தானியேல் 1 ERV ஒப்பிடு Tamil Easy Reading Version
1 நேபுகாத்நேச்சார் பாபிலோனின் அரசனாக இருந்தான். நேபுகாத்நேச்சார் எருசலேமிற்கு வந்தான். நேபுகாத்நேச்சார் அவனது படையுடன் எருசலேமை முற்றுகையிட்டான். யூதாவின் அரசனாகிய யோயாக்கீமின் ஆட்சியின் மூன்றாம் ஆண்டில் இது நடந்தது.
2 கர்த்தர் யூதாவின் அரசனான யோயாக்கீமை, நேபுகாத்நேச்சார் தோற்கடிக்கும்படி அனுமதித்தார். தேவனுடைய ஆலயத்திலிருந்து நேபுகாத்நேச்சார் அனைத்துப் பாத்திரங்களையும் மற்ற பொருட்களையும் எடுத்துக்கொண்டான். நேபுகாத்நேச்சார் அவற்றைப் பாபிலோனுக்குக் கொண்டுபோனான். நேபுகாத்நேச்சார் அப்பொருட்களை அவனது விக்கிரக தெய்வங்களின் ஆலயத்தில் வைத்தான்.
3 பிறகு அரசனான நேபுகாத்நேச்சார் அஸ்பேனாஸ் என்பவனுக்கு ஒரு கட்டளை கொடுத்தான். (அஸ்பேனாஸ், அரசனுக்குப் பணிவிடை செய்யும் அலிகளில் மிக முக்கியமான தலைவன்). அரசன், அஸ்பேனாசிடம் அவனது வீட்டிற்கு சில யூதர்களை அழைத்துவரும்படி சொன்னான். நேபுகாத்நேச்சார் முக்கியமான குடும்பங்களிலிருந்தும் இஸ்ரவேல் அரசகுடும்பங்களிலிருந்தும், யூதர்களை விரும்பினான்.
4 அரசனான நேபுகாத்நேச்சார் ஆரோக்கியமான இளம் யூதர்களை மட்டுமே விரும்பினான். தம் உடம்பில் தழும்போ, காயமோ, குறைபாடுகளோ இல்லாத இளைஞர்களை அரசன் விரும்பினான். அரசன் அழகான சுறுசுறுப்பான இளைஞர்களை விரும்பினான். இளைஞர்களில் எல்லாவற்றையும் எளிதாகவும், வேகமாகவும், கற்றுக்கொள்ளும் ஆற்றலுடையவர்களை அரசன் விரும்பினான். அரசன், தன் வீட்டில் வேலை செய்யத் தகுதியுள்ள இளைஞர்களை விரும்பினான். அரசன் அஸ்பேனாசிடம், அந்த இஸ்ரவேல் இளைஞர்களுக்குக் கல்தேயரின் எழுத்தையும், மொழியையும் கற்றுக்கொடுக்கும்படி கூறினான்.
5 அரசனான நேபுகாத்நேச்சார் ஒரு குறிப்பிட்ட அளவுள்ள உணவையும் திராட்சைரசத்தையும் இளைஞர்களுக்குக் கொடுத்தான். அது அரசன் உண்ணும் உணவின் தரத்தில் இருந்தது. அரசன் இஸ்ரவேலிலிருந்து கொண்டுவரப்பட்ட இளைஞர்கள் மூன்று ஆண்டுகள் பயிற்சிபெற வேண்டும் என விரும்பினான். மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு அந்த இளைஞர்கள் பாபிலோன் அரசனது பணியாட்களாக இருக்கவேண்டும்.
6 அந்த இளைஞர்களுள் தானியேல், அனனியா, மீஷாவேல், அசரியா என்பவர்கள் இருந்தார்கள். இந்த இளைஞர்களெல்லாம் யூதா கோத்திரத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தனர்.
7 அஸ்பேனாஸ் அந்த இளைஞர்களுக்கு வேறு பெயர்களைக் கொடுத்தான். தானியேலுக்குப் பெல்தெஷாத்சார் என்றும், அனனியாவுக்குச் சாத்ராக் என்றும், மீஷாவேலுக்கு மேஷாக் என்றும், அசரியாவுக்கு ஆபேத்நேகோ என்றும் புதிய பெயர்கள் கொடுக்கப்பட்டன.
8 தானியேல் அரசனது வளமான உணவையும், திராட்சைரசத்தையும் உண்ண விரும்பவில்லை. தானியேல் அந்த உணவினாலும் திராட்சைரசத்தாலும் தன்னைத்தானே அசுத்தப்படுத்திக்கொள்ள விரும்பவில்லை. எனவே, அவன் அஸ்பேனாசிடம் தன்னைத் தானே அசுத்தப்படுத்திக்கொள்ளாமல் இருக்க அனுமதி கேட்டான்.
