1 இது இஸ்ரவேல் ஜனங்களுக்கு மோசே அறிவித்தச் செய்தி. யோர்தான் நதிக்குக் கிழக்கில் உள்ள பாலைவனத்தின் பள்ளத் தாக்கில் அவர்கள் இருந்தபொழுது, மோசே அவர்களிடம் சொன்னான். அப்பகுதி சூப்புக்கு எதிராகவும், பாரான் பாலைவனத்திற்கும் தோப்பேல், லாபான், ஆஸரோத், திசாகாப் ஆகிய நகரங்களுக்கு இடையிலும் இருந்தது.
2 ஓரேப் மலையிலிருந்து (சீனாய்) சேயீர் குன்றுகள் வழியாக காதேஸ்பர்னேயாவுக்கு பயணம் செய்வதற்கு பதினோரு நாட்கள் ஆகும்.
3 ஆனால் எகிப்தை விட்டுப் புறப்பட்ட இஸ்ரவேல் ஜனங்கள் நாற்பதாண்டுகள் கழிந்தபின்னரே இவ்விடத்தை அடைந்தனர். நாற்பதாவது ஆண்டின் பதினோராவது மாதத்தின் முதல் நாளன்று, மோசே அந்த ஜனங்களிடம் பேசினான். அவர்களிடம் கூறுமாறு தேவன் கட்டளையிட்ட எல்லாவற்றையும் மோசே எடுத்துச் சொன்னான்.
4 கர்த்தர் சீகோனையும் ஓகையும் வெற்றிக்கொண்ட பின்னர் இது நடந்தது. (எஸ்பானில் வசித்த சீகோன் எமோரியரின் அரசன். பாசான் மன்னனாகிய ஓக், அஸ்தரோத்திலும் எதிரேயிலும் வசித்தான்.)
5 இஸ்ரவேல் ஜனங்கள் யோர்தான் நதிக்குக் கிழக்கே மோவாப் நிலப்பகுதியில் இருந்தபொழுது, தேவன் கட்டளையிட்டவற்றை மோசே அவர்களுக்கு விளக்கமாக எடுத்துச் சொன்னான். மோசே,
6 “நமது தேவனாகிய கர்த்தர் ஓரேப் மலையில் (சீனாய்) நம்மிடம் பேசினார். தேவன் சொன்னது என்னவென்றால்: ‘நீங்கள் நீண்டகாலம் இம்மலையில் தங்கியிருந்ததுபோதும்.
7 எமோரிய ஜனங்கள் வாழும் மலை நாட்டிற்கும், அதைச் சுற்றியுள்ள எல்லா இடங்களுக்கும் செல்லுங்கள். யோர்தான் பள்ளத்தாக்கு, மலைநாடு, மேற்குச்சரிவுகள், யூதேயாவின் தெற்கிலுள்ள நெகேவ் (பாலைவனப் பகுதி) மற்றும் கடற்கரைப் பகுதிக்கும் செல்லுங்கள். கானான் நிலப்பகுதி மற்றும் லீபனோன் ஆகியவற்றின் வழியாக பெரும் நதியான ஐபிராத்து வரைக்கும் செல்லுங்கள்.
8 அந்நிலத்தை நான் உங்களுக்குக் கொடுக்கிறேன். சென்று எடுத்துக்கொள்ளுங்கள். அந்நிலத்தை உங்களுக்குக் கொடுப்பதாக உங்கள் முற்பிதாக்களான ஆபிரகாம், ஈசாக்கு மற்றும் யாக்கோபு ஆகியோருக்கு நான் வாக்களித்தேன். அந்நிலத்தை அவர்களுக்கும் அவர்களது சந்ததியினருக்கும் கொடுப்பதாக நான் வாக்களித்தேன்’” என்றார்.
9 மோசே, “அந்த நாட்களில் நான் ஒருவனாக உங்களை கவனித்துக்கொள்ள இயலாது.
10 இப்பொழுது, உங்களிடம் பலர் இருக்கிறீர்கள்! உங்கள் தேவனாகிய கர்த்தர் மேலும் பலரை சேர்த்துள்ளார். ஆகவே வானத்திலுள்ள நட்சத்திரங்களைப்போல் நீங்கள் எண்ணிக்கையில் பெருகியுள்ளீர்கள்!
11 உங்கள் முற்பிதாக்களின் தேவனாகிய கர்த்தர், உங்களை இப்பொழுதுள்ளதைப் போல 1,000 மடங்கு எண்ணிக்கையில் அதிகரிக்கச் செய்யட்டும்! அவர் வாக்களித்தபடி உங்களை ஆசீர்வதிக்கட்டும்!
