1 சாலொமோன், பார்வோன்எனும் எகிப்திய மன்னனோடு, ஒப்பந்தம் செய்து அவனது மகளை திருமணம் செய்துகொண்டான். சாலொமோன் அவளை தாவீது நகரத்திற்கு அழைத்து வந்தான். அப்போது, சாலொமோன் தனது அரண்மனையையும் கர்த்தருடைய ஆலயத்தையும் கட்டிக்கொண்டிருந்தான். அவன் எருசலேமைச் சுற்றிலும் ஒரு சுவரையும் கட்டிக்கொண்டிருந்தான்.
2 ஆலயம் முடிக்கப்படாமல் இருந்தது. எனவே ஜனங்கள் பொய் தெய்வங்களின் பலிபீடங்களில் மிருகங்களைப் பலிகொடுத்து வந்தனர்.
3 சாலொமோன் கர்த்தரை நேசிப்பதாகக் காட்டிக்கொண்டான். அவனது தந்தையான தாவீது சொன்னதற்கெல்லாம் கீழ்ப்படியும்பொருட்டு அவன் இவ்வாறு செய்து வந்தான். அதனால் அதோடு தாவீது சொல்லாத சிலவற்றையும் அவன் செய்துவந்தான். அவன் மேடைகளுக்குப் பலி கொடுப்பதையும் நறுமணப்பொருட்களை எரிப்பதையும் இன்னும் கடைப்பிடித்தான்.
4 அரசனான சாலொமோன் கிபியோனுக்குச் சென்று பலிகொடுத்தான். அது மிகவும் முக்கியமான தெய்வீகஇடம் என்பதால் அவன் அங்கே சென்றான். அவன் பலிபீடத்தில் 1,000 பலிகளைச் செய்தான்.
5 சாலொமோன் கிபியோனில் இருந்தபோது. அன்று இரவு கனவில் கர்த்தர் வந்தார். தேவன், “உனக்கு என்ன வேண்டுமோ கேள் அதனை நான் உனக்கு தருவேன்” என்றார்.
6 சாலொமோனும், “உங்கள் ஊழியனான என் தந்தை தாவீதிடம் நீர் மிகுந்த கருணையுடன் இருந்தீர். அவரும் உம்மை பின்பற்றினார். அவர் நல்லவராகவும் சரியானவராகவும் வாழ்ந்தார். அவரது மகனை அவருக்குப் பின் சிங்காசனத்தில் அமர வைத்ததன் மூலம் கருணையைக் காட்டிவிட்டீர்.
7 என் தேவனாகிய கர்த்தாவே, என் தந்தையின் இடத்தில் என்னை அரசனாக்கினீர். ஆனால் நான் ஒரு குழந்தையைப்போன்று இருக்கிறேன். நான் செய்யவேண்டியதைச் செய்வதற்குரிய ஞானம் இல்லாமல் இருக்கிறேன்.
8 உங்கள் ஊழியனான நான் உங்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுள் ஒருவனாக இருக்கிறேன். அங்கே ஏராளமான ஜனங்கள் இருக்கின்றனர். அவர்கள் கணக்கிட மிகுதியாக இருந்தனர். ஒரு அரசன் அவர்கள் மத்தியில் பல முடிவுகளை எடுக்க வேண்டியவனாக இருக்கிறான்.
9 எனவே எனக்கு ஞானத்தைத்தருமாறு கேட்டுக்கொள்கிறேன். அதனால் நான் ஜனங்களைச் சிறப்பாக ஆளவும் சரியான வழியில் நியாயந்தீர்க்கவும் இயலும். இது நான் நல்லதுக்கும் தீமைக்குமான வேறுபாட்டை அறிந்துக்கொள்ளச் செய்யும். மிகப் பெரிய இந்த ஞானம் இல்லாமல் அதிக எண்ணிக்கையில் உள்ள மனிதர்களை ஆள்வது முடியாத செயல்” என்று வேண்டினான்.
10 இவ்வாறு சாலொமோன் வேண்டியதைக் கேட்டு கர்த்தர் மிகவும் மகிழ்ந்தார்.
11 தேவன் அவனிடம், “நீ உனக்காக நீண்ட ஆயுளைக் கேட்டுக் கொள்ளவில்லை. நீ உனக்காக பெரிய செல்வத்தையும் கேட்டுக் கொள்ளவில்லை. நீ உன் எதிரிகளின் மரணத்தையும் கேட்டுக்கொள்ளவில்லை. நீயோ வழக்குகளைக் கவனிக்கவும் சரியான முடிவை எடுக்கவும் ஞானத்தைக் கேட்கிறாய்.
12 எனவே நீ கேட்டதை நான் உனக்குத் தருவேன். ஞானமும் உணர்வுமுள்ள இருதயத்தை உனக்குத் தருவேன். இதற்கு முன் இதுபோல யாரும் இருந்ததில்லை என்று சொல்லும்படி உனது ஞானத்தை மகத்தான தாக்குவேன். அதோடு எதிர்காலத்திலும் உன்னைப் போல் யாரும் இருக்கமாட்டார்கள்.
13 அதோடு, நீ கேட்காத சிலவற்றையும் உனக்குப் பரிசுகளாகத் தருவேன். உனது வாழ்க்கை முழுவதும் நீ செல்வமும் சிறப்பும் பெற்று விளங்குவாய். இந்த உலகில் உன்னைப்போல் எந்த அரசரும் இல்லை என்று செய்வேன்.
