1 “இவைகளே தேவனுடைய கட்டளைகளும், நியாயங்களும் ஆகும். அவற்றை நீங்கள் சுதந்திரமாக வாழப் போகின்ற தேசத்தில் கடைப்பிடிக்க வேண்டும். இந்த பூமியில் நீங்கள் வாழ்கின்ற நாள்வரைக்கும் இந்த கட்டளைகளுக்கும், நியாயங்களுக்கும் கீழ்ப்படிந்து கவனமாக அவற்றைக் கடைப்பிடிக்க வேண்டும். கர்த்தரே! உங்கள் முற்பிதாக்களுடைய தேவன் ஆவார்! அதனாலேயே அவர்களுக்கு அளித்த வாக்கின்படி இந்த சுதந்திர தேசத்தை உங்களுக்குத் தருகிறார்.

2 இப்போது வசிக்கின்ற உங்கள் எதிர் இன ஜனங்களிடமிருந்து அந்த தேசத்தை நீங்கள் எடுத்துக்கொள்வீர்கள். அந்த ஜனங்கள் எங்கெல்லாம் அவர்களது தெய்வங்களை தொழுது கொண்டார்களோ, அந்த இடங்களையெல்லாம், முழுவதுமாக நீங்கள் அழித்துவிட வேண்டும். அந்த இடங்களெல்லாம் மலைகள் மீதும், மேடுகள் மீதும், பசுமையான மரங்களுக்குக் கீழும் உள்ளன.

3 நீங்கள் அவர்களது பலிபீடங்களை இடித்து, அவர்கள் ஞாபகார்த்த கற்களையும் தூள் தூளாக தகர்த்திட வேண்டும். அவர்களது அஷேரா என்ற ஸ்தம்பத்தையும், பொய்த் தெய்வங்களின் சிலைகளையும் வெட்டி. இவ்வாறு அந்த இடத்திலிருந்து அவைகளின் பெயரை நிர்மூலமாக்க வேண்டும்.

4 “அந்த ஜனங்கள் அவர்களது பொய்த் தெய்வங்களை தொழுதுகொள்கிற அதே முறையை நீங்களும், உங்கள் தேவனாகிய கர்த்தருக்குச் செய்யக் கூடாது.

5 உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்கள் சகல கோத்திரங்களின் நடுவில் ஒரு சிறந்த இடத்தை தேர்ந்தெடுத்துத் தருவார். கர்த்தர் அவரது நாமத்தை அவ்விடத்திற்கு வைப்பார். அந்த விசேஷ இருப்பிடம் தேவனுடையதாகும். நீங்கள் எல்லோரும் அந்த இடத்திற்குச் சென்றே கர்த்தரை ஆராதிக்க வேண்டும்.

6 அங்கே நீங்கள் வரும்போது நெருப்பினால் வேகவைத்த தகனபலியையும், உங்கள் காணிக்கைகளையும். உங்கள் விளைச்சலில் பத்தில் ஒரு பங்கையும், ஆடு, மாடுளையும், உங்களின் காணிக்கைகளையும், கர்த்தருக்குக் காணிக்கைகளாக வாக்கு கொடுத்த பொருட்களையும், கர்த்தருக்குக் கொடுக்க விரும்பும் பொருட்களையும் உங்கள் மந்தைகளில் உள்ள ஆடு, மாடுகளில் தலைஈற்றுகளையும் கொண்டு வரவேண்டும்.

7 நீங்களும், உங்கள் குடும்பத்தினரும், அந்த இடத்திற்கு வந்து உண்டு மகிழவேண்டும். உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களோடு இருந்து மகிழ்ச்சியைத் தருவார். அந்த இடத்தில் நீங்கள் எல்லோரும் உங்களது மகிழ்ச்சியையும், உங்கள் கைகளால் செய்த பொருட்களையும், ஒருவருக்கொருவர் பங்கிட்டுக்கொள்ள வேண்டும். உங்கள் தேவனாகிய கர்த்தருடைய ஆசீர்வாதங்களையும், நீங்கள் பெற்றுள்ள எல்லாப் பொருட்களையும், அவர் உங்களுக்குத் தந்ததையும் நினைத்துப் பார்பீர்களாக.