12 ஆனால் உங்களை கவனித்துக்கொள்ளவும், உங்கள் வாதங்களைத் தீர்த்து வைக்கவும், என் ஒருவனால் முடியவில்லை.
13 ஆகவே ‘ஒவ்வொரு கோத்திரத்திலிருந்தும் சிலரைத் தேர்ந்தெடுங்கள். அவர்களை உங்களுக்குத் தலைவர்களாக்குவேன். புரிந்துகொள்ளும் ஆற்றலும் அனுபவமும் வாய்ந்த ஞானவான்களைத் தேர்ந்தெடுங்கள்’ என்று நான் சொன்னேன்.
14 “அதற்கு நீங்கள், ‘நீர் செய்யச்சொன்ன செயல் நல்ல செயல்’ என கூறினீர்கள்.
15 “ஆகவே உங்கள் கோத்திரங்களிலிருந்து நீங்கள் தேர்ந்தெடுத்த அறிவும் அனுபவமும் நிறைந்தவர்களை உங்கள் தலைவர்களாக்கினேன். இப்படியாக, 1,000 பேர்களுக்குத் தலைவர்களையும், 100 பேர்களுக்குத் தலைவர்களையும், 50 பேர்களுக்குத் தலைவர்களையும், 10 பேர்களுக்குத் தலைவர்களையும், உங்களுக்கு ஏற்படுத்தினேன். மேலும் உங்கள் ஒவ்வொரு கோத்திரங்களுக்கும் அதிகாரிகளையும் கொடுத்தேன்.
16 “அந்த சமயத்தில் அந்த நீதிபதிகளிடம், ‘உங்கள் ஜனங்களுக்கு இடையிலான வாதங்களைக் கேளுங்கள். ஒவ்வொரு வழக்கிற்கும் தீர்ப்பளிக்கும்போது நடுநிலையாக இருங்கள். வழக்கு இரு இஸ்ரவேலர்களுக்கு இடையிலா அல்லது ஒரு இஸ்ரவேலனுக்கும் ஒரு வெளிநாட்டவனுக்கும் இடையிலா என்பது முக்கியமல்ல. ஒவ்வொரு வழக்குகளையும் நடுநிலையுடன் தீர்க்கவேண்டும்.
17 நீங்கள் நியாயம் வழங்கும்பொழுது, ஒருவன் மற்றவனைவிட முக்கியத்துவம் வாய்ந்தவன் என நினைக்கக் கூடாது. நீங்கள் அனைவரையும் சமமாகக் கருதவேண்டும். நீங்கள் யாருக்கும் பயப்பட வேண்டாம், ஏனெனில் உங்கள் தீர்ப்பு தேவனுடையது. ஆனால் கடினமான வழக்காயிருந்தால், என்னிடம் அவ்வழக்கைக் கொண்டு வாருங்கள். நான் நியாயம் வழங்குகிறேன்’ என்று கூறினேன்.
18 அதே சமயம், நீங்கள் செய்ய வேண்டிய மற்ற எல்லாவற்றையும் உங்களுக்குக் கூறினேன்.
19 “பின் நாம் நம்முடைய தேவனாகிய கர்த்தருக்குக் கீழ்ப்படிந்தோம். ஓரேப் மலையை விட்டு (சீனாய்), எமோரிய ஜனங்களின் மலைநாட்டிற்குப் பயணம் செய்தோம். நீங்கள் கண்ட பெரியதும் கொடூரமானதுமாகிய பாலைவனத்தின் வழியாகப் பயணம் செய்து காதேஸ்பர்னேயாவை அடைந்தோம்.
20 பின் நான் உங்களிடம்: ‘நீங்கள் இப்பொழுது எமோரிய ஜனங்களின் மலைநாட்டிற்கு வந்துள்ளீர்கள். நமது தேவனாகிய கர்த்தர் இந்நாட்டை நமக்குக் கொடுப்பார்.
21 அங்கே தெரிகிறது, பாருங்கள்! நீங்கள் போய் அப்பூமியை உங்களுக்குச் சொந்தமாக்கிக்கொள்ளுங்கள்! உங்கள் முற்பிதாக்களின் தேவனாகிய கர்த்தர், நீங்கள் இதைச் செயல்படுத்துமாறு கூறினார். எனவே, பயப்படாதீர்கள், எதைப்பற்றியும் கவலைப்படாதீர்கள்!’ என்று கூறினேன்.
