யாத்திராகமம் 30 ERV IRV TRV KJV ASV BBE DBY WBT WEB YLT
1 நறுமணப்பொருள் எரிக்குமாறு ஒரு பீடம் செய். சித்திம் மரத்தால் அதனைச் செய்வாய்.2 நீளம் ஒரு முழம் அகலம் ஒரு முழம் என்று அது சதுரமாக அமையட்டும்; அதன் உயரம் இரு முழம்; கொம்புகளும் அதனுடன் ஒன்றிணைந்தவையாக இருக்கட்டும்.3 அதன் மேல்பாகம், அதன் பக்கங்கள், அதன் கொம்புகள் ஆகியவற்றைப் பசும்பொன்னால் வேய்ந்து, சுற்றிலும், தங்கத் தோரணம் பொருத்து.4 அந்தத் தோரணத்திற்குக் கீழே இரு மூலைகளிலும் இரு பொன் வளையங்கள் வீதம் இரு பக்கங்களிலும் பொருத்து. அதைத் தூக்கிச் செல்வதற்கான தண்டுகளுக்கு அவைபிடிப்பாக விளங்கும்.5 சித்திம் மரத்தால் அத்தண்டுகளைச் செய்து, அவற்றையும் பொன்னால் வேய்ந்திடு.6 உடன்படிக்கைப் பேழைக்கு முன்னால், திருத்தூயகத் திரையின் முன்னிலையில் தூபபீடத்தை வைப்பாய். உடன்படிக்கைப் பேழை மேலுள்ள இரக்கத்தின் இருக்கையில் நான் உன்னைச் சந்திப்பேன்.7 காலைதோறும் ஆரோன் அதன்மேல் நறுமணப்பொருள் எரிப்பானாக! விளக்குகளை ஆயத்தப்படுத்தும்போதும் அவன் நறுமணப்பொருள் எரிப்பானாக!8 மாலை மங்கும் வேளையில் ஆரோன் விளக்குகளை ஏற்றும்போது, உங்கள் தலைமுறைதோறும் ஆண்டவர் திருமுன் இடைவிடாமல் நறுமணப்பொருள் எரிப்பானாக!9 வேற்று நறுமணப் பொருளையோ, மற்றும் எரிபலியையோ, உணவுப் படையலையோ அதன்மேல் படைத்தலாகாது. அதன் மேல் நீர்மப் படையலையும் ஊற்றக்கூடாது.10 ஆண்டுக்கு ஒருமுறை ஆரோன் அதன் கொம்புகள் மேல் பாவக் கழுவாய் நிறைவேற்றுவான். ஆண்டுக்கு ஒருமுறை பாவம்போக்கும் பலியின் இரத்தத்தில் கொஞ்சம் எடுத்துப் பாவக்கழுவாயை உங்கள் தலைமுறைதோறும் நிறைவேற்றுவான். ஏனெனில், அது ஆண்டவருக்குப் புனிதமிக்கதாகும்.11 ஆண்டவர் மோசேயை நோக்கி,12 “நீ இஸ்ரயேல் மக்களின் எண்ணிக்கைக்காகக் குடிக்கணக்கு எடுக்கும் போது, எண்ணிக்கைக்குட்பட்டவர் ஒவ்வொருவரும் தம் உயிருக்கு ஈடாக ஆண்டவருக்கு மீட்புப் பணம் கட்டவேண்டும். இல்லையெனில் அவர்கள் கணக்கிடப்படுகையில் அவர்களிடையே கொள்ளை நோய் வந்துவிடும்.13 எண்ணிக்கைக்குட்படும் யாவரும் திருத்தலச் செக்கேலில் அரைச் செக்கேல் வீதம் கட்டவேண்டும். (ஒரு செக்கேல்* என்பது இருபது கேரா** என்க). அந்த அரைச் செக்கேல் ஆண்டவருக்குரிய காணிக்கையாகும்.14 எண்ணிக்கைக்கு உட்படும் அனைவரும் — அதாவது இருபது வயதும் அதற்கு மேற்பட்டவர்களுமான ஆண்கள் யாவரும் — ‘ஆண்டவருக்குரிய காணிக்கை’ அளிப்பார்கள்.15 உங்கள் உயிர்களுக்குப் பாவக்கழுவாயாக ‘ஆண்டவருக்குரிய காணிக்கை’ செலுத்தும்போது பணக்காரன் அரைச் செக்கேலுக்கு அதிகமாகவோ, ஏழை அதற்குக் குறைவாகவோ கொடுக்கவேண்டாம்.16 இஸ்ரயேல் மக்களிடமிருந்து பாவக்கழுவாய்ப் பணத்தை வசூலித்து அதைச் சந்திப்புக்கூடாரத்திருப்பணிக்கென்று கொடுத்துவிடு. உங்கள் உயிர்களுக்காக பாவக்கழுவாய் செய்ய இஸ்ரயேல் மக்களுக்கு இது ஆண்டவர் திருமுன் நினைவுச் சின்னமாய் இருக்கட்டும்” என்றார்.17 பின்னும் ஆண்டவர் மோசேயிடம்,18 “கழுவுவதற்காக ஒரு வெண்கல நீர்த்தொட்டியை அதற்கான வெண்கல ஆதாரத்தோடு செய். சந்திப்புக் கூடாரத்திற்கும் பலிபீடத்திற்கும் இடையில் அதனை வைத்து