அப்போஸ்தலர் 2 ERV ஒப்பிடு Tamil Easy Reading Version
1 பெந்தெகோஸ்தே நாளில் அப்போஸ்தலர் அனைவரும் ஓரிடத்தில் கூடியிருந்தனர்.
2 திடீரென வானிலிருந்து ஓசை ஒன்று எழுந்தது. பெருங்காற்று அடித்தாற்போல அது ஒலித்தது. அவர்கள் அமர்ந்திருந்த வீடு முழுவதையும் அவ்வொலி நிரப்பிற்று.
3 நெருப்புக் கொழுந்து போன்றவற்றை அவர்கள் கண்டனர். அக்கொழுந்துகள் பிரிந்து சென்று அங்கிருந்த ஒவ்வொருவர் மேலும் நின்றன.
4 அவர்கள் எல்லோரும் பரிசுத்த ஆவியால் நிரப்பப்பட்டார்கள். பல்வேறு மொழிகளில் அவர்கள் பேச ஆரம்பித்தார்கள். இப்படிப்பட்ட வல்லமையை பரிசுத்த ஆவியானவர் அவர்களுக்குக் கொடுத்துக்கொண்டிருந்தார்.
5 அக்காலத்தில் எருசலேமில் மிக பக்திமான்களாகிய யூதர்கள் சிலர் தங்கியிருந்தனர். உலகத்தின் எல்லா தேசத்தையும் சார்ந்தவர்களாக இந்த மனிதர்கள் இருந்தனர்.
6 ஒலியைக் கேட்டு இம்மனிதர்கள் பெருங்கூட்டமாக அங்கு வந்தனர். அப்போஸ்தலர்கள் பேசிக்கொண்டிருக்கையில் ஒவ்வொரு மனிதனும் தனது சொந்த மொழியில் கேட்டதால் அம்மனிதர்கள் வியப்புற்றனர்.
7 யூதர்கள் இதனால் ஆச்சரியமடைந்தனர். அப்போஸ்தலர்கள் எவ்வாறு இதைச் செய்ய முடிந்தது என்பதை அவர்களால் புரிந்துகொள்ள முடியவில்லை. அவர்கள், “பாருங்கள்! பேசிக்கொண்டிருக்கும் இந்த மனிதர்கள் எல்லோரும் கலிலேயாவைச் சேர்ந்தவர்கள்!
8 ஆனால் நமது மொழிகளில் அவர்கள் பேசிக்கொண்டிருப்பதைக் கேட்கிறோம். எப்படி இது இயலும்? நாம்
9 பார்த்தியா, மேதியா, ஏலாம், மெசொபொதாமியா, யூதேயா, கப்பதோகியா, பொந்து, ஆசியா,
10 பிரிகியா, பம்பிலியா, எகிப்து, சிரேனே நகரங்களிற்கு அருகேயுள்ள லிபியா நாட்டுப் பகுதிகள்,
11 கிரேத்தா, ரோமிலிருந்து வந்த மக்கள் மற்றும் அரேபியா ஆகியவற்றைச் சேர்ந்தவர்கள். நம்மில் சிலர் யூதர்களாகப் பிறந்தவர்கள் மற்றவர்கள் யூதர்களாக மதம் மாறியவர்கள். நாம் வெவ்வேறு நாட்டினர். ஆனால் இவர்கள் நம் மொழிகளில் பேசுவதைக் கேட்கிறோமே! அவர்கள் தேவனைக் குறித்துக் கூறும் மேன்மையான காரியங்களை நம்மெல்லோராலும் புரிந்துகொள்ள முடிகிறதே” என்றார்கள்.
12 மக்கள் அனைவரும் வியப்புற்றவர்களாகவும் குழப்பமடைந்தவர்களாகவும் காணப்பட்டனர். அவர்கள் ஒருவரையொருவர் நோக்கி, “என்ன நடந்துகொண்டிருக்கிறது?” என்று வினவினர்.
