1 சமாரியாவில் யெகூவின் மகனான யோவாகாஸ் இஸ்ரவேலின் புதிய அரசன் ஆனான். இது அகசியாவின் மகனான யோவாசின் 23வது ஆட்சியாண்டின்போது ஏற்பட்டது. யோவாகாஸ் 17 ஆண்டுகள் ஆட்சி செய்தான்.
2 கர்த்தருக்கு வேண்டாதவற்றையே யோவாகாஸ் செய்து வந்தான். இஸ்ரவேலரின் பாவத்துக்குக் காரணமாயிருந்த நேபாத்தின் மகனாகிய யெரொபெயாமின் பாவச்செயல்களை இவனும் பின்பற்றினான். அதனைச் செய்வதை நிறுத்தவில்லை.
3 அதனால் இஸ்ரவேலர்மேல் கர்த்தருக்கு கோபம் வந்தது. எனவே அவர்களை கர்த்தர் ஆராம் அரசன் ஆசகேலின் கையிலும் ஆசகேலின் மகனான பெனாதாத் கையிலும் ஒப்படைத்தார்.
4 பிறகு தமக்கு உதவி செய்யும்படி யோவாகாஸ் கர்த்தரிடம் கெஞ்சிக் கேட்டுக் கொண்டான். கர்த்தரும் செவிசாய்த்தார். கர்த்தர் இஸ்ரவேலரின் துன்பங்களைப் பார்த்தார். ஆராம் அரசன் இஸ்ரவேலரைக் கொடுமைப்படுத்துவதைக் கவனித்தார்.
5 எனவே கர்த்தர் இஸ்ரவேலரைக் காப்பாற்ற ஒருவனை அனுப்பினார். இஸ்ரவேலர்கள் ஆராமியர்களிடமிருந்து விடுதலை பெற்றனர். முன்பு போல, அவர்கள் தமது கூடாரங்களுக்கு (வீடுகள்) சென்றனர்.
6 எனினும் அவர்கள் தாம் பாவம் செய்வதை நிறுத்தவில்லை. இஸ்ரவேலர்கள் பாவம் செய்வதற்குக் காரணமான யெரொபெயாமின் குடும்பத்தார் பாவங்களை அவர்கள் தொடர்ந்து செய்தனர். அவர்கள் சமாரியாவில் அஷெரா தூண்களையும் வைத்திருந்தனர்.
7 ஆராமின் அரசன் யோவாகாசின் படையைத் தோற்கடித்தான். படையில் பல வீரர்களைக் கொன்றான். 50 குதிரை வீரர்கள், 10 இரதங்கள், 10,000 காலாட் வீரர்களை மட்டுமே விட்டுவிட்டான். யோவாகாசின் வீரர்கள் காலடியில் மிதிபட்ட தூசியைப்போன்று ஆனார்கள்.
8 யோவாகாஸ் செய்த மற்ற அருஞ்செயல்களைப் பற்றியும் அவனது வலிமைபற்றியும் இஸ்ரவேல் அரசர்களின் வரலாறு என்ற புத்தகத்தில் எழுதப்பட்டுள்ளது.
9 யோவாகாஸ் மரித்ததும் அவனது முற்பிதாக்களோடு அவனும் அடக்கம் செய்யப்பட்டான். ஜனங்கள் அவனை சமாரியாவில் அடக்கம் செய்தனர். பிறகு அவனது மகன் யோவாஸ் அரசன் ஆனான்.
10 யோவாகாசின் மகன் யோவாஸ் சமாரியாவில் இஸ்ரவேலரின் அரசன் ஆனான். இது யூதாவின் அரசனாகிய யோவாசின் 37வது ஆட்சியாண்டில் நிகழ்ந்தது. யோவாஸ் 16 ஆண்டுகள் இஸ்ரவேலை ஆண்டான்.
11 யோவாசும் கர்த்தருக்குப் பிடிக்காதவற்றைச் செய்தான். இஸ்ரவேலர்களுக்குப் பாவத்தைத் தேடித்தந்த பாவத்தை உண்டு பண்ணிய நேபாத்தின் மகனான யெரொபெயாமின் பாவச்செயல்களைச் செய்வதை இவனும் நிறுத்தவில்லை. அவன் அவற்றைத் தொடர்ந்து செய்தான்.
12 யோவாஸ் செய்த மற்ற அருஞ்செயல்களும் அவனது வலிமையும் அவன் யூதாவின் அரசனான அமத்சியாவோடு செய்த போர்களும் பற்றி இஸ்ரவேல் அரசர்களின் வரலாறு என்ற புத்தகத்தில் எழுதப்பட்டுள்ளது.
13 யோவாஸ் மரித்ததும் இஸ்ரவேல் அரசர்களான அவனது முற்பிதாக்களோடு சமாரியாவில் அடக்கம் செய்யப்பட்டான். யோவாசின் சிம்மாசனத்தில் யெரொபெயாம் அரசனாக அமர்ந்தான்.