அதில் தண்ணீர் ஊற்றுவாய்.19 ஆரோனும் அவன் புதல்வரும் இதிலிருந்து தங்கள் கைகளையும் பாதங்களையும் கழுவ வேண்டும்.20 சந்திப்புக் கூடாரத்தில் நுழையும்போது அல்லது பலிபீடத்தை நெருங்கி ஆண்டவருக்கு நெருப்புப் பலிகளைச் சுட்டெரிக்கும் பணிபுரியும்போது அவர்கள் தண்ணீரால் கழுவிக்கொள்வார்கள். இல்லையெனில் அவர்கள் செத்துமடிவார்கள்.21 அவர்கள் சாகாமல் இருக்கும்படி கைகளையும் பாதங்களையும் கழுவிக் கொள்வார்கள். இது அவர்களுக்கு அதாவது அவனுக்கும் தலைமுறைதோறும் அவன் வழிமரபினருக்கும் என்றுமுள்ள நியமமாக இருக்கும்” என்றார்.22 மீண்டும் ஆண்டவர் மோசேயிடம்,23 “ஐந்நூறு திருத்தல செக்கேல் எடைக்கு உயர்தர வெள்ளைப்போளம், அதன் பாதி நிறையாகிய இருநூற்று ஐம்பத்துக்கு மணங்கமழும் கருவாப்பட்டை, இருநூற்று ஐம்பதுக்கு நறுமண வசம்பு.24 ஐந்நூறுக்கு இலவங்கப்பட்டை ஆகிய தலைசிறந்த நறுமணப் பொருள்களை எடுத்து, ஒரு கலயம் அளவு ஒலிவ எண்ணெயும் சேர்த்து,25 திறமை வாய்ந்த பரிமளத் தயாரிப்பாளன் செய்வதுபோல், கூட்டுத் தைலமாக ஒரு தூய திருப்பொழிவு எண்ணெய் தயாரிப்பாய். இது தூய திருப்பொழிவு எண்ணெயாக இருக்கும்,26 இதைக்கொண்டு சந்திப்புக் கூடாரம். உடன்படிக்கைப் பேழை,27 மேசை, அதன் அனைத்துத் துணைக் கலன்கள், விளக்குத் தண்டு, அதன் துணைக் கலன்கள், தூபப்பீடம்,28 எரிபலிபீடம், அனைத்துத் துணைக்கலன்கள், நீர்த்தொட்டி, அதன் ஆதாரம் ஆகியவற்றைத் திருப்பொழிவு செய்வாய்.29 நீ அவற்றை அர்ப்பணம் செய்வதால் அவை புனிதமானவையாகும். மேலும் அவற்றைத் தொடுபவை அனைத்தும் புனிதம் பெறும்.30 ஆரோனுக்கும் அவன் புதல்வருக்கும் நீ அருள்பொழிவு செய்து, அவர்களை எனக்குக் குருத்துவப்பணி புரியுமாறு திருநிலைப்படுத்துவாய்.31 மேலும், நீ இஸ்ரயேல் மக்களுக்கு அறிவிக்க வேண்டியது; இது என்னுடைய தூய திருப்பொழிவு எண்ணெயாக உங்கள் தலைமுறைதோறும் இருக்க வேண்டும்.32 சாதாரணத் தேவைக்காக மனித உடலில் அது பூசப்படல் ஆகாது. இந்தக் கலவை விகிதப்படி இதைப்போன்ற எண்ணெய் தயாரிக்கப்படலாகாது. இது புனிதமானது. உங்களுக்கும் இது புனிதமானதாக இருக்கட்டும்.33 இதைப்போன்று கலவை தயார் செய்பவனும், இதிலிருந்து பிற மக்களுக்குக் கொடுப்பவனும் தன் மக்களிடமிருந்து விலக்கி வைக்கப்பட வேண்டும்” என்றார்.34 ஆண்டவர் மோசேயை நோக்கி, “நறுமணப் பொருள்களான வெள்ளைப்போளம், குங்கிலியம், கெல்பான், பிசின் ஆகியவற்றையும், கலப்பில்லாச் சாம்பிராணியையும் சம அளவில் எடுத்துக் கொண்டு,35 உப்பு சேர்க்கப்பட்ட துப்புரவான புனித நறுமணக்கட்டியை திறமைவாய்ந்த பரிமளத் தயாரிப்பாளன் செய்வதுபோல நீ தயாரிக்க வேண்டும்.36 அதில் ஒரு பகுதியை நன்கு பொடியாக்கி, நான் உனக்குக் காட்சிதரும் சந்திப்புக்கூடாரத்திலுள்ள உடன்படிக்கைப் பேழைக்கு முன்னால் வைக்க வேண்டும். அது உங்களிடையே தூய்மை மிக்கதாகத் திகழும்.37 இந்தக் கலவைக்குரிய விகிதப்படி நறுமணக் கட்டியை நீங்கள் உங்களுக்கென்று செய்து கொள்ள வேண்டாம். ஆண்டவர் பொருட்டு இது உங்களிடையே தூயதாகத் திகழும்.38 நறுமணம் முகர்வதற்காக இதைப்போன்று செய்பவன் எவனும், தன் மக்களிடமிருந்து விலக்கி வைக்கப்படவேண்டும்” என்றார்.