14 என்னைப் பின்பற்றுமாறும் எனது சட்டங்களுக்கும் கட்டளைகளுக்கும் கீழ்ப்படியுமாறும் கேட்டுக்கொள்கிறேன். உன் தந்தை தாவீது செய்ததுபோல் செய். அவ்வாறு செய்தால், உனக்கு நீண்ட ஆயுளையும் தருவேன்” என்றார்.
15 சாலொமோன் விழித்தபொழுது, கனவிலே தேவன் பேசினார் என்று அவனுக்குத் தெரிந்தது. பின் அவன் எருசலேம் போய் கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டியின் முன்பு நின்று கர்த்தருக்குத் தகனபலியைச் செலுத்தினான். கர்த்தருக்குத் சமாதான பலியையும் தந்தான். பின், அவன் தன் ஆட்சிக்கு உதவும் தலைவர்களுக்கும் அதிகாரிகளுக்கும் விருந்துகொடுத்தான்.
16 ஒரு நாள் இரு வேசிகள் சாலொமோனிடம் வந்தனர். அவர்கள் அரசன் முன்பு நின்றனர்.
17 அதில் ஒருத்தி, “ஐயா, இவளும் நானும் ஒரே வீட்டில் வாழ்கிறோம். நாங்கள் இருவரும் ஒரே சமயத்தில் கர்ப்பமாகி குழந்தைப் பேற்றுக்குத் தயாராக இருந்தோம். நான் குழந்தை பெறும்போது இவளும் கூட இருந்தாள்.
18 மூன்று நாட்களுக்குப் பின் இவளும் குழந்தைப் பெற்றாள். அந்த வீட்டில் எங்களைத் தவிர எவரும் இல்லை. நாங்கள் இருவர் மட்டும்தான் இருந்தோம்.
19 ஒரு இரவில் இவள் தன் குழந்தையோடு தூங்கும்போது, குழந்தை மரித்துப்போனது.
20 அப்பொழுது நான் தூங்கிக்கொண்டிருந்ததால், இவள் என் குழந்தையை எடுத்துக்கொண்டாள். அவளது மரித்த குழந்தையை என் கையருகில் போட்டுவிட்டாள்.
21 மறுநாள் காலையில் எழுந்து என் குழந்தைக்குப் பால் கொடுக்க முயன்றேன். ஆனால் குழந்தை மரித்திருப்பதை அறிந்தேன். பிறகு உற்றுப்பார்த்தபோது அது என் குழந்தையல்ல என்பதை அறிந்துகொண்டேன்” என்றாள்.
22 ஆனால் அடுத்தவள், “இல்லை உயிரோடுள்ள குழந்தை என்னுடையது. மரித்துப்போன குழந்தை உன்னுடையது” என்றாள். ஆனால் முதல் பெண், “இல்லை நீ தவறாக சொல்கிறாய்! மரித்த குழந்தை உன்னுடையது. உயிருள்ள குழந்தை என்னுடையது” என்றாள். இவ்வாறு இருவரும் அரசனுக்கு முன்பு வாக்குவாதம் செய்து கொண்டனர்.
23 பிறகு சாலொமோன் அரசன், “இருவருமே உயிரோடுள்ள குழந்தை உங்களுடையது என்று கூறுகிறீர்கள். ஒவ்வொருத்தியும் மரித்துப்போன குழந்தை மற்றவளுடையது என்று கூறுகிறீர்கள்” என்றான்.
24 பிறகு சாலொமோன் வேலைக்காரனை அனுப்பி ஒரு வாளைக் கொண்டுவரச் செய்தான்.
25 பின்னர் அவன், “நம்மால் செய்யமுடிந்தது இதுதான். உயிரோடுள்ள குழந்தையை இரு துண்டுகளாக வெட்டுவோம். ஆளுக்குப் பாதியைக் கொடுப்போம்” என்றான்.
26 இரண்டாவது பெண், “அதுதான் நல்லது. குழந்தையை இரண்டாக வெட்டுங்கள். பிறகு இருவருக்குமே கிடைக்காமல் போகும்” என்றாள். ஆனால் முதல் பெண், அக்குழந்தை மேல் மிகுந்த அன்பு கொண்டவள். அவளே உண்மையான தாய், அவள் அரசனிடம், “ஐயா அந்தக் குழந்தையைக் கொல்லவேண்டாம்! அதனை அவளிடமே கொடுத்துவிடுங்கள்” என்றாள்.
27 பிறகு சாலொமோன், “அக்குழந்தையைக் கொல்லவேண்டாம். அதனை முதல் பெண்ணிடமே கொடுத்துவிடுங்கள். அவளே உண்மையான தாய்” என்றான்.
28 இஸ்ரவேல் ஜனங்கள் சாலொமோனின் முடி வைப்பற்றி கேள்விப்பட்டனர். அவனது அறிவுத் திறனைப் பாராட்டி அவனைப் பெரிதும் மதித்தனர். அவன் தேவனிடமிருந்து ஞானத்தைப் பெற்று சரியான முடிவுகளை எடுத்துள்ளான் என்று அறிந்தனர்.
1 இராஜாக்கள் 3 ERV IRV TRV