எபேசியர் 2 IRV ஒப்பிடு Tamil Indian Revised Version
1 அக்கிரமங்களினாலும் பாவங்களினாலும் மரித்தவர்களாக இருந்த உங்களை உயிர்ப்பித்தார்.
2 அவைகளில் நீங்கள் முற்காலத்திலே இந்த உலக வழக்கத்திற்கு ஏற்றபடியும், கீழ்ப்படியாத பிள்ளைகளிடம் இப்பொழுது செயலாற்றும் ஆகாயத்து அதிகாரப் பிரபுவின் ஆவிக்குரியபடியும் நடந்துகொண்டீர்கள்.
3 அவர்களுக்குள்ளே நாமெல்லோரும் முற்காலத்திலே நமது சரீர விருப்பத்தின்படியே நடந்து, நமது சரீரமும் மனதும் விரும்பினவைகளைச் செய்து, சுபாவத்தினாலே மற்றவர்களைப்போலக் கோபத்தின் பிள்ளைகளாக இருந்தோம்.
4 தேவனோ இரக்கத்தில் செல்வந்தமுள்ளவராக நம்மில் அன்புகூர்ந்த தம்முடைய மிகுந்த அன்பினாலே,
5 அக்கிரமங்களில் மரித்தவர்களாக இருந்த நம்மைக் கிறிஸ்துவோடு உயிர்ப்பித்தார்; கிருபையினாலே இரட்சிக்கப்பட்டீர்கள்;
6 கிறிஸ்து இயேசுவிற்குள் அவர் நம்மேல் வைத்த தயவினாலே, தம்முடைய கிருபையின் மகா மேன்மையான செல்வத்தை வருங்காலங்களில் விளங்கச்செய்வதற்காக,
7 கிறிஸ்து இயேசுவிற்குள் நம்மை அவரோடு எழுப்பி, உன்னதங்களிலே அவரோடு உட்காரவும் செய்தார்.
8 கிருபையினாலே விசுவாசத்தைக் கொண்டு இரட்சிக்கப்பட்டீர்கள்; இது உங்களால் உண்டானது இல்லை, இது தேவனுடைய ஈவு;
9 ஒருவரும் பெருமைப்படாதபடி இது செயல்களினால் உண்டானது இல்லை;
10 ஏனென்றால், நற்செயல்களைச் செய்கிறதற்கு நாம் கிறிஸ்து இயேசுவிற்குள் உருவாக்கப்பட்டு, தேவனுடைய செய்கையாக இருக்கிறோம்; அவைகளில் நாம் நடக்கும்படி அவர் முன்னதாக அவைகளை ஆயத்தம்பண்ணியிருக்கிறார்.
11 எனவே, முன்பு சரீரத்தின்படி யூதரல்லாதவராக இருந்து, சரீரத்தில் கையினாலே விருத்தசேதனம்பண்ணப்பட்டவர்களால் விருத்தசேதனம்பண்ணப்பாடாதவர்கள் என்று சொல்லப்பட்ட நீங்கள்,
12 அக்காலத்திலே கிறிஸ்துவைச் சேராதவர்களும், இஸ்ரவேலுடைய குடியுரிமைக்குப் புறம்பானவர்களும், வாக்குத்தத்தத்தின் உடன்படிக்கைகளுக்கு அந்நியர்களாகவும், நம்பிக்கை இல்லாதவர்களும், இந்த உலகத்தில் தேவனில்லாதவர்களுமாக இருந்தீர்கள் என்பதை நினைத்துக்கொள்ளுங்கள்.
13 முன்னே தூரத்தில் இருந்த நீங்கள் இப்பொழுது கிறிஸ்து இயேசுவிற்குள் கிறிஸ்துவின் இரத்தத்தினாலே அருகில் வந்தீர்கள்.
14 எப்படியென்றால், அவரே நம்முடைய சமாதான காரணராகி, இருகூட்டத்தாரையும் ஒன்றாக்கி, பகையாக நின்ற பிரிவினையாகிய நடுச்சுவரைத் தகர்த்து,
15 சட்டதிட்டங்களாகிய நியாயப்பிரமாணத்தைத் தம்முடைய சரீரத்தினாலே ஒழித்து, இருகூட்டத்தாரையும் அவருக்குள்ளாக ஒரே புதிய மனிதனாக உருவாக்கி, இப்படிச் சமாதானம்பண்ணி,
16 பகையைச் சிலுவையினால் கொன்று, அதினாலே இருகூட்டத்தாரையும் ஒரே சரீரமாக தேவனுக்கு ஒப்புரவாக்கினார்.
17 அல்லாமலும், அவர் வந்து, தூரத்தில் இருந்த உங்களுக்கும், அருகில் இருந்த அவர்களுக்கும், சமாதானத்தை நற்செய்தியாக அறிவித்தார்.
18 அப்படியே நாம் இருகூட்டத்தாரும் ஒரே ஆவியானவராலே பிதாவினிடத்தில் சேரும் பாக்கியத்தை அவர் மூலமாகப் பெற்றிருக்கிறோம்.
19 ஆகவே, நீங்கள் இனி அந்நியர்களும் பரதேசிகளுமாக இல்லாமல், பரிசுத்தவான்களோடு ஒரே நகரத்தாரும் தேவனுடைய குடும்பத்தினராக இருந்து,
20 அப்போஸ்தலர்கள் தீர்க்கதரிசிகள் என்பவர்களுடைய அஸ்திபாரத்தின்மேல் கட்டப்பட்டவர்களுமாக இருக்கிறீர்கள்; அதற்கு இயேசுகிறிஸ்துவே மூலைக்கல்லாக இருக்கிறார்;
21 அவர்மேல் மாளிகை முழுவதும் சீராக இணைக்கப்பட்டு, கர்த்தருக்குள் பரிசுத்த ஆலயமாக எழும்புகிறது;
22 அவர்மேல் நீங்களும் ஆவியானவராலே தேவன் தங்கும் இடமாகச் சேர்த்துக் கட்டப்பட்டுவருகிறீர்கள்.