எஸ்தர் 1 ERV IRV TRV KJV ASV BBE DBY WBT WEB YLT
1 இந்தியா தொடங்கி எத்தியோப்பியா வரை இருந்த நூற்றிருபத்தேழு மாநிலங்களையும் ஆட்சி செய்த மன்னர் அகஸ்வேரின் காலத்தில்,2 அவர் சூசான் தலைநகரில் அரசுக் கட்டிலில் அமர்ந்து ஆட்சி புரிந்தார்.⒫3 மூன்றாம் ஆண்டில் தம் குறுநில மன்னர்கள், அலுவலர் அனைவருக்கும் விருந்தொன்று அளித்தார். பாரசீக, மேதியப் படைத் தளபதிகளும், உயர்குடி மக்களும், மாநிலத் தலைவர்களும் அவர்முன் வந்திருந்தனர்.4 அவர் தம் அரசின் செல்வச் செழிப்பினையும், தம் மாண்பின் மேன்மை மிகு பெருமையையும் நூற்றி எண்பது நாள்கள் விளம்பரப்படுத்திக் கொண்டிருந்தார்.⒫5 அந்நாள்கள் அனைத்தும் நிறைவு பெற்றபின் சூசான் தலைநகரிலிருந்து சிறியோர் முதல் பெரியோர் வரை மக்கள் அனைவருக்கும் அரண்மனைத் தோட்ட வளாகத்தில் ஏழு நாள்களுக்கு அவர் விருந்து அளித்தார்.6 அங்கு வெண்ணிற, நீல நிறத் தொங்கு திரைகள், வெள்ளித் தண்டுகளிலும் வெண்ணிறப் பளிங்குத் தூண்களிலும் மென்துகிலாலும் கருஞ்சிவப்புப் பட்டாலும் பிணைக்கப் பெற்றிருந்தன. வெண்ணீலக் கற்கள், பளிங்கு, முத்துக்கள், விலைமதிப்பற்ற கற்கள் ஆகியவை பதிக்கப்பெற்ற பல வண்ண ஓட்டுத் தளத்தின் மீது பொன், வெள்ளி இழைகள் கலந்த மஞ்சங்கள் இருந்தன.7 வெவ்வேறு வகையான பொற்கிண்ணங்களில் அனைவருக்கும் திராட்சை மது வழங்கினர். அரச மேன்மைக்கு ஏற்பப் பெருமளவில் திராட்சை மது வழங்கப்பட்டது.8 திராட்சை மது அருந்துதல் சட்டப்படி ஏற்புடையதாக இருந்தது. ஒருவரும் வற்புறுத்தப்படவில்லை. விருந்தினரின் விருப்பத்திற்கிணங்கப் பரிமாறுமாறு அரண்மனையின் தலைமை அலுவலர்களுக்கு அரசர் கட்டளையிட்டிருந்தார்.⒫9 அவ்வாறே அரசி வஸ்தியும் மன்னர் அகஸ்வேரின் பெண்டிர்க்கு விருந்தளித்தாள்.⒫10 ஏழாம் நாளன்று திராட்சை மதுவினால் மனம் பூரித்திருந்த மன்னர் அகஸ்வேர் தம் முன்னிலையில் பணியாற்றிய அண்ணகர்களான மெகுமான், பிஸ்தா, அர்போனா, பிக்தா, அபக்தா, சேத்தார், கர்க்கசு ஆகியோருக்கு,11 பேரழிகியான அரசி வஸ்தியின் எழிலை மக்களும் தலைவர்களும் காணுமாறு அவளை அரச மகுடம் சூட்டப்பட்டவளாகத் தம்முன் அழைத்து வரும்படி கட்டளையிட்டார்.12 ஆனால் அரசி வஸ்தி அண்ணகர்களின் வழியாக வந்த மன்னரின் சொல்லுக்கு இணங்க மறுத்துவிட்டாள். எனவே மன்னர் கடுஞ்சினமுற்றார். பெரும் கோபக்கனல் அவர் மனத்தில் பற்றி எரிந்தது.