யாத்திராகமம் 28 ERV ஒப்பிடு Tamil Easy Reading Version
1 கர்த்தர் மோசேயை நோக்கி, “உன் சகோதரனாகிய ஆரோனையும், நாதாப், அபியூ, எலெயாசார், இத்தாமார் என்னும் ஆரோனின் மகன்களையும் இஸ்ரவேல் ஜனங்களிடமிருந்து பிரித்து உன்னிடம் வரவழை. இவர்கள் எனக்கு ஆசாரியர்களாக ஊழியம் செய்வார்களாக.
2 “உனது சகோதரனாகிய ஆரோனுக்கென்று சிறப்பான ஆடைகளை உண்டாக்கு. அந்த ஆடைகள் அவனுக்குக் கனமும், மேன்மையும் தரும்.
3 இந்த ஆடைகளைச் செய்யும் திறமைமிக்கவர்கள் ஜனங்கள் மத்தியில் இருக்கிறார்கள். அவர்களுக்கு விசேஷ அறிவை நான் கொடுத்துள்ளேன். அவர்களிடம் ஆரோனுடைய ஆடைகளைத் தயாரிக்கச் சொல். அவன் எனக்குச் சிறப்பான பணிவிடை செய்வதை அந்த உடை காட்டும். அவன் என்னைச் சேவிக்கிற ஆசாரியனாகப் பணியாற்றுவான்.
4 அந்த மனிதர்கள் செய்யவேண்டிய ஆடைகள் இவைகளே: நியாயத்தீர்ப்பு மார்ப்பதக்கம், ஏபோத், நீல அங்கி, முழுவதும் நெய்யப்பட்ட வெள்ளை அங்கி, தலைப்பாகை, கச்சை. ஆரோனுக்கும் அவன் மகன்களுக்கென்றும் இந்தச் சிறப்பு ஆடைகளை உண்டாக்க வேண்டும். பின்பு ஆரோனும், அவனது மகன்களும் எனக்கு ஆசாரியர்களாக ஊழியம் செய்யமுடியும்.
5 பொன்னையும், ஜரிகைகளையும், மெல்லிய துகிலையும், இளநீலம், இரத்தாம்பரம், சிவப்புநிற நூலையும் பயன்படுத்துமாறு அவர்களுக்குச் சொல்.
6 “ஏபோத்தைச் செய்வதற்குப் பொன்னையும், சரிகைகளையும், மெல்லிய துகிலையும், இளநீலம், இரத்தாம்பரம், சிவப்புநிற நூலையும் பயன்படுத்து. இது திறமை மிக்க கலைஞனின் வேலை ஆகும்.
7 ஏபோத்தின் தோள் பகுதி ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு தோள்பட்டை இருக்கவேண்டும். இந்தத் தோள் பட்டைகள் ஏபோத்தின் இரண்டு மூலைகளிலும் கட்டப்படவேண்டும்.
8 “ஏபோத்திற்கு ஒரு இடைக்கச்சையைச் செய்ய வேண்டும். ஏபோத்தை நெய்தது போலவே, இடைக் கச்சையையும், பொன் ஜரிகை, மெல்லிய துகில், இளநீலம், இரத்தாம்பரம், சிவப்புநிற நூல் ஆகியவற்றால் செய்ய வேண்டும்.
9 “இரண்டு கோமேதகக் கற்களை எடுத்துகொள். இஸ்ரவேலின் (யாக்கோபு) பன்னிரண்டு மகன்களின் பெயர்களையும் அக்கற்களின் மீது எழுது.
10 ஆறு பெயர்களை ஒரு கல்லிலும், மற்ற ஆறு பெயர்களை மறு கல்லிலும் எழுதவேண்டும். முதல் மகனிலிருந்து கடைசி மகன் வரைக்கும் ஒவ்வொருவரின் பெயர்களையும் எழுதவேண்டும்.
11 இந்த கற்களின் மீது இஸ்ரவேலின் ஆண் பிள்ளைகளுடைய பெயர்களை செதுக்கவேண்டும். முத்திரை செய்கிற முறைப்படியே இதனையும் செய். பின்பு தங்கச் சட்டங்களில் கற்களைப் பொருத்து.
12 ஏபோத்தின் வார்களில் இந்த கற்களைப் பொருத்து. கர்த்தருக்கு முன்னால் நிற்கும்போது ஆரோன் அந்தச் சிவப்பு அங்கியை அணிந்துகொள்வான். ஏபோத்தின்மேல் இஸ்ரவேலின் பன்னிரண்டு மகன்களின் பெயர்களும் உள்ள இரண்டு கற்களும் இருக்கும். இஸ்ரவேல் ஜனங்களை தேவன் நினைவு கூருவதற்கு இக்கற்கள் உதவும்.
13 ஏபோத்தின் மேல் அக்கற்கள் நன்றாக பதிக்கப்பட்டிருக்கும்படி பசும் பொன்னை பயன்படுத்து.
14 பொன்னால் இரண்டு பின்னல் வேலையான சங்கிலிகள் செய்து அவற்றைப் பொன் சட்டத்தில் பூட்டவேண்டும்.
