2 இராஜாக்கள் 11 ERV ஒப்பிடு Tamil Easy Reading Version
1 அத்தாலியாள் என்பவள் அகசியாவின் தாயார் ஆவாள். தன் மகன் மரித்துப் போனதைப் பார்த்ததும், எழுந்து அரச குடும்பத்தினரையெல்லாம் கொன்றாள்.
2 அரசனான யோராமின் மகள் யோசேபாள் ஆவாள். இவள் அகசியாவிற்குச் சகோதரி ஆவாள். யோவாஸ் அகசியா அரசனின் மகன்களுள் ஒருவன். மற்றவர்கள் கொல்லப்பட்டபோது அவள் அவனைக் காப்பற்றி ஒளித்து வைத்தாள். தன் படுக்கையறையிலேயே யோவாசையும் அவனது தாதியையும் மறைத்து வைத்தாள். இவ்வாறு யோவாஸ் அத்தாலியாவால் கொல்லப்படாமல் தப்பித்தான்.
3 பிறகு கர்த்தருடைய ஆலயத்தில் யோவாசும் யோசேபாவும் ஆறு ஆண்டுகள் மறைந்து இருந்தனர். அத்தாலியா யூதாவை ஆண்டு வந்தாள்.
4 ஏழாவது ஆண்டில், தலைமை ஆசாரியனான யோய்தா 100 பேருக்கு அதிகாரிகளையும் தலைவர்களையும் காவலர்களையும் ஒருங்கே அழைத்தான். கர்த்தருடைய ஆலயத்தில் கூடச்செய்து அவர்களோடு ஒரு ஒப்பந்தம் செய்துகொண்டான். அவர்களை ஆலயத்தில் வாக்குறுதி கொடுக்கச் செய்து அரசனின் மகனைக் காட்டினான்.
5 பின் அவன் அவர்களுக்கு ஆணையிட்டு, “நீங்கள் செய்யவேண்டிய காரியம் இதுதான். உங்களில் மூன்றில் ஒரு பங்கு பேர் ஒவ்வொரு ஓய்வு நாளில் முறைப்படி வரவேண்டும். அரசனின் வீட்டை கவனித்து வரவேண்டும்.
6 இன்னொரு மூன்றில் ஒரு பங்கினர் சூர் வாசலில் இருக்க வேண்டும். மூன்றில் மற்றொரு பங்கினர் காவலர்களுக்குப் பின்னாலுள்ள வாசலில் இருக்க வேண்டும். இவ்வாறு நீ அரசனின் வீட்டைச் சுற்றி சுவர்போல இருக்க வேண்டும.
7 ஒவ்வொரு ஓய்வுநாளும் முடியும்போது, மூன்றில் இரண்டு பங்கினர் கர்த்தருடைய ஆலயத்தையும் அரசன் யோவாசையும் பாதுகாத்து நிற்பார்கள்.
8 நீங்கள் அரசன் யோவாசோடு தங்கி அவன் எங்கு போனாலும் போகவேண்டும். அவர்கள் எப்போதும் அவனைச் சுற்றியே இருக்க வேண்டும். ஒவ்வொருவரும் கையில் ஆயுதம் வைத்திருக்கவேண்டும். உங்களை நெருங்குகிற எவரையும் கொன்று விடவேண்டும்” என்றான்.
9 ஆசாரியன் யோய்தாவின் ஆணைப்படி தளபதிகள் செயல்பட்டார்கள். ஒவ்வொரு வரும் தம் ஆட்களை அழைத்தனர். சனிக்கிழமை ஒரு குழு யோவாசை பாதுகாத்தது. மற்ற குழுக்கள் மற்ற நாட்களில் காவல் காத்துவந்தனர். எல்லோரும் ஆசாரியன் யோய்தாவிடம் வந்தனர்.
10 ஆசாரியனோ தளபதிகளுக்கு ஈட்டி கேடயம் போன்றவற்றைக் கொடுத்தான். இவை அனைத்தும் அரசன் தாவீதால் ஒரு காலத்தில் கர்த்தருடைய ஆலயத்திற்குள் வைக்கப்பட்டிருந்தன.
11 இக்காவலர்கள் ஆயுதங்களோடு வலது மூலையிலிருந்து ஆலயத்தின் இடது மூலைவரை நின்றனர். பலிபீடம், ஆலயம் போன்றவற்றைச் சுற்றிலும் நின்றனர். அரசன் ஆலயத்திற்குப் போகும்போதும் அவனைச் சுற்றி நின்றனர்.