8 “ஆனால் நாம் அனைவரும் தொழுது வந்தது போல் நீங்கள் தொழுதுகொள்வதைத் தொடரக் கூடாது. இதுவரையிலும் ஒவ்வொருவரும் தேவனை தாங்கள் விரும்பின வழியில் தொழுது கொண்டு வந்தீர்கள்.

9 ஏனென்றால் நாம் உங்கள் தேவனாகிய கர்த்தர் தருகின்ற, அமைதியான, அந்த தேசத்திற்குள் இன்னும் அடி எடுத்து வைக்கவில்லை.

10 ஆனால் நீங்கள் யோர்தான் நதியைக் கடந்துசென்று அந்த தேசத்தில் வாழலாம். அந்த சுதந்திர தேசத்தை கர்த்தர் உங்களுக்குத் தருவார். அங்கே உங்கள் எதிரிகள் அனைவரையும் விலக்கி கர்த்தர் உங்களை இளைப்பாறச் செய்வார். அங்கே நீங்கள் பாதுகாப்பாக இருக்கலாம்.

11 பின் கர்த்தர் அவருக்கான சிறந்த வீட்டினை அமைப்பதற்கான இடத்தை தேர்ந்தெடுப்பார். அவ்விடத்திற்கு கர்த்தர் அவரது பெயரை வைப்பார். அங்கே நீங்கள் நான் உங்களுக்குக் கட்டளையிட்ட அனைத்துப் பொருட்களையும், கொண்டுவர வேண்டும். நெருப்பினால் வேகவைத்த தகனபலிகளையும், உங்கள் காணிக்கைகளையும், உங்கள் விளைச்சலில் பத்தில் ஒரு பங்கையும், ஆடு, மாடுகளையும், உங்கள் காணிக்கைகளையும், கர்த்தருக்கு வாக்குப் பண்ணின பொருட்களையும், உங்கள் மந்தைகளிலுள்ள ஆடுமாடுகளின் தலைஈற்றுகளையும், கொண்டுவர வேண்டும்.

12 கர்த்தருடைய ஆலயத்திற்கு நீங்களும், உங்கள் பிள்ளைகளும், வேலைக்காரர் அனைவரும் வந்து, உங்கள் நகரங்களில் வசிக்கும் எந்தவொரு சொத்தும் சுதந்திரமும் இல்லாத லேவியருடன்கூடி, வந்திருந்து ஒருவொருக்கொருவர் உங்கள் தேவனாகிய கர்த்தரோடு மகிழ்ச்சியாக இருங்கள்.

13 நீங்கள் கண்ட இடங்களில் எல்லாம் உங்கள் விருப்பப்படி தகனபலிகளை செலுத்தாமல் இருக்க கவனமாக இருங்கள்.

14 உங்கள் கோத்திரங்கள் நடுவில் அவரது விசேஷ இடத்தினை கர்த்தர் தேர்ந்தெடுத்துக் கொடுப்பார். அந்த இடத்தில் மட்டுமே நீங்கள் உங்கள் பலிகளைச் செலுத்தி, நான் உங்களுக்குச் சொன்ன எல்லாவற்றையும் நீங்கள் அங்கேயே செய்யவேண்டும்.

15 “நீங்கள் எங்கெல்லாம் வசிக்கின்றீர்களோ, அங்கெல்லாம் நீங்கள் விரும்பிய வெளிமான், கலைமான் போன்ற விலங்குகளை அடித்து சாப்பிடலாம். நீங்கள் உங்கள் விருப்பப்படி எவ்வளவு இறைச்சி வேண்டுமானாலும் உண்ணலாம். அந்த அளவிற்கு உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுக்கு கொடுப்பார். யார் வேண்டுமானாலும் அவர்கள் சுத்தமானவர்களாக தேவனை தொழுதுகொள்ள தகுதி உடையவர்களானாலும் சரி, சுத்தமின்றி தேவனை தொழுதுகொள்ள தகுதி இல்லாதவராயினும் சரி, இறைச்சி உணவை சாப்பிடலாம்.

16 ஆனால் நீங்கள் இரத்தத்தை மாத்திரம் உண்ணவே கூடாது. அதைத் தண்ணீரைப் போல் தரையிலேயே ஊற்றிவிடவேண்டும்.

