2 இராஜாக்கள் 11 IRV ஒப்பிடு Tamil Indian Revised Version
1 அகசியாவின் தாயாகிய அத்தாலியாள் தன் மகன் இறந்துபோனதைக் கண்டபோது, எழும்பி ராஜவம்சத்தார்கள் அனைவரையும் கொலைசெய்தாள்.
2 ராஜாவாகிய யோராமின் மகளும் அகசியாவின் சகோதரியுமாகிய யோசேபாள், கொலைசெய்யப்படுகிற ராஜகுமாரரின் நடுவிலிருக்கிற அகசியாவின் மகனாகிய யோவாசை யாருக்கும் தெரியாமல் எடுத்தாள்; அவன் கொல்லப்படாதபடி, அவனையும் அவன் வளர்ப்புத் தாயையும் அத்தாலியாளுக்குத் தெரியாமல் படுக்கையறையில் ஒளித்துவைத்தார்கள்.
3 இவளோடேகூட அவன் ஆறுவருடங்கள் கர்த்தருடைய ஆலயத்தில் மறைத்துவைக்கப்பட்டிருந்தான்; அத்தாலியாள் தேசத்தின்மேல் அரசாட்சிசெய்தாள்.
4 ஏழாம் வருடத்திலே யோய்தா நூறுபேருக்கு அதிபதிகளையும் தலைவர்களையும் காவலாளர்களையும் அழைப்பித்து, அவர்களைத் தன்னிடத்தில் கர்த்தருடைய ஆலயத்திலே வரச்சொல்லி, அவர்களோடு உடன்படிக்கைசெய்து, அவர்களைக் கர்த்தருடைய ஆலயத்திலே உடன்படிக்கை செய்துகொண்டு, அவர்களுக்கு ராஜாவின் மகனைக் காண்பித்து,
5 அவர்களை நோக்கி: நீங்கள் செய்யவேண்டிய காரியம் என்னவென்றால், ஓய்வுநாளில் முறைப்படி இங்கே வருகிற உங்களில் மூன்றில் ஒரு பங்கு ராஜாவின் அரண்மனையைக் காவல் காக்கவேண்டும்.
6 மூன்றில் ஒரு பங்கு சூர் என்னும் வாசலிலும், மூன்றில் ஒரு பங்கு காவலாளர்களின் காவலின் பின்னே இருக்கிற வாசலிலுமிருந்து ஆலயக்காவலைப் பத்திரமாகக் காக்கவேண்டும்.
7 இப்படியே ஓய்வு நாளில் முறைப்படியே உங்களில் இரண்டு பங்குபேர், ராஜாவினிடத்தில் கர்த்தருடைய ஆலயத்தைக் காவல் காக்கவேண்டும்.
8 நீங்கள் அவரவர் தங்கள் ஆயுதங்களைக் கையிலே பிடித்தவர்களாக, ராஜாவைச் சுற்றிலும் வரிசையாக நிற்கவேண்டும்; வரிசைகளுக்குள் புகுந்துவருகிறவன் கொலை செய்யப்படவேண்டும்; ராஜா வெளியே போகும்போதும் உள்ளே வரும்போதும் நீங்கள் அவரோடே இருங்கள் என்றான்.
9 ஆசாரியனாகிய யோய்தா கட்டளையிட்டபடியெல்லாம் நூறுபேருக்கு அதிபதிகள் செய்து, அவரவர் ஓய்வுநாளில் முறைப்படி வருகிறவர்களும் போகிறவர்களுமாகிய தங்கள் மனிதர்களைக் கூட்டிக்கொண்டு, ஆசாரியனாகிய யோய்தாவினிடத்தில் வந்தார்கள்.
10 ஆசாரியன் கர்த்தரின் ஆலயத்தில் தாவீதுராஜா வைத்திருந்த ஈட்டிகளையும் கேடகங்களையும் நூறுபேருக்கு அதிபதிகளிடத்தில் கொடுத்தான்.
11 காவலாளர்கள் அவரவர் தங்கள் ஆயுதங்களைப் பிடித்தவர்களாக, ஆலயத்தின் வலப்பக்கம் தொடங்கி அதன் இடப்பக்கம்வரை, பலிபீடத்திற்கு எதிராகவும் ஆலயத்திற்கு எதிராகவும் ராஜாவைச் சுற்றிலும் நின்றார்கள்.