15 “தலைமை ஆசாரியனுக்காக நியாயத் தீர்ப்பு மார்ப்பதக்கத்தைச் செய். ஏபோத்தைச் செய்தது போலவே, திறமைமிக்க கை வேலைக்காரர்களைக்கொண்டு இதையும் செய்ய வேண்டும். பொன் ஜரிகையையும், மெல்லிய துகிலையும், இளநீலம், இரத்தாம் பரம், சிவப்பு நிற நூலையும் பயன்படுத்த வேண்டும்.
16 இந்த நியாயத்தீர்ப்பு மார்ப்பதக்கத்தை இரண்டாக மடித்து ஒரு சதுர பையாக தைக்க வேண்டும். அது 9 அங்குல நீளமும், 9 அங்குல அகலமும் உடைய சதுரமாய் இருக்க வேண்டும்.
17 நியாயத்தீர்ப்பு மார்ப்பதக்கத்தில் நான்கு வரிசை விலையுயர்ந்த கற்களைப் பதிக்க வேண்டும். பத்மராகம், புஷ்பராகம், மாணிக்கம் கற்கள் முதல் வரிசையில் இருக்க வேண்டும்.
18 இரண்டாவது வரிசையில் மரகதம், இந்திரநீலம், வச்சிரம் ஆகிய கற்கள் இருக்க வேண்டும்.
19 மூன்றாவது வரிசையில் கெம்பு, வைடூரியம், சுகந்தி ஆகிய கற்கள் இருக்க வேண்டும்.
20 நான்காவது வரிசையில் படிகப்பச்சை, கோமேதகம், யஸ்பி என்ற கற்கள் இருக்க வேண்டும். இவை அனைத்தையும் பொன்னில் பதிக்க வேண்டும்.
21 நியாயத்தீர்ப்பு மார்ப்பதக்கத்தில் மேற்கூறிய பன்னிரெண்டு கற்கள் இருக்க வேண்டும். இஸ்ரவேலின் மகன்கள் ஒவ்வொருவனுக்கும் ஒவ்வொரு கல் இருக்க வேண்டும். முத்திரை செய்கிற வண்ணமே ஒவ்வொரு கல்லிலும் இப்பெயர்கள் பொறிக்கப் பட வேண்டும்.
22 “சுத்தமான பொன்னினால் ஆன சங்கிலிகளை நியாயத்தீர்ப்பு மார்ப்பதக்கத்திற்காக செய்ய வேண்டும். அவை கயிறு போல் பின்னப்பட்டிருக்க வேண்டும்.
23 இரண்டு பொன் வளையங்களைச் செய்து நியாயத்தீர்ப்பு மார்ப்பதக்கத்தின் இரண்டு மூலைகளிலும் அவற்றை மாட்ட வேண்டும்.
24 இரண்டு பொன் சங்கிலிகளையும் நியாயத்தீர்ப்பு மார்ப்பதக்கத்தின் இரண்டு வளையங்களில் பொருத்து.
25 இரண்டு சட்டத்திலும் சங்கிலிகளின் வார்களை இணைத்துவிடு. ஏபோத்தின் முன்பகுதியிலுள்ள இரண்டு தோள் பட்டைகளிலும் இவை பொருத்தப்பட்டிருக்கும்.
26 மேலும் இரண்டு பொன் வளையங்களைச் செய்து அவற்றை நியாயத்தீர்ப்பு மார்ப்பதக்கத்தின் மூலைகளில் பொருத்து. ஏபோத்துக்கு பொருத்தின நியாயத்தீர்ப்பு மார்ப்பதக்கத்தின் உட்புற மூலைகளில் இது இருக்கும்.
27 இன்னும் இரண்டு பொன் வளையங்களைச் செய்து அவற்றை ஏபோத்தின் முன்புறமுள்ள தோள் பட்டைகளின் கீழ்ப்பகுதியில் பொருத்து. பொன் வளையங்களை ஏபோத்தின் இடைக் கச்சைக்கு மேல் வை.
28 நியாயத்தீர்ப்பு மார்ப்பதக்கத்தின் வளையங்களை ஏபோத்தின் வளையங்களோடு இணைப்பதற்கு நீல நிற நாடாவைப் பயன்படுத்து. இதனால் நியாயத்தீர்ப்பு மார்ப்பதக்கம் கச்சைக்கு அருகேயும் ஏபோத்திற்கு எதிரேயும் இருக்கும்.
29 “பரிசுத்த இடத்துக்குள் ஆரோன் நுழையும்போது, அவன் நியாயத்தீர்ப்பு மார்ப்பதக்கத்தை அணிய வேண்டும். அவனது மார்புக்கு நேராக இஸ்ரவேலின் பன்னிரெண்டு மகன்களின் பேரையும் அவன் அணிந்துகொள்வான். இவ்வாறு கர்த்தர் அவர்களை எப்போதும் நினைவு கூருவார்.