17 “நீங்கள் வசித்து வரும் வீடுகளில் இவற்றை நீங்கள் உண்ணவேண்டாம். அந்தப் பொருட்கள் பின்வருமாறு: தேவனுக்காக கொடுக்க இருக்கும் உங்களது தானியத்தையும், திராட்சைரசத்தையும், எண்ணெயையும், உங்கள் மந்தைகளிலுள்ள ஆடு மாடுகளின் தலைஈற்றுகளையும், தேவனுக்குத்தருவதாக வேண்டிக் கொண்டவற்றையும், தேவனுக்காக நீங்கள் கொடுக்க விரும்பும் வேறு எந்தப் பொருட்களையும், அல்லது உங்களின் அன்பளிப்புகளையும், உங்கள் வீடுகளில் உண்ணக்கூடாது.

18 நீங்கள் இவற்றையெல்லாம் உங்கள் தேவனாகிய கர்த்தர் தேர்ந்தெடுத்த இடத்தில் உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களோடு சேர்ந்து இருக்கக்கூடிய இடத்திலேயே உண்ண வேண்டும். நீங்கள் உங்கள் மகன்கள், மகள்கள், உங்களது எல்லா வேலைக்காரர்கள், மற்றும் உங்கள் நகரங்களில் வசிக்கும் லேவியர்களையும் அழைத்துக்கொண்டு சென்று அந்த இடத்தில் உண்டு மகிழவேண்டும். அந்த இடத்தில் உங்களுக்குள் எல்லோருடனும் ஒன்றுபட்ட மகிழ்ச்சியாலும் அங்கு உங்கள் கைகளால் செய்கின்ற எல்லாக் காரியங்களிலும் உங்கள் தேவனாகிய கர்த்தரிடம் சந்தோஷப்படுவீர்களாக.

19 எப்போதும் உங்களது இந்த உணவுகளில் லேவியர்களுக்கு பங்கு அளிப்பதில் தவறாதீர்கள். உங்கள் தேசத்தில் நீங்கள் வாழும்வரை இதை நீங்கள் செய்யவேண்டும்.

20 “உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுக்கு வாக்களித்ததுபோல் உங்கள் நாட்டின் எல்லைகளை விரிவாக்குவார். அவர் அவ்வாறு செய்யும்போது கர்த்தர் அவருக்காகத் தேர்ந் தெடுத்த ஆலயங்கள் நீங்கள் வசிக்கும் இடத்திலிருந்து தொலைவில் இருக்கலாம். அவ்வாறு தொலை தூரம் இருந்தால் நீங்கள் வரும் வழியில் பசி ஏற்பட்டு இறைச்சி உண்ண ஆசைப்பட்டால் அங்கு உங்களுக்கு கிடைக்கும் எந்த இறைச்சியையும் நீங்கள் உண்ணலாம். கர்த்தர் உங்களுக்குக் கொடுத்த மந்தைகளிலுள்ள ஆடுமாடுகளில் எதை வேண்டுமானாலும் நான் உங்களுக்கு இட்ட கட்டளையின்படி அதனை அடித்து உண்ணலாம். இவ்வாறு நீங்கள் விரும்பிய இடங்களில் உண்ணலாம்.

22 வெளிமானையும், கலைமானையும், உண்பது போன்றே நீங்கள் அதையும் உண்ணலாம். யாவரும் அதாவது தேவனை தொழுதுகொள்ள தகுதியான சுத்தமானவர்களும், தொழுதுகொள்ளத்தகாத அசுத்தமானவர்களும் அதை உண்ணலாம்.

23 ஆனால் அவற்றின் இரத்தத்தை உண்ணக் கூடாது என்பதில் உறுதியாக இருங்கள், ஏனென்றால் உயிரானது இரத்தத்தில்தான் இருக்கிறது. நீங்கள் அந்த உயிர் இருக்கும்வரை இறைச்சியை உண்ணக்கூடாது.

24 எனவே நீங்கள் இரத்தத்தை உண்ணாமல், தண்ணீரை போல் தரையிலே ஊற்றிவிட வேண்டும்.