13 பிற மக்கள் அப்போஸ்தலர்களைப் பார்த்துச் சிரித்தனர். அம்மக்கள் அப்போஸ்தலர் மிகுதியான மதுவைப் பருகியிருந்தனர் என நினைத்தனர்.
14 அப்பொழுது பேதுரு மற்ற அப்போஸ்தலர் பதினொருவரோடும் எழுந்து நின்றான். எல்லா மக்களும் கேட்கும்படியாக உரக்கப் பேசினான். அவன், “எனது யூத சகோதரர்களே, எருசலேமில் வசிக்கும் மக்களே, நான் கூறுவதைக் கவனியுங்கள். நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டிய சில கருத்துக்களை உங்களுக்குக் கூறுவேன். கவனமாகக் கேளுங்கள்.
15 நீங்கள் நினைக்கிறது போல் இம்மனிதர்கள் மது பருகியிருக்கவில்லை. இப்போது காலை ஒன்பது மணிதான்.
16 இங்கு இன்றைக்கு நிகழ்ந்துகொண்டிருப்பதைக் குறித்து யோவேல் என்னும் தீர்க்கதரிசி எழுதியிருக்கிறார். யோவேல் கீழ்க்கண்டவாறு எழுதியுள்ளார்:
17 “‘தேவன் கூறுகிறார், கடைசி நாட்களில் நான் எனது ஆவியை எல்லா மக்களுக்கும் அள்ளி வழங்குவேன். ஆண் மக்களும், பெண்மக்களும் தீர்க்கதரிசனம் உரைப்பர். உங்கள் இளைஞர் தரிசனம் காண்பார்கள். உங்கள் முதியோர் விசேஷக் கனவுகள் காண்பர்.
18 அந்நேரத்தில் எனது ஆவியை எனது ஊழியர்களாகிய ஆண்களுக்கும் பெண்களுக்கும் கொடுப்பேன். அவர்கள் தீர்க்கதரிசனம் உரைப்பர்.
19 மேலே வானில் வியப்புறும் காட்சிகளைக் காண்பிப்பேன். கீழே பூமியிலும் சான்றுகள் தருவேன். அங்கு இரத்தம், நெருப்பும், புகை மண்டலமும் இருக்கும்.
20 சூரியன் இருளாக மாறும். நிலா இரத்தம் போல் சிவப்பாகும். அப்போது கர்த்தருடைய மகத்தான மகிமை மிக்க நாள் வரும்.
21 கர்த்தர் மேல் நம்பிக்கை வைக்கும் ஒவ்வொரு மனிதனும் இரட்சிக்கப்படுவான்.’
22 “எனது யூத சகோதரர்களே, இந்த வார்த்தைகளைக் கவனியுங்கள். நாசரேத்தின் இயேசு மிகச் சிறப்பான மனிதர். தேவன் இதைத் தெளிவாக உங்களுக்குக் காட்டினார். இயேசுவின் மூலமாக அவர் செய்த வல்லமை மிக்க வியப்பான காரியங்களால் தேவன் இதை நிரூபித்தார். நீங்கள் எல்லோரும் இந்தக் காரியங்களைப் பார்த்தீர்கள். எனவே இது உண்மையென்பது உங்களுக்குத் தெரியும்.
23 இயேசு உங்களுக்குக் கொடுக்கப்பட்டார். நீங்கள் அவரைக் கொன்றீர்கள். தீயவர்களின் உதவியோடு இயேசுவைச் சிலுவையில் அறைந்தீர்கள். ஆனால் இவையெல்லாம் நடக்குமென்பதை தேவன் அறிந்திருந்தார். இது தேவனுடைய திட்டமாக இருந்தது. வெகுகாலத்திற்கு முன்னரே தேவன் இந்தத் திட்டத்தை வகுத்திருந்தார்.
24 மரணத்தின் வேதனையை இயேசு அனுபவித்தார். ஆனால் தேவன் அவரை விடுவித்தார். தேவன் இயேசுவை மரணத்திலிருந்து எழுப்பினார். மரணம் இயேசுவைத் தொடர்ந்து தன் பிடிக்குள் வைத்திருக்க முடியவில்லை.
