யாத்திராகமம் 5 ERV ஒப்பிடு Tamil Easy Reading Version
1 மோசேயும் ஆரோனும் ஜனங்களிடம் பேசிய பிறகு, பார்வோனிடம் சென்றனர். அவர்கள், “இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர், ‘பாலைவனத்தில் போய் பண்டிகை கொண்டாடி என்னை கௌரவப்படுத்துவதற்கு என் ஜனங்களை நீ போகவிடு’ என்று கூறுகிறார்” என்றனர்.
2 ஆனால் பார்வோன், “யார் உங்கள் கர்த்தர்? நான் ஏன் அவருக்குக் கீழ்ப்படியவேண்டும்? இஸ்ரவேலரை நான் ஏன் போக அனுமதிக்கவேண்டும்? இந்த கர்த்தர் யாரென்று கூட எனக்குத் தெரியாது. நான் இஸ்ரவேலரைப் போக அனுமதிக்கமாட்டேன்” என்றான்.
3 அப்போது ஆரோனும் மோசேயும், “எபிரெய ஜனங்களின் தேவன் எங்களுடன் பேசினார். பாலைவனத்தில் மூன்று நாட்கள் பயணம் செல்வதற்கு எங்களை அனுமதிக்குமாறு நாங்கள் உன்னை வேண்டுகிறோம். அங்கு எங்கள் தேவனாகிய கர்த்தருக்குப் பலி செலுத்துவோம். இதை நாங்கள் செய்யவில்லையென்றால், அவர் கோபங்கொண்டு நோய் அல்லது யுத்தத்தினால் நாங்கள் அழியும்படியாகச் செய்வார்” என்றனர்.
4 ஆனால் பார்வோன் அவர்களை நோக்கி, “மோசேயே, ஆரோனே, நீங்கள் வேலை செய்கிறவர்களைத் தொந்தரவு செய்கிறீர்கள். அவர்கள் அவர்களது வேலையைச் செய்யட்டும். உங்கள் வேலையை நீங்கள் கவனியுங்கள்.
5 ஏராளமான வேலையாட்கள் உள்ளார்கள். தம் வேலைகளைச் செய்யாதபடி நீங்கள் அவர்களை தடுக்கிறீர்கள்” என்றான்.
6 அதே நாளில் இஸ்ரவேல் ஜனங்கள் இன்னும் கடினமாக உழைக்கும்படியாக பார்வோன் ஒரு கட்டளையிட்டான். அடிமைகளின் மேற்பார்வையாளர்களிடமும் எபிரெயர்களைக் கண்காணிப் பவர்களிடமும் பார்வோன்,
7 “ஜனங்களுக்கு எப்போதும் நீங்கள் வைக்கோலை கொடுத்து வந்தீர்கள். அவர்கள் அதைப் பயன்படுத்திச் செங்கல் செய்தார்கள். ஆனால் இப்போது செங்கல் செய்வதற்குத் தேவையான வைக்கோலை அவர்களே சேகரித்து வரும்படி கூறுங்கள்.
8 ஆனால் முன்னால் செய்தபடியே, அதே எண்ணிக்கை செங்கற்களை தினமும் அவர்கள் செய்யவேண்டும். அவர்கள் சோம்பேறிகளாகிவிட்டனர், எனவே தான் தங்களை அனுப்பும்படியாக அவர்கள் என்னைக் கேட்கிறார்கள். அவர்கள் செய்வதற்குப் போதிய வேலை இல்லை. எனவேதான் அவர்கள் தங்கள் தேவனுக்குப் பலிகள் செலுத்தவேண்டுமென என்னைக் கேட்கிறார்கள்.
9 எனவே இந்த மனிதர்கள் கடினமாக வேலை செய்யும்படிச் செய்யுங்கள். அவர்களைச் சுறுசுறுப்பாக வைத்திருங்கள். அப்போது அவர்களுக்கு மோசேயின் பொய்களை நம்புவதற்குப் போதிய நேரமிராது” என்றான்.
10 எனவே இஸ்ரவேலரின் எகிப்திய எஜமானர்களும், எபிரெய மேற்பார்வையாளர்களும் இஸ்ரவேல் ஜனங்களிடம் சென்று, “செங்கற்கள் செய்ய உங்களுக்கு வைக்கோல் தரமுடியாதென பார்வோன் முடிவு செய்துள்ளார்.
11 நீங்கள் போய் உங்களுக்கு வேண்டிய வைக்கோலைக் கொண்டு வரவேண்டும். ஆனால் முன்னால் செய்தபடியே எண்ணிக்கைகளில் ஒன்றும் குறைக்கப்படுவதில்லை” என்றார்கள்.
