1 நான் மீண்டும் துக்கத்தோடு உங்களிடம் வரக்கூடாது என்று எனக்குள்ளே தீர்மானம்பண்ணிக்கொண்டேன்.
2 நான் உங்களைத் துக்கப்படுத்தினால், என்னாலே துக்கமடைந்தவனைத்தவிர, வேறு யார் என்னைச் சந்தோஷப்படுத்துவான்?
3 என்னுடைய சந்தோஷம் உங்களெல்லோருக்கும் சந்தோஷமாக இருக்கும் என்று, நான் உங்களெல்லோரையும்பற்றி நம்பிக்கை உள்ளவனாக இருந்து, நான் வரும்போது, என்னைச் சந்தோஷப்படுத்தவேண்டியவர்களால் நான் துக்கமடையாமல் இருப்பதற்காக, அதை உங்களுக்கு எழுதினேன்.
4 அன்றியும், நீங்கள் துக்கப்படுவதற்காக எழுதாமல், உங்கள்மேல் நான் வைத்த அன்பின் அளவை நீங்கள் தெரிந்துகொள்வதற்காகவே, அதிக வியாகுலமும் மனவருத்தமும் அடைந்தவனாக அதிகக் கண்ணீரோடு உங்களுக்கு எழுதினேன்.
5 துக்கம் உண்டாக்கினவன் எனக்கு மாத்திரமல்ல, ஏறக்குறைய உங்களெல்லோருக்கும் துக்கம் உண்டாக்கினான்; நான் உங்கள் எல்லோர்மேலும் அதிக சுமையைச் சுமத்தாமல் இருப்பதற்காக இதைச் சொல்லுகிறேன்.
6 அப்படிப்பட்டவனுக்கு அநேகரால் உண்டான இந்தத் தண்டனையே போதும்.
7 எனவே அவன் அதிக துக்கத்தில் மூழ்கிப்போகாமல் இருக்க, நீங்கள் அவனுக்கு மன்னித்து ஆறுதல் செய்யவேண்டும்.
8 அப்படியே, உங்களுடைய அன்பை அவனுக்குக் காண்பிக்கவேண்டும் என்று உங்களை வேண்டிக்கொள்கிறேன்.
9 நீங்கள் எல்லாவற்றிலும் கீழ்ப்படிந்திருக்கிறீர்களோ என்று உங்களைச் சோதித்துப் பார்ப்பதற்காக இப்படி எழுதினேன்.
10 யாரை நீங்கள் மன்னிக்கிறீர்களோ, அவனை நானும் மன்னிக்கிறேன்; மேலும் எதை நான் மன்னித்திருக்கிறேனோ, அதை உங்களுக்காக கிறிஸ்துவினுடைய சந்நிதானத்திலே மன்னித்திருக்கிறேன்.
11 சாத்தானாலே நாம் மோசமடையாமல் இருக்க அப்படிச் செய்தேன்; அவனுடைய தந்திரங்கள் நமக்குத் தெரியாதவைகள் இல்லை.
12 மேலும் நான் கிறிஸ்துவின் நற்செய்தியைப் பிரசங்கிப்பதற்காக துரோவா பட்டணத்திற்கு வந்தபோது, கர்த்தராலே எனக்குக் கதவு திறக்கப்பட்டிருக்கும்போது,
13 நான் என் சகோதரனாகிய தீத்துவைப் பார்க்காததினாலே, என் மனதில் சமாதானம் இல்லாமல் இருந்தது. எனவே நான் அவர்களைவிட்டு, மக்கெதோனியா நாட்டிற்குப் புறப்பட்டுப்போனேன்.
14 கிறிஸ்துவிற்குள் எப்பொழுதும் எங்களை வெற்றியடையச்செய்து, எல்லா இடங்களிலும் எங்களைக்கொண்டு அவரைத் தெரிந்துகொள்கிற அறிவின் நறுமணத்தை வெளிப்படுத்துகிற தேவனுக்கு ஸ்தோத்திரம்.
15 இரட்சிக்கப்படுகிறவர்களுக்குள்ளும், கெட்டுப்போகிறவர்களுக்குள்ளும், நாங்கள் தேவனுக்குக் கிறிஸ்துவின் நறுமணமாக இருக்கிறோம்.
16 கெட்டுப்போகிறவர்களுக்குள்ளே மரணத்திற்கான மரணவாசனையாகவும், இரட்சிக்கப்படுகிறவர்களுக்குள்ளே ஜீவனுக்கான ஜீவவாசனையாகவும் இருக்கிறோம். இவைகளை நடத்துவதற்கு தகுதியானவன் யார்?
17 அநேகரைப்போல, நாங்கள் தேவவசனத்தைக் கலப்படம் செய்து பேசாமல், சுத்தமாகவும், தேவனால் அருளப்பட்டபடியாகவே, கிறிஸ்துவிற்குள் தேவசந்நிதியில் பேசுகிறோம்.
2 கொரிந்தியர் 2 ERV IRV TRV