யாத்திராகமம் 24 ERV IRV TRV KJV ASV BBE DBY WBT WEB YLT
1 ஆண்டவர் மோசேயிடம், “ஆரோன், நாதாபு, அபிகூ ஆகியோருடனும், இஸ்ரயேலின் எழுபது பெரியோர்களுடனும் ஆண்டவரிடமாய் ஏறிவாருங்கள்; தொலையில் நின்று தொழுதுகொள்ளுங்கள்.2 மோசே மட்டும் ஆண்டவர் அருகில் வரலாம்; ஏனையோர் அருகில் வரலாகாது; மக்கள் அவரோடு மலை மேலேறி வரக்கூடாது” என்று கூறினார்.⒫3 எனவே, மோசே மக்களிடம் வந்து ஆண்டவர் சொன்ன அனைத்து வார்த்தைகளையும் விதிமுறைகளையும் அறிவித்தார். மக்கள் அனைவரும் ஒரே குரலாக; “ஆண்டவர் கூறிய வார்த்தைகள் அனைத்தையும் நாங்கள் செயல்படுத்துவோம்” என்று விடையளித்தனர்.4 மோசே ஆண்டவரின் வாக்குகள் அனைத்தையும் எழுதி வைத்தார். அதிகாலையில் அவர் எழுந்து மலையடிவாரத்தில் ஒரு பலிபீடத்தையும், இஸ்ரயேலின் பன்னிரண்டு குலங்களுக்காகப் பன்னிரண்டு தூண்களையும் எழுப்பினார்.5 அவர் இஸ்ரயேல் மக்களின் இளைஞர்களை அனுப்பி வைக்க, அவர்களும் ஆண்டவருக்கு எரிபலிகள் செலுத்தினர். மாடுகளை நல்லுறவுப் பலிகளாகவும் ஆண்டவருக்குப் பலியிட்டனர்.6 மோசே இரத்தத்தில் ஒரு பாதியை எடுத்துக் கலங்களில் விட்டு வைத்தார். மறு பாதியைப் பலிபீடத்தின் மேல் தெளித்தார்.7 அவர் உடன்படிக்கையின் ஏட்டைஎடுத்து மக்கள் காதுகளில் கேட்கும்படி வாசித்தார். அவர்கள், “ஆண்டவர் கூறிய அனைத்தையும் நாங்கள் செயல்படுத்திக் கீழ்ப்படிந்திருப்போம்” என்றனர்.8 அப்போது மோசே இரத்தத்தை எடுத்து மக்கள்மேல் தெளித்து, “இவ்வனைத்து வார்த்தைக்குமிணங்க, ஆண்டவர் உங்களோடு செய்துள்ள உடன்படிக்கையின் இரத்தம் இதோ” என்றார்.⒫9 பின்னர் மோசே, ஆரோன், நாதாபு, அபிகூ ஆகியோரும் இஸ்ரயேலின் எழுபது பெரியோர்களும் மேலேறிச் சென்று,10 இஸ்ரயேலின் கடவுளைக் கண்டார்கள். அவர் பாதங்களின் கீழுள்ள தளம் நீல மணிக்கல் இழைத்த வேலைப்பாடு போன்றும், தெள்ளிய வான்வெளி போன்றும் இருந்தது.11 இஸ்ரயேல் மக்களின் தலைவர்கள் மேல் அவர் கைவைக்கவில்லை. அவர்கள் கடவுளைக் கண்டனர்; உண்டு குடித்தனர்.12 ஆண்டவர் மோசேயை நோக்கி, “என்னிடம் மலைமேல் ஏறிவந்து இங்கேயே இரு. அவர்களுக்குக் கற்பிக்க நான் எழுதியுள்ள சட்டதிட்டங்கள் அடங்கிய கற்பலகைகளை உன்னிடம் அளிப்பேன்” என்றார்.13 மோசே தம் துணையாளர் யோசுவாவுடன் எழுந்து சென்றார். பின் மோசே கடவுளின் மலையின்மேல் ஏறிச் செல்கையில்,14 அவர் பெரியோர்களை நோக்கி, “நாங்கள் உங்களிடம் திரும்பி வரும்வரை நீங்கள் இவ்விடத்திலேயே எங்களுக்காகக் காத்திருங்கள். இதோ ஆரோனும், கூரும் உங்களோடு இருக்கிறார்கள். வழக்கு ஏதுமிருப்பவன் அவர்களை அணுகட்டும்” என்றார்.⒫15 பின்னர், மோசே மலைமேல் ஏறிச்செல்ல, ஒரு மேகம் மலையை மூடிற்று.16 ஆண்டவரின் மாட்சி சீனாய் மலைமேல் தங்கிற்று. மேகம் மலையை ஆறுநாள்களாக மூடியிருந்தது. ஏழாம் நாள் அவர் மேகத்தின் நடுவினின்று மோசேயை அழைத்தார்.17 மலை உச்சியில் ஆண்டவரது மாட்சியின் காட்சி, பற்றியெரியும் நெருப்புப்போன்று இஸ்ரயேல் மக்களின் கண்களுக்குத் தெரிந்தது.18 மோசே மேகத்தின் இடையே புகுந்து, மலைமேல் ஏறிச் சென்றார். மோசே மலையில் நாற்பது பகலும் நாற்பது இரவும் தங்கியிருந்தார்.யாத்திராகமம் 24 ERV IRV TRV