1 “யோனத்தானின் பொருட்டு சவுலின் வீட்டாருக்கு நான் கருணை காட்டுவதற்கு இன்னும் யாராவது இருக்கின்றனரா?” என்று தாவீது கேட்டார்.2 சவுலின் வீட்டைச் சார்ந்த சீபா என்ற ஓர் பணியாளன் இருந்தான். அவனைத் தாவீதிடம் கூட்டிச் சென்றனர். “நீதான் சீபாவா?” என்று அரசர் அவனிடம் கேட்க, “அடியேன்தான்” என்று அவன் பதிலிறுத்தான்.3 “கடவுளின் கருணையை நான் சவுலின் வீட்டாருக்குக் காட்டுவதற்கு இன்னும் யாராவது இருக்கின்றனரா?” என்று அரசர் கேட்டார். “யோனத்தானின் இருகால் ஊனமுற்ற மகன் ஒருவன் இருக்கிறான்” என்று அரசரிடம் சீபா பதிலளித்தான்.4 “எங்கே அவன்?” என்று அரசர் அவனிடம் கேட்க, “லோதாபாரில் அம்மியேலின் மகன் மாக்கிரின் வீட்டில் அவன் இருக்கிறான்” என்று அரசனிடம் சீபா கூறினான்.5 லோதபாருக்கு ஆளனுப்பி அம்மியேலின் மகன் மாக்கிரின் வீட்டிலிருந்த அவனை அரசர் தாவீது கொண்டு வரச்செய்தார்.6 சவுலின் புதல்வனான யோனத்தானின் மகன் மெபிபொசேத்து தாவீதிடம் வந்து முகம் குப்புற விழுந்து வணங்கினான். “மெபிபொசேத்து” என்று தாவீது அழைக்க, “இதோ! உம் அடியான்” என்று அவன் பதிலிறுத்தான்.7 தாவீது அவனிடம் “அஞ்சாதே! உன் தந்தை யோனத்தானின் பொருட்டு நான் உனக்குக் கருணை காட்டுவது உறுதி. உன் மூதாதை சவுலின் நிலம் அனைத்தையும் உனக்கு மீண்டும் கிடைக்கச் செய்வேன். நீ எப்போதும் என்னுடன் உணவருந்துவாய்” என்று கூறினார்.8 அவன் வணங்கி, “நான் செத்த நாய் போன்ற பணியாளன்; நீர் என்னைக் கடைக்கண் பார்ப்பதற்கு எனக்கு என்ன தகுதி உள்ளது?” என்றான்.⒫9 பிறகு, அரசர் சவுலின் பணியாளன் சீபாவை அழைத்து, ‘சவுலுக்கும் அவர்தம் அனைத்து வீட்டாருக்கும் உரியதெல்லாம் நான் உன் தலைவரின் பேரனுக்கு அளித்துவிட்டேன்.10 உன் தலைவரின் பேரன் உண்பதற்காக நீயும், உன் பிள்ளைகளும், உன் பணியாளரும் அவனுக்காக நிலத்தை உழுது விளைச்சலைக் கொண்டுவருவீர்கள். ஆனால், உன் தலைவரின் பேரன் மெபிபோசேத்து எப்போதும் என்னுடன் உணவருந்துவான்” என்று கூறினார்.11 “என் தலைவராம் அரசர் தம் பணியாளனுக்கு இட்ட கட்டளைபடியே உம் பணியாளனும் செய்வான்” என்று அரசரிடம் சீபா கூறினான். இளவரசர்களில் ஒருவரைப் போலவே மெபிபொசேத்து தாவீதுடன் உணவருந்தி வந்தான்.12 மெபிபொசேத்துக்கு மீக்கா என்ற ஓர் இளம் மகன் இருந்தான். சீபாவின் வீட்டைச்சார்ந்த அனைவரும் மெபிபொசேத்தின் பணியாளராக இருந்தனர்.13 இரு கால் ஊனமான மெபிபொசேத்து அரசருடன் தொடர்ந்து உணவருந்திவந்தான். எனவே, எருசலேமிலேயே தங்கியிருந்தான்.
By continuing to browse the site, you are agreeing to our use of cookies.