25 ஆகவே இரத்தத்தை உண்ணக் கூடாது. கர்த்தர் உங்களுக்குச் சொன்ன சரியானவற்றையே நீங்கள் செய்யவேண்டும். பின் உங்களுக்கும், உங்கள் சந்ததியினருக்கும் நல்லவைகளே நடக்கும்.

26 “தேவனுக்காக ஏதேனும் சிறப்பான வாக்குறுதிகளைக் கொடுக்க நீங்கள் முடிவு செய்தால், நீங்கள் உங்கள் தேவனாகிய கர்த்தர் தேர்ந்தெடுக்கும் அந்த ஆலயத்திற்கே செல்லவேண்டும். அதுமட்டுமின்றி, தேவனுக்காக நீங்கள் செய்த சிறப்பு வாக்குறுதியை தேவனுடைய ஆலயத்திற்கே சென்று செலுத்த வேண்டும்.

27 அங்கேயே நீங்கள் உங்களின் தகன பலிகளையும் செலுத்த வேண்டும். நீங்கள் உங்கள் தேவனாகிய கர்த்தருடைய பலிபீடத்திலேயே இறைச்சியோடும், இரத்தத்தோடும் பலியிட வேண்டும். நீங்கள் செய்ய விரும்புகின்ற மற்ற பலிகளின் இரத்தமும், உங்கள் தேவனாகிய கர்த்தருடைய பலிபீடத்தின் மேலே ஊற்றப்பட வேண்டும். பின், நீங்கள் அந்த மாமிசத்தை உண்ணலாம்.

28 நான் கூறும் எல்லாக் கட்டளைகளுக்கும் கீழ்ப்படிந்து பின்பற்றுவதில் நீங்கள் எச்சரிக்கையாய் இருக்க வேண்டும். உங்கள் தேவனாகிய கர்த்தர் முன்பாக நல்லவற்றையும், நேர்மையானவற்றையும் நீங்கள் செய்வதனால் நீங்களும், உங்களுக்குப் பின்வரும் சந்ததியினரும் என்றென்றைக்கும் எல்லாவற்றிலும் நல்லதையே பெறுவீர்கள்.

29 “உங்கள் எதிர் இன ஜனங்களிடமிருந்து, நீங்கள் சுதந்திரமாக வசிக்கப் போகிற தேசத்தை நீங்கள் எடுத்துக்கொள்ளப் போகிறீர்கள். உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுக்காக அந்த எதிரின ஜனங்களை அழித்துவிடுவார். நீங்கள் அவர்களை வெளியே துரத்திவிட்டு அங்கே வாழப் போகிறீர்கள்.

30 அவ்வாறு நடந்ததற்கு பின்பு நீங்களும் எச்சரிக்கையாய் இருங்கள். அந்த ஜனங்களை அழித்துவிடுவீர்கள். அவர்களது பொய்த் தெய்வங்களை தொழுதுகொள்ளும் வலையில் சிக்கி விடாதீர்கள்! அந்த பொய்த்தெய்வங்களிடம் உதவிக்காக செல்லாமல் எச்சரிக்கையாய் இருங்கள். ‘அவர்கள் அந்த பொய்த் தெய்வங்களை தொழுதுகொண்டார்கள். ஆகவே நானும், அதைப் பின்பற்றி தொழுதுகொள்ளுவேன்!’ என்று சொல்லிவிடாதீர்கள்.

31 உங்கள் தேவனாகிய கர்த்தருக்கு அதைப்போன்று செய்துவிடாதீர்கள். அந்தவிதத்தில் நமது தேவனை தொழுதுகொள்ள வேண்டாம். ஏனென்றால் கர்த்தர் அருவருக்கின்ற எல்லா தீய செயல்களையும், அவர்கள் செய்துள்ளார்கள். அவர்களது பிள்ளைகளைக்கூட அந்த பொய்த் தெய்வங்களுக்காக தீயிலிட்டு பலியிட்டனர்!

32 “நான் உங்களுக்குக் கட்டளையிட்ட ஒவ்வொன்றையும் கடைப்பிடிப்பதில் கவனமாய் இருங்கள். அவற்றில் எதையும் கூட்டவோ, அல்லது குறைக்கவோ கூடாது.

உபாகமம் 12 ERV IRV TRV