22 “ஆனால் நீங்கள் எல்லோரும் என்னிடம் வந்து: ‘அந்த நிலத்தைப் பார்க்க முதலில் சிலரை அனுப்புவோம். அவர்கள் அங்குள்ள வலிமையுள்ளதும், வலிமையற்றதுமாகிய இடங்களைப் பார்த்துவர இயலும். பின் அவர்கள் திரும்பி வந்து நாம் எந்த வழியாகச் செல்லவேண்டும் என்பதைத் தெரிவிப்பார்கள். மேலும் நாம் போக வேண்டிய நகரங்களையும் நமக்கு கூறுவார்கள்’ என்று சொன்னீர்கள்.
23 “அது நல்ல யோசனை என்று நான் நினைத்தேன். ஆகவே ஒவ்வொரு கோத்திரத்திலிருந்தும் ஒவ்வொருவராக மொத்தம் பன்னிரெண்டு பேரைத் தேர்ந்தெடுத்தேன்.
24 பின் அந்த ஆட்கள் மலை நாட்டிற்கு ஏறிச் சென்றார்கள். அவர்கள் எஸ்கோல் பள்ளத்தாக்கிற்கு மட்டும் சென்று அதைச் சுற்றிப் பார்த்தார்கள்.
25 அங்கிருந்து சிலவகைப் பழங்களை நம்மிடம் கொண்டுவந்து கொடுத்து அந்நிலப் பகுதியைப் பற்றி நமக்குக் கூறினார்கள். அவர்கள், ‘நமது தேவனாகிய கர்த்தர், நமக்கு நல்லதொரு நாட்டினைக் கொடுக்கிறார்!’ என்று சொன்னார்கள்.
26 “ஆனால் நீங்களோ அங்கு செல்ல மறுத்து, உங்கள் தேவனாகிய கர்த்தருடைய கட்டளைக்குக் கீழ்ப்படிய மறுத்தீர்கள்.
27 நீங்கள் உங்களது கூடாரங்களுக்குத் திரும்பிச்சென்று குறைகூறத் துவங்கினீர்கள். நீங்கள், ‘கர்த்தர் நம்மை வெறுக்கிறார்! எமோரிய ஜனங்கள் நம்மை அழிப்பதற்காகவே அவர் எகிப்து தேசத்திலிருந்து நம்மை வெளியேற்றினார்!
28 நாம் இப்பொழுது எங்கே செல்லமுடியும்? நம் சகோதரர்கள் (பன்னிரண்டு ஒற்றர்கள்) நம்மை பயமுறுத்திவிட்டார்கள். அவர்கள், “அங்குள்ளவர்கள் நம்மை விடவும் பலசாலிகளாகவும், உயரமானவர்களாகவும் இருக்கிறார்கள்! நகரங்கள் பெரியனவாயும், வானுயர்ந்த சுவர்களைக் கொண்டதாயும் உள்ளன! மேலும் நாங்கள் இராட்சதர்களை அங்கே கண்டோம்!”’ என்று சொன்னீர்கள்.
29 “ஆகவே நான் உங்களிடம்: ‘கலக்கம் அடையாதீர்கள்! அந்த ஜனங்களைக் குறித்துப் பயப்படாதீர்கள்!
30 உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுக்கு முன்னால் சென்று உங்களுக்காகப் போரிடுவார். அவர் எகிப்தில் செய்ததைப் போலவே இதையும் செய்வார்,
31 அவர் பாலைவனத்தில் செய்ததைக் கண்டீர்கள். தன் மகனை ஒருவன் சுமந்து செல்வதைப்போல, தேவன் உங்களை சுமந்து சென்றதைக் கண்டீர்கள். கர்த்தர் உங்களைப் பத்திரமாக இங்கே கொண்டு வந்து சேர்த்தார்’ என்று கூறினேன்.
32 “ஆனாலும் உங்கள் தேவனாகிய கர்த்தரிடம் நீங்கள் நம்பவில்லை!
33 உங்கள் பயணத்தின்போது, நீங்கள் முகாம் அமைக்கத் தகுந்த இடத்தைத் தேட உங்களுக்கு முன்பாகச் சென்றார். அவர் இரவில் அக்கினியாலும், பகலில் மேகத்திலும் உங்களுக்கு வழிகாட்டிச் சென்றார்.
