அல்லவா என்று சொன்னான்.
31 இந்த வார்த்தை ராஜாவின் வாயில் இருக்கும்போதே, வானத்திலிருந்து ஒரு சத்தம் உண்டாகி: ராஜாவாகிய நேபுகாத்நேச்சாரே, ஆட்சி உன்னைவிட்டு நீங்கியது.
32 மனிதர்களிலிருந்து தள்ளப்படுவாய்; வெளியின் மிருகங்களுடன் வசிப்பாய்; மாடுகளைப்போல் புல்லை மேய்வாய்; இப்படியே உன்னதமானவர் மனிதர்களுடைய ராஜ்ஜியத்தில் ஆளுகை செய்து, தமக்கு விருப்பமாயிருக்கிறவனுக்கு அதைக் கொடுக்கிறாரென்பதை நீ அறிந்துகொள்ளும்வரை ஏழு வருடங்கள் உன்மேல் கடந்துபோகும் என்று உனக்குச் சொல்லப்படுகிறது என்று சொன்னது.
33 அந்நேரமே இந்த வார்த்தை நேபுகாத்நேச்சாரிடத்தில் நிறைவேறியது; அவன் மனிதர்களிலிருந்து தள்ளப்பட்டு, மாடுகளைப்போல் புல்லை மேய்ந்தான்; அவனுடைய தலைமுடி கழுகுகளுடைய இறகுகளைப்போலவும், அவனுடைய நகங்கள் பறவைகளுடைய நகங்களைப்போலவும் வளரும்வரை அவன் உடல் ஆகாயத்துப் பனியிலே நனைந்தது.
34 அந்த நாட்கள் சென்றபின்பு, நேபுகாத்நேச்சாராகிய நான் என் கண்களை வானத்திற்கு ஏறெடுத்தேன்; என் புத்தி எனக்குத் திரும்பிவந்தது; அப்பொழுது நான் உன்னதமானவரை ஸ்தோத்திரித்து, என்றென்றைக்கும் உயிரோடிருக்கிறவரைப் புகழ்ந்து மகிமைப்படுத்தினேன்; அவருடைய கர்த்தத்துவமே நித்திய கர்த்தத்துவம், அவருடைய ராஜ்ஜியமே தலைமுறை தலைமுறையாக நிற்கும்.
35 பூமியின் குடிகள் எல்லாம் ஒன்றுமில்லையென்று எண்ணப்படுகிறார்கள்; அவர் தமது சித்தத்தின்படியே வானத்தின் சேனையையும் பூமியின் குடிமக்களையும் நடத்துகிறார்; அவருடைய கையைத்தடுத்து, அவரை நோக்கி: என்ன செய்கிறீரென்று சொல்லத்தக்கவன் ஒருவனும் இல்லை என்றேன்.
36 அவ்வேளையில் என் புத்தி எனக்குத் திரும்பிவந்தது; என் அரசாட்சியின் மேன்மைக்காக என் மகிமையும் என் முகக்களையும் எனக்குத் திரும்பி வந்தது; என் மந்திரிகளும் என் பிரபுக்களும் என்னைத் தேடிவந்தார்கள்; என் ராஜ்ஜியத்திலே நான் பலப்படுத்தப்பட்டேன்; அதிக மகத்துவமும் எனக்குக் கிடைத்தது.
37 ஆகையால் நேபுகாத்நேச்சாராகிய நான் பரலோகத்தின் ராஜாவைப் புகழ்ந்து, உயர்த்தி, மகிமைப்படுத்துகிறேன்; அவருடைய செயல்களெல்லாம் சத்தியமும், அவருடைய வழிகள் நியாயமுமானவைகள்; பெருமையாக நடக்கிறவர்களைத் தாழ்த்த அவராலே ஆகும் என்று எழுதினான்.