25 தாவீது இயேசுவைக் குறித்து இவ்வாறு கூறினான்: “‘நான் ஆண்டவரை எப்போதும் என்முன் காண்கிறேன். என்னைப் பாதுகாப்பதற்கு எனது வலப்புறத்தே உள்ளார்.
26 எனவே என் உள்ளம் மகிழுகிறது, என் வாய் களிப்போடு பேசுகிறது. ஆம், எனது சரீரமும் கூட நம்பிக்கையால் வாழும்.
27 ஏனெனில் மரணத்தின் இடத்தில் எனது ஆத்துமாவை நீர் விட்டு விடுவதில்லை. உமது பரிசுத்தமானவரின் சரீரத்தைக் கல்லறைக்குள் அழுகிவிட நீர் அனுமதிப்பதில்லை.
28 வாழும் வகையை எனக்குப் போதித்தீர். என்னருகே நீர் வந்து அளவற்ற ஆனந்தம் தருவீர்.’
29 “எனது சகோதரர்களே, நமது முன்னோராகிய தாவீதைக் குறித்து உண்மையாகவே உங்களுக்கு என்னால் சொல்லமுடியும். அவன் இறந்து புதைக்கப்பட்டான். அவன் புதைக்கப்பட்ட இடம் இங்கேயே நம்மிடையே இன்றும் உள்ளது.
30 தாவீது ஒரு தீர்க்கதரிசி. தேவன் கூறிய சில செய்திகளை அவன் அறிந்திருந்தான். தாவீதின் குடும்பத்திலுள்ள ஒருவரை தாவீதைப்போன்று மன்னனாக்குவேன் என்று தேவன் தாவீதுக்கு வாக்குறுதி அளித்திருந்தார்.
31 அது நடக்கும் முன்பே தாவீது அதனை அறிந்திருந்தான். எனவேதான் அவரைக் குறித்து தாவீது இவ்வாறு கூறினான். “‘அவர் மரணத்தின் இடத்தில் விடப்படவில்லை. அவர் சரீரம் கல்லறையில் அழுகவில்லை.’ தாவீது மரணத்தின்று எழும்பும் கிறிஸ்துவைக் குறித்துப் பேசினான்.
32 எனவே தாவீதை அல்ல, இயேசுவையே தேவன் மரணத்தினின்று எழுப்பினார். நாங்கள் எல்லோரும் இதற்கு சாட்சிகள். நாங்கள் அவரைக் கண்டோம்.
33 இயேசு பரலோகத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டார். இப்போது இயேசு தேவனோடு, தேவனுடைய வலது பக்கத்தில் இருக்கிறார். பிதா பரிசுத்தாவியை இயேசுவுக்குக் கொடுத்துள்ளார். பிதா கொடுப்பதாக வாக்குறுதி அளித்தது பரிசுத்த ஆவியேயாகும். எனவே இயேசு அந்த ஆவியை இப்பொழுதுகொடுத்துக்கொண்டிருக்கிறார். இதையே நீங்கள் பார்க்கவும், கேட்கவும் செய்கிறீர்கள்.
34 தாவீது பரலோகத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டவரல்ல. பரலோகத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டவர் இயேசுவே. தாவீது கூறினான், “‘தேவன் என் கர்த்தரிடம் சொன்னார், உம் எதிரிகள் அனைவரையும் உம் அதிகாரத்தின் கீழ் கொண்டு வரும்வரை என் வலதுபுறத்தில் உட்கார்ந்துகொள்ளும்.’
36 “எனவே எல்லா யூத மனிதர்களும் இதை உண்மையாகத் தெரிந்திருக்க வேண்டும். ஆண்டவராகவும் கிறிஸ்துவாகவும் இருக்கும்படியாக இயேசுவை தேவன் உண்டாக்கினார். அவரே நீங்கள் சிலுவையில் அறைந்த மனிதர்” என்றான்.