34 “நீங்கள் கூறியதைக் கேட்ட கர்த்தர் கோபமடைந்து,
35 ‘இப்பொழுது உயிருடனிருக்கும் தீயவர்களாகிய உங்களில் ஒருவரும் நான் உங்கள் முற்பிதாக்களுக்கு வாக்களித்த பரிசுத்த பூமிக்குச் செல்லமாட்டீர்கள்.
36 எப்புன்னேயின் மகனாகிய காலேப் மட்டுமே அப்பூமியைக் காண்பான். காலேப் நடந்து சென்ற பூமியை அவனுக்கும், அவனது சந்ததியினருக்கும் வழங்குவேன். ஏனென்றால் நான் கட்டளையிட்டவற்றை காலேப் மட்டுமே செய்தான்’ என்று கர்த்தர் கூறினார்.
37 “உங்கள் நிமித்தம் என்னிடமும் கர்த்தர் கோபமாயிருந்தார். அவர் என்னிடம், ‘மோசே நீயும் அந்நாட்டிற்குள் நுழைய முடியாது.
38 ஆனால் உன் உதவியாளனும், நூனின் மகனுமாகிய யோசுவாவும் அந்நாட்டிற்குச் செல்வார்கள். யோசுவாவை ஊக்கப்படுத்து, ஏனெனில் இஸ்ரவேலர்கள் அந்த நாட்டை சொந்தமாக்கிக்கொள்ள அவன் அவர்களை வழிநடத்துவான்’ என்று கூறினார்.
39 மேலும் கர்த்தர் எங்களிடம், ‘உங்கள் குழந்தைகள் எதிரிகளால் தூக்கிச் செல்லப்படுவார்கள் என்று கூறினீர்கள். ஆனால், அக்குழந்தைகள் அந்நாட்டிற்குள் நுழைவார்கள். உங்கள் தவறுகளுக்காக உங்கள் குழந்தைகளை நான் குற்றஞ் சொல்லமாட்டேன் ஏனென்றால் நல்லது கெட்டது அறியாத இளம்பருவத்தினர் அவர்கள். ஆகவே அந்த நாட்டை நான் அவர்களுக்கு வழங்குகிறேன். உங்கள் குழந்தைகள் அதைத் தமக்குச் சொந்தமாக்கிக்கொள்வார்கள்.
40 ஆனால் நீங்களோ செங்கடலுக்குச் செல்லும் சாலை வழியாகப் பாலைவனத்திற்குத் திரும்பிச்செல்ல வேண்டும்’ என்று கூறினார்.
41 “பின்னர் நீங்கள், ‘கர்த்தருக்கு எதிராக நாங்கள் பாவம் செய்துவிட்டோம். ஆனால் இனி தேவனாகிய கர்த்தர் கட்டளையிட்டபடி நாங்கள் சென்று போராடுவோம்’ என்று சொன்னீர்கள். “பின் நீங்கள் ஒவ்வொருவரும் ஆயுதங்களைத் தரித்துக்கொண்டீர்கள். மலைதேசத்தை வெற்றி கொள்வது எளிது என்று நினைத்தீர்கள்.
42 ஆனால் கர்த்தர் என்னிடம், ‘மலை மீதேறி போராட வேண்டாமென்று ஜனங்களிடம் சொல். ஏனென்றால் நான் அவர்களுடன் இருக்கமாட்டேன். அவர்களை எதிரிகள் தோற்கடிப்பார்கள்!’ என்று கூறினார்.
43 “நான் உங்களிடம் அதை சொன்னேன், ஆனாலும் நீங்கள் அதைத் கேட்கவில்லை. கர்த்தருடைய கட்டளைக்குக் கீழ்ப்படிய மறுத்தீர்கள். உங்கள் சுய வலிமையைப் பயன்படுத்த எண்ணி, மலை நாட்டிற்கு ஏறிச் சென்றீர்கள்.
44 ஆனால் அங்கே வசித்துக்கொண்டிருந்த எமோரிய ஜனங்கள் உங்களை எதிர்த்துப் போரிட்டு, தேனீக் கூட்டத்தைப் போல அவர்கள் உங்களை சேயீரிலிருந்து ஓர்மா வரைக்கும் துரத்தியடித்தார்கள்,
45 பின், நீங்கள் திரும்ப வந்து கர்த்தரிடம் உதவி கேட்டு அழுதீர்கள். ஆனால் உங்களுக்குச் செவிசாய்க்க தேவன் மறுத்தார்.
46 எனவே நீங்கள் காதேசில் நீண்டகாலம் தங்கியிருந்தீர்கள்.
உபாகமம் 1 ERV IRV TRV