2 சாமுவேல் 11 ERV IRV TRV KJV ASV BBE DBY WBT WEB YLT
1 இளவேனில் காலத்தில் அரசர்கள் போருக்குப் புறப்பட்டுச் செல்வது வழக்கம். அப்பொழுது தாவீது யோவாபைத் தம் பணியாளரோடும் இஸ்ரயேலர் அனைவரோடும் அனுப்பினார். அவர்கள் அம்மோனியரைத் தோற்கடித்து இரபாவை முற்றுகை இட்டனர். தாவீதோ எருசலேமிலேயே தங்கிவிட்டார்.⒫2 ஒரு நாள் மாலை வேளை, தாவீது தம் படுக்கையிலிருந்து எழுந்து அரண்மனை மாடியில் உலாவிக் கொண்டிருந்தார். அப்போது ஒரு பெண் குளித்துக் கொண்டிருந்ததை தாவீது மாடியிலிருந்து கண்டார். அவள் மிகவும் அழகிய தோற்றம் கொண்டிருந்தாள்.3 தாவீது அவள் யாரென்று கேட்க, ஆளனுப்பினார். “அவள் எலியாவின் மகளும் இத்தியர் உரியாவின் மனைவியுமான பத்சேபா” என்று கூறினர்.⒫4 தாவீது தூதரை அனுப்பி அவளை வரவழைத்தார். அப்பொழுதுதான் மாத விலக்கு முடிந்து அவள் தன்னைத் தூய்மைப்படுத்தியிருந்தாள். அவள் தம்மிடம் வந்ததும் அவர் அவளோடு உடலுறவு கொண்டார். பிறகு அவள் தன் இல்லம் சென்றாள்.5 அப்பெண் கருவுற்றுத் தாவீதிடம் ஆளனுப்பி, தான் கருவுற்றிருப்பதாக அவரிடம் தெரிவித்தாள்.⒫6 அப்பொழுது தாவீது “இத்தியனான உரியாவை என்னிடம் அனுப்பி வை” என்று யோவாபுக்குச் செய்தி அனுப்பினார். யோவாபு உரியாவைத் தாவீதிடம் அனுப்பிவைத்தார்.7 உரியா தாவீதிடம் வந்ததும் அவர் யோவாபின் நலம் பற்றியும் வீரர்களின் நலம் பற்றியும் போரின் போக்குப் பற்றியும் விசாரித்தார்.8 பிறகு தாவீது உரியாவிடம், ‘உன் வீட்டுக்குச் சென்று உன் பாதங்களைக் கழுவிக்கொள்’ என்றார். உரியா அரண்மனையை விட்டுச் சென்றதும் அவர் பின்னாலேயே அரசர் அன்பளிப்பு அனுப்பி வைத்தார்.9 உரியாவோ தம் தலைவரின் பணியாளர் அனைவரோடும் அரண்மனை வாயிலிலேயே படுத்துக் கொண்டார்; தம் வீட்டுக்குச் செல்லவில்லை.⒫10 உரியா தம் வீட்டுக்கு செல்லவில்லை என்று தாவீது அறிந்ததும் தாவீது அவரிடம், “நீ நெடும் தொலையிலிருந்து வரவில்லையா? பின் ஏன் நீ வீட்டிற்குச் செல்லவில்லை?” என்று கேட்டார்.11 அதற்கு உரியா தாவீதிடம், “பேழையும் இஸ்ரயேலரும் யூதாவினரும் கூடாரங்களில் தங்கியிருக்கின்றனர். என் தலைவர் யோவாபும் என் தலைவரின் பணியாளரும் திறந்த வெளியில் தங்கியிருக்கின்றனர். நான் மட்டும் என் வீட்டிற்குச் சென்று உண்டு குடித்தும் என் மனைவியோடு உறவுகொண்டும் இருப்பேனா? உம்மேலும் உம் உயிர்மேலும் ஆணை! நான் அப்படிச் செய்யவே மாட்டேன்” என்று சொன்னார்.⒫12 தாவீது உரியாவிடம், “இன்றும் இங்கேயே தங்கு. நாளை உன்னை அனுப்பி வைக்கிறேன்” என்றார். அன்றும் மறுநாளும் உரியா எருசலேமிலேயே தங்கினார்.13 தாவீது அவரை அழைத்து அவரோடு உண்டு குடித்து, அவருக்கு குடிபோதையூட்டினார். மாலையில் அவர் தம் தலைவரின் பணியாளரோடு தம் படுக்கையில் தூங்கச் சென்றார். தம் வீட்டுக்கு அவர் செல்லவே இல்லை.