⒫13 உடனே அவர் காலங்கள் பற்றிய நுண்ணறிவுடைய ஞானிகளிடம் கலந்துரையாடினார். ஏனெனில் சட்டங்களிலும், நெறிமுறைகளிலும் தேர்ச்சி பெற்றவர்களிடம் கலந்துரையாடுவது மன்னரின் வழக்கம்.14 கர்சனா, சேத்தார், அதிமாத்தா, தர்சீசு, மெரேசு, மர்சனா, மெமுக்கான், ஆகிய பாரசீகத்தையும் மேதியாவையும் சார்ந்த ஏழு தலைவர்களும் மன்னருக்கு மிக நெருக்கமானவர்கள்; ஆட்சிப் பொறுப்பில் முதன்மை பெற்றோர். அவர்கள் மன்னரின் முகமாற்றத்தைக் கண்டனர்.15 மன்னர் அகஸ்வேர், அண்ணகர்களின் வழியாய் இட்ட கட்டளைப் படி செய்ய மறுத்த அரசி வஸ்திக்குச் சட்டப்படி செய்ய வேண்டியது என்ன? என்று வினவினார்.⒫16 மன்னருக்கும் ஏனைய தலைவர்களுக்கும் முன்பாக மெமுக்கான் கூறியது: “அரசி வஸ்தி மன்னருக்கு எதிராக மட்டுமன்றித் தலைவர் அனைவர்க்கு எதிராகவும், அகஸ்வேரின் ஆட்சிக்குட்பட்ட அனைத்து மாநில மக்களுக்கு எதிராகவும் தவறிழைத்துவிட்டாள்.17 அரசி வஸ்தியின் நடத்தை எல்லாப் பெண்களுக்கும் தெரியவரும். அவர்கள் பார்வையில் அவர்களின் கணவர் இழிவுப்படுத்தப்படுவர். ஏனெனில் மன்னர் அகஸ்வேர் அவளைத் தம்முன் வருமாறு பணித்தும்கூட அவர்முன் அவள் வரவில்லையே! என்பர்.18 இன்றே அரசியின் நடத்தை பற்றிக் கேள்வியுறும் பாரசீக, மேதிய இளவரசிகளும் தம் தலைவர்களிடமும் இதுபோன்றே கூறுவர். ஆதலின் ஏளனத்திற்கும் சினத்திற்கும் முடிவே இராது.19 எனவே, அரசே, உமக்கு நலமெனப்படின் தாங்கள் ஆணையொன்று பிறப்பிக்க வேண்டும். அவ்வாணை பாரசீக, மேதியச் சட்டங்களில் நிலையாய் இருக்கும்படி எழுதப்படல் வேண்டும். அரசராகிய தங்கள் முன் வஸ்தி இனிவருதல் கூடாது. அவளது அரசுரிமையை அவளைக் காட்டிலும் சிறந்த ஒருத்திக்குத் தாங்கள் கொடுப்பீராக!20 அரசரால் பிறக்கப்படும் இந்த ஆணை உமது ஆட்சிக்குட்பட்ட பரந்துகிடக்கும் நாடுகளில் அறிவிக்கப்பட்டவுடன் சிறியோர் பெரியோர் அனைவரின் மனைவியரும் அவர்களின் கணவருக்கு மரியாதை செலுத்துவர்.⒫21 இவ்வார்த்தை அரசர் மற்றும் தலைவர்களின் பார்வையில் நலமெனத் தோன்றியது. மெமுக்கானின் கருத்திற்கு ஏற்ப மன்னர் செயல்பட்டார்.22 அவர் தம் ஆட்சிக்குட்பட்ட அனைத்து மாநிலங்களுக்கும் அவரவர் மாநில வரிவடிவ வாரியாகவும் *ஒவ்வொரு மக்களினத்திற்கும் அதனதன் மொழிவாரியகவும் எழுதிய மடல்களில், ஒவ்வொரு ஆண்மகனும் தனது வீட்டில் ஆளுகை செய்யவேண்டும்* என்று கட்டளையிட்டிருந்தார்.எஸ்தர் 1 ERV IRV TRV