30 நியாயத்தீர்ப்பு மார்ப்பதக்கத்திற்குள் ஊரீமையும் தும்மீமையும் வை. கர்த்தருக்கு முன் செல்லும்போது இவை ஆரோனின் மார்புக்கு மேலாக இருக்கும். இப்படியாக இஸ்ரவேல் ஜனங்களின் நியாயத்தீர்ப்பை கர்த்தருக்கு முன்பாக ஆரோன் எப்போதும் சுமந்து செல்வான்.
31 “ஏபோத்திற்காக ஒரு நீல அங்கியைத் தயார் செய்.
32 தலையை நுழைத்துக்கொள்ளும்பொருட்டு நடுவில் ஒரு துவாரத்தை அமைப்பாயாக. அத்து வாரத்தைச் சுற்றிலும் ஒரு நெய்யப்பட்ட துணியைத் தைத்துவிடு. துவாரம் கிழியாதபடிக்கு அது உதவும்.
33 துணியாலான மாதுளம் பழங்களை உண்டாக்க நீலம், இரத்தாம்பரம், சிவப்பு ஆகிய நூலைப் பயன்படுத்து. அவற்றை வஸ்திரத்தின் ஓரங்களில் சுற்றிலும் தொங்கவிடு. மாதுளம் பழங்களுக்கு இடையில் பொன்மணிகளைத் தொங்கவிடு.
34 இவ்வாறு அங்கியின் கீழே பொன் மணிகளும், மாதுளம் பழங்களும் இருக்க வேண்டும். ஒரு மாதுளம் பழமும், ஒரு பொன் மணியுமாக வரிசையாக அமையட்டும்.
35 ஆரோன் ஆசாரியனாகப் பணிவிடை செய்யும்போது இந்த அங்கியை அணிந்துகொள்ள வேண்டும். கர்த்தரின் முன்னே நிற்கும்படியாக பரிசுத்த இடத்திற்கு அவன் போகும்போது அவன் சாகாத படிக்கு மணிகள் ஒலிக்கும். பரிசுத்த இடத்திலிருந்து வெளியேறும்போதும் அவை ஒலிக்கும்.
36 “முத்திரை செய்வதைப்போல், பொன் தகட்டில் பொன் எழுத்துக்களால் அதில் ‘கர்த்தருக்கு பரிசுத்தம்’ என்னும் வார்த்தைகளை பொறித்து வை.
37 அந்த பொன் தகட்டை ஒரு நீல வண்ண நாடாவில் இணைத்துவிடு. தலைப்பாகையின் முன் புறம் அந்தப் பொன் தகடு இருக்க வேண்டும்.
38 ஆரோன் அதை தலையில் அணிந்துகொள்ள வேண்டும். இஸ்ரவேல் ஜனங்கள் படைக்கும் காணிக்கைகளில் உள்ள கறையினால் அவன் கறைபடாதபடி இது உதவும். ஜனங்கள் கர்த்தருக்குக் கொடுக்கும் காணிக்கைகள் இவைகளே. ஜனங்களின் காணிக்கைகளைக் கர்த்தர் ஏற்றுக்கொள்ளும் பொருட்டு ஆரோன் இதனை எப்போதும் தலையில் அணிந்துகொள்ள வேண்டும்.
39 “வெள்ளை அங்கியை மெல்லிய துகில் நூலிலிருந்து நெய்ய வேண்டும். தலைப்பாகைக்கும் மெல்லிய துகிலைப் பயன்படுத்து. கச்சையில் சித்திர வேலைப்பாடுகள் தைக்கப்பட்டிருக்க வேண்டும்.
40 மேலங்கி, கச்சை, தலைப்பாகை ஆகியவற்றை ஆரோனின் மகன்களுக்காகவும் செய்ய வேண்டும். இது அவர்களுக்கு கனத்தையும் மதிப்பையும் அளிக்கும்.
41 உன் சகோதரனாகிய ஆரோனுக்கும், அவன் மகன்களுக்கும் இந்த ஆடைகளை அணிவி. அவர்களை ஆசாரியர்களாக்கும்படி விசேஷ எண்ணெயை அவர்கள் மீது ஊற்று. இது அவர்களைப் பரிசுத்தமாக்கும். அவர்கள் எனக்கு சேவை செய்யும் ஆசாரியர்களாக இருப்பார்கள்.
42 “மெல்லிய துகிலால் ஆசாரியர்களுக்கு உள்ளாடைகள் தைக்க வேண்டும். அவை இடுப்பிலிருந்து முழங்கால்வரைக்கும் இருக்கும்.
43 ஆசாரிப்புக் கூடாரத்திற்குள் நுழையும்போதெல்லாம் ஆரோனும், அவனது மகன்களும் இந்த ஆடைகளை அணிந்திருக்க வேண்டும். பரிசுத்த இடத்தில் பலிபீடத்தருகே ஆசாரியராக பணிவிடை செய்ய வரும்போது இதை அணியவேண்டும். அவற்றை அணியாவிட்டால் அவர்கள் குற்றவாளிகளாவார்கள். அதனால் அவர்கள் சாகநேரிடும். ஆரோனுக்கும் அவன் குடும்பத்தினருக்கும் என்றென்றைக்கும் இது கட்டளையாக இருக்கும்” என்றார்.