யாத்திராகமம் 36 ERV IRV TRV KJV ASV BBE DBY WBT WEB YLT
1 பெட்சலேலும் ஒகொலியாபும் மேலும் தூயக அமைப்பு வேலையனைத்தையும் செய்யத் தெரியுமாறு ஆண்டவரிடமிருந்து அறிவுக் கூர்மையும் தொழில்திறமையும் பெற்றிருந்த கலைஞர் யாவரும், ஆண்டவர் கட்டளையிட்டபடி வேலை செய்யட்டும்.2 அவ்வாறே மோசே பெட்சலேலையும், ஒகொலியாபையும், ஆண்டவரிடமிருந்து அறிவுக்கூர்மை பெற்றவரும் உள்ளார்வம் உடையவருமான கலைஞர் அனைவரையும் வேலையில் ஈடுபடுமாறு அழைத்தார்.3 தூயக வேலைக்கென்று இஸ்ரயேல் மக்கள் கொண்டு வந்த காணிக்கைகள் யாவற்றையும் இவர்கள் மோசே முன்னிலையிலிருந்து எடுத்துச் சென்றனர். தொடர்ந்து தன்னார்வக் காணிக்கைகள் காலைதோறும் வந்தவண்ணமாயிருந்தன.4 தூயக வேலைகளில் ஈடுபட்டிருந்த கலைஞர் தாங்கள் செய்து கொண்டிருந்த வேலையை விட்டுவிட்டு வந்து,5 மோசேயை நோக்கி, “மக்கள் கொண்டு வருவது ஆண்டவர் கட்டளையிட்ட வேலைக்கும் அதிகமாகவே உள்ளது” என்று அறிவித்தனர்.6 அப்போது மோசே, “ஆணோ பெண்ணோ யாராயினும் இனிமேல் தூயகத்துக்காகக் காணிக்கை கொண்டுவர வேண்டாம்” என்று ஒரு கட்டளை பிறப்பிக்க, அது பாளையம் எங்கும் அறிவிக்கப்பட்டது. எனவே, மக்கள் எதையுமே கொண்டு வருவதை நிறுத்திவிட்டனர்.7 ஏற்கனவே சேகரித்தது, செய்ய வேண்டிய எல்லா வேலைகளுக்கும் போதுமானதாயும் தேவைக்கு மிஞ்சியும் இருந்தது.8 பணியாளருள் கலைத்திறமைமிக்கோர் அனைவரும் ஒன்று சேர்ந்து திருஉறைவிடத்தைப் பத்துத் திரைகளால் அமைத்தனர். அவை முறுக்கேற்றி நெய்த மெல்லிய நார்ப்பட்டாகவும், நீலம் கருஞ்சிவப்பு சிவப்பு நிற நூலாகவும், கலைத் திறனுடன் கூடிய கெருபுகள் அமைந்ததாகவும் இருந்தன.9 திரை ஒன்றின் நீளம் இருபத்தெட்டு முழமும் அகலம் நான்கு முழமும் ஆகும். ஒரு திரையின் அளவே எல்லாத் திரைகளுக்கும் இருக்கும்.⒫10 இவற்றுள் ஐந்து திரைகள் ஒன்றாகவும், ஏனைய ஐந்து திரைகள் ஒன்றாகவும் இணைக்கப்பட்டன.11 பின்னர், அவர் முதல் தொகுப்பின் விளிம்பில் நீலவண்ணத் துணி வளையங்களை அமைத்தார். அடுத்த தொகுப்பின் இறுதி விளிம்பிலும் அவ்வாறே செய்தார்.12 முதல் திரைத்தொகுப்பில் அவர் அமைத்த வளையங்களை ஐம்பது. மற்றத் திரைத்தொகுப்பின் விளிம்பில் அமைத்த வளையங்கள் ஐம்பது. அவ்வளையங்கள் எதிரெதிரே இருந்தன.13 பொன்னால் ஐம்பது கொக்கிகள் செய்து, அந்தக் கொக்கிகளால் அவர் திரைகளை ஒன்றோடொன்று இணைத்தார். இவ்வாறு, ஒன்றிணைந்து திருஉறைவிடம் அமைந்தது.⒫14 திருஉறைவிடத்தில் மேலே கூடாரம் அமைப்பதற்கு வெள்ளாட்டு மயிரால் மூடுதிரைகள் செய்தார். பதினொரு மூடுதிரைகள் செய்தார்.15 ஒரு மூடுதிரையின் நீளம் முப்பது முழமும் அகலம் நான்கு முழமும் ஆகும். பதினொரு மூடுதிரைகளுக்கும் அளவு ஒன்றேயாம்.16 இவற்றுள் ஐந்து மூடுதிரைகளை ஒன்றாகவும், மற்ற ஆறு மூடுதிரைகளை ஒன்றாகவும் இணைத்தார்.17 முதல் மூடுதிரைத்தொகுப்பின் ஓரத்தில் ஐம்பது வளையங்களை அமைத்தார். அவ்வாறே ஐம்பது வளையங்களை அடுத்த மூடுதிரைத் தொகுப்பின் ஓரத்திலும் அமைத்தார்.18 ஒரே கூடாரமாக ஒன்றிணைத்து அமைக்க ஐம்பது வெண்கல கொக்கிகள் செய்தார்.19 மேலும் செந்நிறமாகப் பதனிட்ட செம்மறி ஆட்டுக்கிடாய்த் தோல்களாலும், வெள்ளாட்டுத் தோல்களாலும், கூடாரத்துக்கு ஒரு மேல்விரிப்பு செய்தார்.