12 அவன் (யோய்தா) யோவாசை வெளியே அழைத்து வந்தான். அவன் தலையில் மகுடத்தைச் சூடி அரசனுக்கும் தேவனுக்கும் இடையில் ஒப்பந்தத்தை கொடுத்தனர். அவனுக்கு அபிஷேகம் செய்து புதிய அரசனாக நியமித்தனர். அவர்கள் கைகளைத் தட்டி, ஓசையெழுப்பி “அரசன் பல்லாண்டு வாழ்க!” என்று வாழ்த்தினார்கள்.
13 அரசி அத்தாலியாள் காவலர்களிடமிருந்தும், ஜனங்களிடமிருந்தும் எழுந்த இச்சத்தத்தை கேட்டாள். அவள் கர்த்தருடைய ஆலயத்திற்குள் போனாள்.
14 அரசன் வழக்கமாக நிற்கும் தூணருகில் நின்றுகொண்டிருப்பதைக் கண்டாள். அரசனுக்காக அதிகாரிகள் எக்காளம் வாசிப்பதையும் கண்டாள். ஜனங்கள் மகிழ்ச்சியோடு இருப்பதையும் பார்த்தாள். அத்தாலியாள் அவள் நிலை குலைந்ததைக் காட்ட தன் ஆடைகளைக் கிழித்துக் கொண்டாள். பின் அவள் “துரோகம்! துரோகம்!” என்று கத்தினாள்.
15 படைவீரர்களைத் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் தளபதிகளுக்கு ஆசாரியன் யோய்தா கட்டளையிட்டான். யோய்தா, “ஆலயத்தை விட்டு வெளியே அத்தாலியாளைக் கொண்டு வாருங்கள். அவளைச் சார்ந்தவர்களைக் கொல்லுங்கள். ஆனால் கர்த்தருடைய ஆலயத்தில் கொல்லவேண்டாம்” என்றான்.
16 எனவே அவளை ஆலயத்தைவிட்டு வெளியே “குதிரை வாசலுக்கு” இழுத்து வந்து அங்கே அவளைக் கொன்றனர்.
17 பிறகு கர்த்தருக்கும் அரசனுக்கும் ஜனங்களுக்கும் இடையில் யோய்தா ஒரு ஒப்பந்தம் செய்தான். இதன்படி அரசனும் ஜனங்களும் கர்த்தருக்கு உரியவர்கள். பின் யோய்தா அரசனுக்கும் ஜனங்களுக்கும் இடையில் ஓர் ஒப்பந்தம் செய்தான். அதன்படி அரசன் ஜனங்களுக்கு நன்மை செய்ய வேண்டும், ஜனங்களும் அரசனுக்குக் கீழ்ப்படிந்து வாழவேண்டும்.
18 பிறகு அனைவரும் பொய்த் தெய்வமான பாகாலின் ஆலயத்திற்குச் சென்றனர். பாகாலின் உருவச்சிலைகளையும் பலிபீடங்களையும் தூள் தூளாக நொறுக்கினர். பாகாலின் ஆசாரியனான மாத்தனையும் பலிபீடத்தின் முன்னர் கொன்றனர். கர்த்தருடைய ஆலயத்தின் பொறுப்பாளராகச் சில மனிதரை ஆசாரியன் (யோய்தா) நியமித்தான்.
19 ஆசாரியன் ஜனங்களை வழிநடத்தினான். அவர்கள் கர்த்தரின் ஆலயத்திலிருந்து அரசனின் வீட்டிற்குச் சென்றனர். அரசனோடு சிறப்பு காவலர்களும் அதிகாரிகளும் சென்றனர். அவன் அரசனது வீட்டின் வாசலுக்குச் சென்றான். பிறகு (அரசன் யோவாஸ்) அவன் சிங்காசனத்தில் அமர்ந்தான்.
20 ஜனங்கள் அனைவரும் மகிழ்ந்தனர். நகரம் சமாதானமாயிருந்தது. வாளால் கொல்லப்பட்ட அரசி அத்தாலியாள் அரண்மனைக்கருகில் கொல்லப்பட்டாள்.
21 யோவாஸ் அரசனாகும்போது அவனுக்கு ஏழு வயது.