37 மக்கள் இதைக் கேட்டபோது அவர்கள் தங்கள் இதயத்தில் மிகவும் வருத்தம் அடைந்தார்கள். அவர்கள் பேதுருவையும் பிற அப்போஸ்தலரையும் நோக்கி, “நாங்கள் என்ன செய்ய வேண்டும்?” என்று கேட்டார்கள்.
38 பேதுரு அவர்களை நோக்கி, “நீங்கள் ஒவ்வொருவரும் உங்கள் இருதயத்தையும் வாழ்க்கையையும் மாற்றி, இயேசு கிறிஸ்துவின் பெயரில் ஞானஸ்நானம் பெற்றுக்கொள்ளுங்கள். அப்போது தேவன் உங்கள் பாவங்களை மன்னிப்பார். நீங்களும் பரிசுத்த ஆவியின் வரத்தைப் பெறுவீர்கள்.
39 இந்த வாக்குறுதி உங்களுக்குரியது. அது உங்கள் பிள்ளைகளுக்கும் தொலைவில் வாழ்கின்ற எல்லா மக்களுக்கும் கூட உரியது. ஆண்டவராகிய நமது தேவன் தன்னிடம் அழைக்கிற ஒவ்வொரு மனிதனுக்கும் அது உரியது” என்று கூறினான்.
40 வேறு பல வார்த்தைகளையும் கூறி பேதுரு அவர்களை எச்சரித்தான். அவன் அவர்களை, “இன்று வாழ்கின்ற மக்களின் தீமைகளிலிருந்து உங்களைக் காத்துக்கொள்ளுங்கள்” என்று வேண்டினான்.
41 பேதுரு கூறியவற்றை ஏற்றுக்கொண்ட அந்த மக்கள் ஞானஸ்நானம் பெற்றுக்கொண்டனர். அந்த நாளில் விசுவாசிகளின் கூட்டத்தில் சுமார் 3,000 மக்கள் சேர்த்துக்கொள்ளப்பட்டனர்.
42 விசுவாசிகள் தொடர்ந்து ஒன்றாக சந்தித்தனர். அப்போஸ்தலரின் போதனையைக் கற்பதற்குத் தங்கள் நேரத்தைச் செலவிட்டனர். விசுவாசிகள் ஒருவரோடொருவர் பகிர்ந்துகொண்டனர். அவர்கள் ஒருமித்து உண்டு, ஒருமித்து பிரார்த்தனை செய்தார்கள்.
43 பல வல்லமை மிக்க, வியப்பான காரியங்களை அப்போஸ்தலர்கள் செய்துகொண்டிருந்தனர். ஒவ்வொருவரும் தேவனை மிகவும் மரியாதையாக உணர்ந்தனர்.
44 எல்லா விசுவாசிகளும் ஒருமித்து வசித்தனர். அவர்கள் எல்லாவற்றையும் பகிர்ந்துகொண்டனர்.
45 விசுவாசிகள் அவர்களது நிலங்களையும் அவர்களுக்குச் சொந்தமான பொருட்களையும் விற்றனர். பின்னர் பணத்தைப் பங்கிட்டு, தேவைப்பட்ட ஒவ்வொருவருக்கும் அவர்களது தேவைக்கேற்பக் கொடுத்தனர்.
46 ஒவ்வொரு நாளும் விசுவாசிகள் தேவாலயத்தில் சந்தித்தனர். அவர்களது குறிக்கோள் ஒன்றாகவே இருந்தது. அவர்களுடைய வீடுகளில் ஒருமித்து உண்டனர். அவர்கள் உணவைப் பங்கிட்டுக்கொள்வதிலும் களிப்புமிக்க உள்ளங்களோடு உண்பதிலும் மகிழ்ச்சியடைந்தனர்.
47 விசுவாசிகள் தேவனை வாழ்த்தினர். எல்லா மக்களும் அவர்களை விரும்பினர். ஒவ்வொரு நாளும் அதிகமதிகமான மக்கள் இரட்சிக்கப்பட்டனர். விசுவாசிகளின் கூட்டத்தில் கர்த்தர் அம்மக்களைச் சேர்த்துக்கொண்டிருந்தார்.