14 எலிசா நோயுற்றான். பின், இந்த நோயாலேயே அவன் மரித்துப்போனான். இஸ்ரவேல் அரசனான யோவாஸ், எலிசாவைப் பார்க்கப் போனான். யோவாஸ் எலிசாவுக்காக அழுதான். அவன் “என் தந்தையே! என் தந்தையே! இது இஸ்ரவேலின் இரதமும் அதன் குதிரைகளுக்கும் ஏற்ற நேரமா?” என்றான்.
15 எலிசா அவனிடம், “ஒரு வில்லையும் சில அம்புகளையும் எடுத்துக்கொள்” என்றான். யோவாஸ் ஒரு வில்லையும், சில அம்புகளையும் எடுத்துக்கொண்டான்.
16 பிறகு எலிசா இஸ்ரவேல் அரசனிடம், “வில்லில் உனது கையை வை” என்றான். யோவாஸ் அவ்வாறே செய்தான். பிறகு எலிசா தன் கையை அரசனின் கையோடு வைத்தான்.
17 எலிசா, “கிழக்கு ஜன்னலைத் திறவுங்கள்” என்றான், யோவாஸ் அவ்வாறே திறந்தான். பிறகு எலிசா “எய்துவிடு” என்றான். யோவாஸ் எய்தான். பிறகு எலிசா, “இது கர்த்தருடைய வெற்றி அம்பு! இது ஆராம் மேல் கொள்ளும் வெற்றியாகும்! நீ ஆராமியர்களை ஆப்பெக்கில் வெல்வாய். அவர்களை அழிப்பாய்” என்றான்.
18 எலிசா மேலும், “அம்புகளை எடு” என்றான். யோவாஸ் எடுத்தான். “தரையின் மேல் அடி” என்று இஸ்ரவேல் அரசனிடம் கூறினான். யோவாஸ் மூன்று முறை தரையின் மீது அடித்தான். பிறகு நிறுத்தினான்.
19 அதனால் தேவமனிதனுக்கு (எலிசாவிற்கு) யோவாசின் மேல் கோபம் வந்தது. அவன், “நீ ஐந்து அல்லது ஆறுமுறை அடித்திருக்க வேண்டும்! அதனால் ஆராமை அது அழியும்வரை தோற்கடித்திருப்பாய்! ஆனால் இப்போது நீ மூன்றுமுறை மட்டுமே ஆராமை வெல்வாய்!” என்றான்.
20 எலிசா மரித்தான். ஜனங்கள் அவனை அடக்கம் செய்தனர். அடுத்த ஆண்டில் ஒரு வசந்த காலத்தில் மோவாபிய வீரர்களின் குழு ஒன்று படையெடுத்து தாக்கியது. போருக்கான பொருட்களை எடுப்பதற்காக அவர்கள் வந்தனர்.
21 சில இஸ்ரவேலர்கள் மரித்த ஒருவனை அடக்கம் செய்துகொண்டிருந்தனர். அவர்கள் வீரர்கள் வருவதைப் பார்த்தார்கள். உடனே (பயந்து) பிணத்தை எலிசாவின் கல்லறைக்குள் வீசிவிட்டு ஓடினார்கள். பிணமானது எலிசாவின் எலும்பின் மீது பட்டது, அதற்கு உயிர் வந்து எழுந்து நின்றான்!.
22 யோவாகாசின் ஆட்சிகாலம் முழுவதும், ஆராமின் அரசனான ஆசகேல் இஸ்ரவேலர்களுக்குத் துன்பம் கொடுத்துவந்தான்.
23 ஆனால் கர்த்தர் இஸ்ரவேலர்கள் மேல் கருணையோடு இருந்தார். அவர் ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு ஆகியவர்களோடு செய்த உடன்படிக்கையின் காரணமாக கர்த்தர் இஸ்ரவேலர்களை அழிப்பதில்லை. இன்னும் அவர்களை தூர எறியவில்லை.
24 ஆராமின் அரசனான ஆசகேல் மரித்தான், அவனது மகனான பெனாதாத் புதிய அரசன் ஆனான்.
25 அவன் மரிக்கும் முன்னர் ஆசகேல் யோவாசின் தந்தையான யோவகாசுடன் போரிட்டுப் போரில் பல நகரங்களைக் கைப்பற்றினான் ஆனால் இப்போது யோவாஸ் ஆசகேலின் மகனான பெனா தாத்தோடு போரிட்டு அந்நகரங்களை எடுத்துக் கொண்டான். மூன்றுமுறை யோவாஸ் பெனாதாத்தை வெற்றிப்பெற்று இஸ்ரவேல் நகரங்களைத் திரும்ப எடுத்துக்கொண்டான்.
2 இராஜாக்கள் 13 ERV IRV TRV