⒫14 காலையில் தாவீது யோவாபுக்கு ஒரு மடல் எழுதி, அதை உரியாவின் கையில் கொடுத்தனுப்பினார்.15 அம்மடலில் அவர், “உரியாவைப் போர் கடுமையாக நடக்கும் முன்னிலையில் நிறுத்தி, அவனைவிட்டுப் பின்வாங்கு. அவன் வெட்டுண்டு மடியட்டும்” என்று குறிப்பிட்டிருந்தார்.16 யோவாபு நகரை முற்றுகையிட்டுக் கொண்டிருந்தபொழுது வலிமைமிகு எதிர்வீரர்கள் இருந்த இடத்தை அறிந்து அங்கே உரியாவை நிறுத்தினார்.17 நகரின் ஆள்கள் புறப்பட்டுவந்து யோவாபைத் தாக்கினர். அப்பொழுது போரில் வீழ்ந்தவர்களுள் தாவீதின் வீரர்களும் சிலர். இத்தியர் உரியாவும் மாண்டார்.⒫18 பிறகு, யோவாபு போரைப் பற்றிய அனைத்துச் செய்திகளையும் தாவீதுக்குச் சொல்லி அனுப்பினார்.19 மேலும், அவர் தூதனுக்கு இவ்வாறு கட்டளையிட்டிருந்தார்; “போரைப்பற்றிய அனைத்துச் செய்திகளையும் அரசருக்குச் சொல்லி முடிப்பதற்குள்20 அரசர் ஒரு வேளை வெகுண்டெழுந்து, உன்னிடம், ‘நீங்கள் ஏன் நகரை அணுகிப் போரிட்டீர்கள்? அவர்கள் மதில்களினின்று தாக்குவார்கள் என அறியீரோ?21 எருபசத்தின் மகன் அபிமெலக்கைக் கொன்றது யார்? மதில் சுவரினின்று ஒரு எந்திரக்கல்லை எறிந்தவள் ஒரு பெண்ணல்லவா? அவன் தேபேசில் இறந்துவிட்டானே? நீங்கள் ஏன் மதில்களை நெருங்கினீர்கள்?’ என்று கேட்டால், நீ ‘உம் பணியாளன் இறந்துவிட்டான்’ என்று சொல்.”⒫22 தூதன் புறப்பட்டுச் சென்று யோவாபு சொல்லியனுப்பிய அனைத்தையும் தாவீதிடம் கூறினான்.23 தூதன் தாவீதிடம் கூறியது: "அந்த ஆள்கள் எங்களை மேற்கொண்டு எங்களுக்கு எதிராகத் திறந்த வெளிக்கு வந்தார்கள். நாங்களோ நுழைவாயில்வரை அவர்களைத் துரத்தினோம்.24 அப்போது மதில்மேலிருந்து வில்வீரர் உம் பணியாளர்களைத் தாக்கினர்; அரசரின் பணியாளருள் சிலர் இறந்தனர்; இத்தியரான உம் பணியாளர் உரியாவும் இறந்துவிட்டார்”⒫25 அப்பொழுது தாவீது தூதனிடம், “நீ யோவாபிடம் சென்று ‘இதைப்பற்றி நீ கவலைப்படவேண்டாம். இங்கொருவனும் அங்கொருவனும் வாளுக்கு இரையாகின்றனர். நகருக்கு எதிராக இன்னும் கடுமையாகப் போர்புரிந்து அதை அழித்து விடு’ என்று சொல்லி அவனை உற்சாகப்படுத்து” என்றார்.⒫26 உரியானின் மனைவி தன் கணவன் இறந்துவிட்டதைக் கேள்வியுற்று அவருக்காகப் புலம்பி அழுதாள்.27 துக்ககாலம் முடிந்ததும் தாவீது ஆளனுப்பி அவளைத் தம் வீட்டிற்குக் கொண்டு வந்தார். அவள் அவருக்கு மனைவியாகி ஆண் குழந்தை ஒன்றைப் பெற்றெடுத்தாள். தாவீது செய்த இச்செயல் ஆண்டவரின் பார்வையில் தீயதாக இருந்தது.