12 வைக்கோலைக் கொண்டு வருவதற்காக ஜனங்கள் எகிப்தின் எல்லா இடங்களுக்கும் சென்றார்கள்.
13 மேற்பார்வையாளர்கள் ஜனங்களை இன்னும் கடினமாக வேலைவாங்கினார்கள். முன்னால் செய்த எண்ணிக்கை அளவுக்கு செங்கற்களைச் செய்யும்படி வற்புறுத்தினார்கள்.
14 இஸ்ரவேலரின் எகிப்திய எஜமானர்கள், எபிரெய மேற்பார்வையாளர்களைத் தேர்ந்தெடுத்து ஜனங்கள் செய்த வேலைக்கு அவர்களைப் பொறுப்பாளர்கள் ஆக்கினார்கள். இஸ்ரவேலரின் எகிப்திய எஜமானர்கள், எபிரெய மேற்பார்வையாளர்களை அடித்து அவர்களிடம், “முன்னால் செய்த எண்ணிக்கையளவு செங்கற்களை ஏன் நீங்கள் செய்யவில்லை? முன்பு அதனைச் செய்ய முடிந்ததென்றால், இப்போதும் உங்களால் அதைச் செய்யக் கூடும்!” என்றார்கள்.
15 அப்போது எபிரெய மேற்பார்வையாளர்கள் பார்வோனிடம் சென்று: “நாங்கள் உமது ஊழியர்கள். ஏன் எங்களை இவ்வாறு நடத்துகிறீர்?
16 எங்களுக்கு நீர் வைக்கோல் தரவில்லை. ஆனால் முன்பு செய்த எண்ணிக்கையளவுக்கு செங்கற்களை இப்போதும் செய்யும்படியாகக் கூறுகிறீர். இப்போது எங்கள் எஜமானர்கள் எங்களை அடிக்கிறார்கள். இவ்வாறு உங்கள் ஜனங்கள் செய்வது தவறானது” என்று குறை கூறினார்கள்.
17 பார்வோன், “நீங்கள் சோம்பேறிகள், உங்களுக்கு வேலைசெய்ய விருப்பமில்லை. அதனால் தான் உங்களை அனுப்பும்படி நீங்கள் என்னைக் கேட்கிறீர்கள். நீங்கள் இங்கிருந்து போய், கர்த்தருக்கு பலிசெலுத்த விரும்புகிறீர்கள்.
18 இப்போது வேலை செய்யத் திரும்பி போங்கள்! உங்களுக்கு வைக்கோல் தரமாட்டோம். ஆனால் முன்பு செய்த எண்ணிக்கை அளவுக்கு செங்கற்களை நீங்கள் செய்ய வேண்டும்!” என்று பதிலளித்தான்.
19 தங்களுக்கத் தொல்லை நேர்ந்ததை எபிரெய மேற்பார்வையாளர்கள் கண்டுகொண்டார்கள். கடந்த காலத்த்தில் செய்த எண்ணிக்கை அளவுக்கு செங்கற்களைச் செய்யமுடியாது என்று அவர்கள் அறிந்திருந்தார்கள்.
20 பார்வோனைச் சந்தித்துத் திரும்பிக்கொண்டிருந்த வழியில் மோசேயும், ஆரோனும் அவர்களுக்காகக் காத்துக்கொண்டிருந்தார்கள்.
21 அவர்கள் மோசேயையும், ஆரோனையும் நோக்கி, “நம்மைப் போகவிடும்படியாக பார்வோனைக் கேட்டபடியால் நீங்கள் பெரிய தவறு செய்துவிட்டீர்கள். பார்வோனும், அவரது ஆட்சியாளர்களும் எங்களை வெறுக்கும்படிச் செய்ததால் கர்த்தர் உங்களைத் தண்டிப்பார். எங்களைக் கொல்வதற்கு அவர்களுக்கு ஒரு தருணத்தை அளித்திருக்கிறீர்கள்” என்றனர்.
22 மோசே கர்த்தரிடம் ஜெபம் செய்து, “ஆண்டவரே, உமது ஜனங்களுக்கு ஏன் இந்தக் கொடுமையான காரியத்தைச் செய்தீர்? ஏன் என்னை இங்கு அனுப்பினீர்?
23 நான் பார்வோனிடம் போய் நீர் கூறும்படியாகச் சொன்னவற்றைக் கூறினேன். அப்போதிலிருந்து அவன் ஜனங்களைக் கேவலமாக நடத்துகிறான். அவர்களுக்கு உதவுவதற்கு நீர் எதையும் செய்யவில்லை!” என்றான்.