9 தேவன், அஸ்பேனாஸ் தானியேலிடம் தயவும் இரக்கமும் கொள்ளும்படி செய்தார்.
10 ஆனால் அஸ்பேனாஸ் தானியேலிடம், “நான் என் அரசரான எஜமானருக்குப் பயப்படுகிறேன். அரசர் இந்த உணவையும், திராட்சைரசத்தையும் உனக்குத் தரும்படி கட்டளையிட்டிருக்கிறார். நீ இந்த உணவை உண்ணாவிட்டால், பலவீனமுடையவனாகவும், நோயாளியாகவும் ஆவாய். நீ உன் வயதுள்ள மற்ற இளைஞர்களைவிட மோசமான நிலையில் இருப்பாய். அரசர் இதனைப் பார்த்து என் மீது கோபங்கொள்வார். அவர் என் தலையை வெட்டிவிடலாம், ஆதற்கு உனது தவறே காரணமாகும்” என்று சொன்னான்.
11 பிறகு தானியேல் அவர்களது காவலனிடமும் பேசினான். அஸ்பேனாசு அந்தக் காவலனிடம் தானியேல், அனனியா, மீஷாவேல், அசரியா ஆகியோரைக் கவனித்துக் கொள்ளும்படி கட்டளையிட்டிருந்தான்.
12 தானியேல் காவலனிடம் “தயவுசெய்து பின் வரும் சோதனையைப் பத்து நாட்களுக்கு எங்களுக்குத் தாரும். எங்களுக்கு உண்ண காய்கறிகளும், குடிக்கத் தண்ணீரும் தவிர வேறு எதுவும் தரவேண்டாம்.
13 பத்து நாட்களுக்குப் பின்னர் அரசனது உணவை உண்ணும் மற்றவர்களோடு எங்களை ஒப்பிட்டுப் பார்த்து, யார் ஆரோக்கியமாக இருக்கிறார்கள் எனப் பாரும். பிறகு நீர் எங்களை எவ்வாறு நடத்துவது என்று முடிவு செய்யலாம். நாங்கள் உமது பணியாளர்கள்” என்று சொன்னான்.
14 எனவே, காவலன் பத்து நாட்களுக்குத் தானியேல், அனனியா, மீஷாவேல், அசரியா ஆகியோரைச் சோதிக்க ஒப்புக்கொண்டான்.
15 பத்து நாட்களுக்குப் பிறகு, தானியேலும் அவனது நண்பர்களும் அரசனது உணவை உண்டுவந்த மற்றவர்களைவிட ஆரோக்கியமாகக் காணப்பட்டனர்.
16 எனவே, காவலன் அரசனது உணவையும் திராட்சைரசத்தையும் தொடர்ந்து கொடுப்பதை நிறுத்தினான். அதற்குப் பதிலாக அவன் தானியேல், அனனியா, மீஷாவேல், அசரியா ஆகியோருக்குக் காய்கறிகளைக் கொடுத்தான்.
17 தேவன்,தானியேல், அனனியா, மீஷாவேல், அசரியா ஆகியோருக்கு ஞானத்தையும், பலவித எழுத்துக்களையும், அறிவியலையும் கற்றுக்கொள்ளும் திறமையையும் கொடுத்தார். தானியேல், பலவித தரிசனங்களையும், கனவுகளையும் புரிந்துகொள்ள முடிந்தது.
18 அரசன் அனைத்து இளைஞர்களும் மூன்று ஆண்டுகளுக்குப் பயிற்சி பெறவேண்டும் என்று விரும்பினான். அக்கால முடிவில் அரசனான நேபுகாத்நேச்சாரின் முன்பு எல்லா இளைஞர்களையும் அஸ்பேனாஸ் கொண்டுவந்தான்.
19 அரசன் அவர்களோடு பேசினான். அரசன் அந்த இளைஞர்களில் எவரும் தானியேல், அனனியா, மீஷாவேல், அசரியா ஆகியவர்களைப் போன்று சிறந்தவர்களாக இல்லை என்பதைக் கண்டுகொண்டான். எனவே அந்த நான்கு இளைஞர்களும் அரசனின் பணியாட்கள் ஆயினர்.
20 ஒவ்வொரு முறையும் அரசன் அவர்களிடம் கேட்கும் முக்கியமான கேள்விகளுக்கு அவர்கள் மிகுந்த ஞானத்தையும் புத்தியையும் காட்டினார்கள். அரசன் அவனது அரசாங்கத்தில் உள்ள மந்திரவாதிகளையும், ஞானிகளையும்விட இவர்கள் பத்து மடங்கு சிறந்தவர்கள் என்று கண்டான்.
21 எனவே தானியேல் தெடார்ந்து அரசனது பணியாளாக கோரேஸ் ஆண்ட முதலாம் ஆண்டு மட்டும் இருந்தான்.