2 பேதுரு 1 ERV IRV TRV KJV ASV BBE DBY WBT WEB YLT
1 நம் கடவுளும் மீட்பருமாகிய இயேசு கிறிஸ்துவினால் விளைந்த ஏற்புடைமையின் அடிப்படையில் எங்களைப் போன்ற மதிப்புயர்ந்த நம்பிக்கையைப் பெற்றுள்ளோருக்கு, இயேசு கிறிஸ்துவின் பணியாளனும் திருத்தூதனுமான சீமோன் பேதுரு எழுதுவது:⒫2 கடவுளையும் நமது ஆண்டவராகிய இயேசுவையும் நீங்கள் அறிவதன் வாயிலாக உங்களுக்கு அருளும் நலமும் பெருகுக!3 தம்முடைய மாட்சியாலும் ஆற்றலாலும் கடவுள் நம்மை அழைத்துள்ளார். அவரை அறிந்துகொள்வதன் மூலம் இறைப்பற்றுடன் வாழ்க்கை நடத்துவதற்குத் தேவையான எல்லாவற்றையும் அவர் தம் இறை வல்லமையால் நமக்கு அருளியுள்ளார்.4 தீய நாட்டத்தால் சீரழிந்துள்ள உலகைவிட்டு விலகியோடி இறைத்தன்மையில் பங்கு பெறுங்கள். இதற்கென்றே கடவுள் நமக்கு உயர்மதிப்புக்குரிய மேலான வாக்குறுதிகளை அளித்துள்ளார்.5 ❮5-7❯ஆகையால் நீங்கள் உங்கள் நம்பிக்கையோடு நற்பண்பும், நற்பண்போடு அறிவும், அறிவோடு தன்னடக்கமும், தன்னடக்கத்தோடு மன உறுதியும், மன உறுதியோடு இறைப்பற்றும், இறைப்பற்றோடு சகோதர நேயமும், சகோதர நேயத்தோடு அன்பும் கொண்டு விளங்குமாறு முழு ஆர்வத்தோடு முயற்சி செய்யுங்கள்.6 Same as above7 Same as above8 இப்பண்புகள் உங்களுள் நிறைந்து பெருகுமானால் நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவை அறிந்துள்ள நீங்கள் சோம்பேறிகளாகவும் பயனற்றவர்களாகவும் இருக்க முடியாது.9 இப்பண்புகளைக் கொண்டிராதோர் குருடர், கிட்டப்பார்வையுடையோர்; முன்பு தாங்கள் செய்த பாவங்களிலிருந்து தூயோராக்கப் பட்டதை மறந்து போனவர்கள்.⒫10 ஆகவே, சகோதர சகோதரிகளே, நீங்கள் அழைக்கப்பட்டவர்கள்; தெரிந்து கொள்ளப்பட்டவர்கள்; இந்த நிலையில் உறுதியாக நிற்க முழுமுயற்சி செய்யுங்கள். இவ்வாறு செய்தால் நீங்கள் ஒருபோதும் தடுமாறமாட்டீர்கள்.11 அப்பொழுது நம் ஆண்டவரும் மீட்பருமாகிய இயேசு கிறிஸ்துவின் என்றும் நிலைக்கும் ஆட்சியில் பங்கேற்கும் உரிமை உங்களுக்கு நிறைவாக அருளப்படும்.⒫12 நீங்கள் இவற்றை அறிந்திருக்கிறீர்கள். ஏற்றுக்கொண்ட உண்மையில் உறுதியாகவும் இருக்கின்றீர்கள். இருப்பினும் அவற்றை மீண்டும் மீண்டும் நினைவுறுத்திக் கொண்டேயிருப்பேன்.13 என் உடலாகிய இந்தக் கூடாரத்தில் தங்கியிருக்கும்வரை இவ்வாறு உங்களுக்கு நினைவுறுத்தி விழிப்பூட்டுவது முறையெனக் கருதுகிறேன்.14 ஏனெனில் எனது இக்கூடாரம் பிரிக்கப்படும் நேரம் விரைவில் வரும் என்பது எனக்குத் தெரியும். நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவும் அதை எனக்குத் தெரிவித்துள்ளார்.15 நான் இறந்துபோன பிறகும் நீங்கள் இவற்றை எப்போதும் நினைவில்கொள்ள வேண்டும். இதற்காக நான் முழுமுயற்சி செய்யப்போகிறேன்.16 நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் வல்லமையையும் வருகையையும் பற்றி நாங்கள் உங்களுக்குத் தெரிவித்தபோது சூழ்ச்சியாகப் புனைந்த கதைகளை ஆதாரமாகக் கொண்டு பேசவில்லை. நாங்கள் அவரது மாண்பை நேரில் கண்டவர்கள்.17 “என் அன்பார்ந்த மைந்தர் இவரே. இவர் பொருட்டு நான் பூரிப்படைகிறேன்” என்று மாட்சிமிகு விண்ணகத்திலிருந்து அவரைப்பற்றிய குரல் ஒலித்தபோது, தந்தையாகிய கடவுளிடமிருந்து மதிப்பும் மாட்சியும் பெற்றார்.18 தூய மலையில் அவரோடு இருந்தபோது விண்ணிலிருந்து வந்த இக்குரலொளியை நாங்களே கேட்டோம்.⒫19 எனவே, இறைவாக்கினர் கூறியது இன்னும் உறுதியாயிற்று. அவர்கள் கூறியதை நீங்கள் கருத்திற்கொள்வது நல்லது; ஏனெனில், பொழுது புலர்ந்து விடிவெள்ளி உங்கள் இதயங்களில் தோன்றும்வரை அது இருண்ட இடத்தில் ஒளிரும் விளக்கைப் போன்றது.20 ஆனால், மறைநூலிலுள்ள எந்த இறைவாக்கும் எவரது சொந்த விளக்கத்திற்கும் உட்பட்டது அல்ல என்பதை நீங்கள் முதலில் அறியவேண்டும்.21 தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்ட மனிதர்கள் கடவுள் அருளியதை உரைத்ததே இறைவாக்கு. அது ஒருபோதும் மனித விருப்பத்தால் உண்டானது அல்ல.2 பேதுரு 1 ERV IRV TRV