⒫20 திருஉறைவிடத்திற்கான செங்குத்தாய் நிற்கும் சட்டங்களை அவர் சித்திம் மரத்தால் செய்தார்.21 ஒரு சட்டத்தின் நீளம் பத்து முழமும் அகலம் ஒன்றரை முழமும் ஆகும்.22 சட்டம் ஒவ்வொன்றைப் பொருத்த இரு கொளுத்துகள் வீதம் திருஉறைவிடத்தின் எல்லாச் சட்டங்களுக்கும் செய்தார்.23 திருஉறைவிடத்திற்காகச் சட்டங்களை அவர் செய்த முறை; தெற்கே தென்திசை நோக்கி நிற்கச் செய்யப்பட்டவை இருபது சட்டங்கள்.24 ஒரு சட்டத்துக்குக் கீழே, இரு கொளுத்துகளுக்கு இருபாதப்பொருத்துகள்; அடுத்த சட்டத்துக்குக் கீழே இரு கொளுத்துகளுக்கு இரு பாதப்பொருத்துகள். இவ்வாறு இருபது சட்டங்களுக்கும்கீழே அவர் நாற்பது வெள்ளிப் பாதப்பொருத்துகளை அமைத்தார்.25 திருஉறைவிடத்தின் இரண்டாம் பக்கமாகிய வடதிசைக்கான சட்டங்கள் இருபது செய்தார்.26 ஒரு சட்டத்திற்குக் கீழே இரண்டு பாதப்பொருள்கள், மறு சட்டத்திற்குக் கீழே இரண்டு பாதப்பொருத்துகள் என்று நாற்பது வெள்ளி பாதப்பொருத்துகள் செய்யப்பட்டன.27 திருஉறைவிடத்தின் பின்புறமாகிய மேற்றிசைக்காக ஆறு சட்டங்கள் செய்தார்.28 அத்துடன் திருஉறைவிடத்தின் பின்புற மூலைகளுக்காக இரண்டு சட்டங்களைச் செய்தார்.29 அவற்றுள் ஒவ்வொன்றும் கீழிருந்து மேலே முதல் வளையம் வரைக்கும் இரட்டைக் கனமாக அமைக்கப்பட்டன. இவ்வாறே, இரண்டு மூலைகளும் அமைக்கப்பட்டன.30 ஒவ்வொரு சட்டத்தின் அடியிலும் இரண்டு பாதப்பொருத்துகள் வீதம் எட்டுச் சட்டங்களுக்கும் அவற்றிற்காகப் பதினாறு வெள்ளிப் பாதப்பொருத்துகளும் இருந்தன.⒫31 சித்திம் மரத்தால் குறுக்குச் சட்டங்களையும் செய்தார்; திருஉறைவிடத்தின் ஒருபுறச் சட்டங்களின் மேலே பொருத்த ஐந்து;32 திருஉறைவிடத்தின் மறுபுறச் சட்டங்கள் மேலே பொருத்த குறுக்குச் சட்டங்கள் ஐந்து; மேற்கே திருஉறைவிடத்தின் பின்புறச் சட்டங்கள் மேலே பொருத்த குறுக்குச் சட்டங்கள் ஐந்து.33 நடுவிலுள்ள குறுக்குச்சட்டம் சட்டங்களுக்குச் சரிபாதியில் ஒரு முனையிலிருந்து மறு முனைக்குச் செலுத்தப்பட்டது.34 அவர் சட்டங்களைப் பொன்னால் பொதிந்தார். அதிலுள்ள குறுக்குச் சட்டங்களைச் செருகுவதற்கான வளையங்களையும் பொன்னால் செய்தார். குறுக்குச் சட்டங்களையும் பொன்னால் பொதிந்தார்.35 மேலும், அவர் ஒரு தொங்குதிரை செய்தார். நீலம் கருஞ்சிவப்பு சிவப்பு நிற நூலாகவும் முறுக்கேற்றி நெய்த மெல்லிய நார்ப்பட்டாகவும் கலைத்திறனுடன் கூடிய கெருபுகள் அமைந்ததாகவும் அதைச் செய்தார்.36 அதற்காகச் சித்திம் மரத்தால் நான்கு தூண்கள் செய்தார். அவற்றைப் பொன்னால் பொதிந்து பொன் கொக்கிகளையும் பொருத்திவிட்டார். அவற்றிற்காக நான்கு வெள்ளிப் பாதப்பொருத்துகளை வார்த்தார்.37 கூடாரத்தின் நுழை வாயிலுக்காக அவர் ஒரு தொங்குதிரை செய்தார். அது நீலம் கருஞ்சிவப்பு சிவப்புநிற நூலும் முறுக்கேற்றி நெய்த நார்ப்பட்டும் பின்னல் வேலைப்பாடும் கொண்டதாக விளங்கியது.38 ஐந்து தூண்களையும், அவற்றின் வளைவு ஆணிகளையும் செய்தார். அவற்றின் பொதிகைகளையும் பூண்களையும் பொன்னால் பொதிந்தார். ஐந்து பாதப்பொருத்துகளை வெண்கலத்தால் செய்தார்.யாத்திராகமம் 36 ERV IRV TRV