12 அப்பொழுது அவன்: ராஜகுமாரனை வெளியே கொண்டுவந்து, கிரீடத்தை அவன்மேல் வைத்து, சாட்சியின் ஆகமத்தை அவன் கையிலே கொடுத்தான்; இப்படி அவனை ராஜாவாக்கி அபிஷேகம் செய்து: ராஜா வாழ்க என்று சொல்லி கரங்களைத் தட்டினார்கள்.
13 ஓடிவருகிற மக்களின் ஆரவாரத்தை அத்தாலியாள் கேட்டபோது: அவள் கர்த்தருடைய ஆலயத்திலுள்ள மக்களிடம் வந்து,
14 இதோ, முறைமையின்படியே ராஜா தூண் அருகில் நிற்கிறதையும், ராஜாவின் அருகில் நிற்கிற பிரபுக்களையும், எக்காளம் ஊதுகிறவர்களையும், தேசத்து மக்கள் எல்லோரும் சந்தோஷப்பட்டு எக்காளம் ஊதுகிறதையும் கண்டவுடனே, அத்தாலியாள் தன் ஆடைகளைக் கிழித்துக்கொண்டு: துரோகம் துரோகம் என்று சத்தமிட்டாள்.
15 ஆசாரியனாகிய யோய்தா இராணுவத்தலைவர்களாகிய நூறுபேருக்கு அதிபதிகளானவர்களுக்குக் கட்டளையிட்டு: இவளை வரிசைகளுக்கு வெளியே கொண்டுபோங்கள்; இவளைப் பின்பற்றுகிறவனைப் பட்டயத்தாலே வெட்டிப்போடுங்கள் என்றான். கர்த்தருடைய ஆலயத்தில் அவளைக் கொல்லக்கூடாது என்று ஆசாரியன் சொல்லியிருந்தான்.
16 அவர்கள் அவளுக்கு இடம் உண்டாக்கினபோது, ராஜாவின் அரண்மனைக்குள் குதிரைகள் நுழைகிற வழியிலே அவள் போகும்போது, அவளைக் கொன்றுபோட்டார்கள்.
17 அப்பொழுது யோய்தா, அவர்கள் கர்த்தருடைய மக்களாயிருக்கும்படிக்கு, ராஜாவும் மக்களும் கர்த்தரோடே உடன்படிக்கைசெய்யவும், ராஜாவும் மக்களும் ஒருவரோடொருவர் உடன்படிக்கைசெய்யவும் செய்து,
18 பின்பு தேசத்தின் மக்கள் எல்லோரும் பாகாலின் கோவிலுக்குப் போய், அதை இடித்து, அதின் பலிபீடங்களையும் சிலைகளையும் முற்றிலும் உடைத்து, பாகாலின் பூசாரியாகிய மாத்தானைப் பலிபீடங்களுக்கு முன்பாகக் கொன்றுபோட்டார்கள். ஆசாரியன் கர்த்தருடைய ஆலயத்தை விசாரிக்கும் அதிகாரிகளை ஏற்படுத்தினான்.
19 நூறுபேருக்கு அதிபதிகளையும், தலைவர்களையும், காவலாளர்களையும் தேசத்தின் மக்களையும் கூட்டி, ராஜாவைக் கர்த்தருடைய ஆலயத்திலிருந்து இறங்கச்செய்து, அவனைக் காவலாளர்களின் வாசல் வழியாக ராஜஅரண்மனைக்கு அழைத்துக்கொண்டு போனார்கள்; அங்கே அவன் ராஜாக்களுடைய சிங்காசனத்தின்மேல் உட்கார்ந்தான்.
20 தேசத்தின் மக்கள் எல்லோரும் மகிழ்ந்து, நகரம் அமைதலானது. அத்தாலியாளையோ ராஜாவின் அரண்மனைஅருகில் பட்டயத்தால் கொன்றுபோட்டார்கள்.
21 யோவாஸ் ராஜாவாகிறபோது ஏழு வயதாயிருந்தான்.