எசேக்கியேல் 8 ERV ஒப்பிடு Tamil Easy Reading Version
1 ஒரு நாள் நான் (எசேக்கியேல்) என் வீட்டில் உட்கார்ந்துக்கொண்டிருந்தேன். யூதாவின் மூப்பர்கள் (தலைவர்கள்) எனக்கு முன்னால் உட்கார்ந்திருந்தார்கள். இது நாடுகடத்தப்பட்ட ஆறாம் ஆண்டின் ஆறாம் மாதத்தின் ஐந்தாம் நாளாக இருந்தது. திடீரென்று எனது கர்த்தராகிய ஆண்டவருடைய வல்லமை என்மேல் வந்தது.
2 நெருப்புபோன்ற ஒன்றை நான் பார்த்தேன். அது மனித உடலைப்போன்றும் இருந்தது. இடுப்புக்குக் கீழே அது நெருப்பைப் போன்றிருந்தது. இடுப்புக்கு மேலே நெருப்பிலே பழுத்த உலோகம்போன்று மின்னிக்கொண்டிருந்தது.
3 பிறகு நான் கையைப்போன்று தோன்றிய ஒன்றைப் பார்த்தேன். அவர் தன் கையை நீட்டி என் தலைமயிரைப் பிடித்துத் தூக்கினார். பின்னர் ஆவியானவர் என்னைத் தூக்கிக்கொண்டு, தேவதரிசனத்திலே என்னை எருசலேமிற்குக் கொண்டுபோனார். அவர் வடதிசைக்கு எதிரான உள்வாசலின் நடையில்விட்டார். தேவனுக்கு எரிச்சலுண்டாக்குகிற சிலையும் அங்கே இருந்தது.
4 ஆனால் இஸ்ரவேலின் தேவனுடைய மகிமையும் அங்கே இருந்தது. அம்மகிமையானது நான் பள்ளத்தாக்கிலே கண்டிருந்த தரிசனத்திற்கு ஒத்ததாக இருந்தது. by the Kebar Canal.
5 தேவன் என்னிடம் பேசினார். அவர் சொன்னார்: “மனுபுத்திரனே, வடக்கை நோக்கிப் பார்.” எனவே, நான் வடக்கு நோக்கிப் பார்த்தேன்! அங்கே, பலிபீடத்தின் வாசலுக்கு வடக்கே, நடையிலே தேவனுக்கு எரிச்சலை உண்டாக்குகிற சிலை இருந்தது.
6 பிறகு தேவன் என்னிடம் சொன்னார்: “மனுபுத்திரனே, இஸ்ரவேல் ஜனங்கள் செய்கிற வெறுக்கத்தக்க காரியங்களை நீ காண்கிறாயா? அவர்கள் இங்கே எனது ஆலயத்தை அடுத்து அந்த பயங்கரமான சிலையைக் வைத்திருகிறார்கள்! நீ என்னோடு வந்தால், இதைவிடப் பயங்கரமானவற்றையெல்லாம் நீ பார்க்கலாம்!”
7 எனவே, நான் பிரகாரத்தின் வாசலுக்குப் போனேன். நான் சுவற்றில் ஒரு துவாரத்தைப் பார்த்தேன்.
8 தேவன் என்னிடம், “மனுபுத்திரனே, சுவற்றில் ஒரு துவாரம் செய்” என்றார். எனவே, நான் சுவற்றில் ஒரு துவாரம் செய்தேன். அங்கே நான் ஒரு கதவைப் பார்த்தேன்.
9 பிறகு தேவன் என்னிடம் சொன்னார்: “உள்ளே போய் ஜனங்கள் செய்யும் வெறுக்கத்தக்கதும் கெட்டதுமானவற்றையெல்லாம் பார்.”
10 எனவே, நான் உள்ளே போய் பார்த்தேன். நீங்கள் நினைத்துப் பார்க்கவே வெறுக்கின்ற ஊர்கின்ற மற்றும் ஓடுகின்ற மிருகங்களின் சிலைகள் இருந்தன. அவை இஸ்ரவேல் ஜனங்களால் வழிபடப்படுகிற அருவருப்பான சிலைகள். அந்த நரகலான சிலைகள் சுவற்றில் செதுக்கப்பட்டிருந்தன!
11 பின்னர், நான் இஸ்ரவேல் வம்சத்தாரின் மூப்பரில் (தலைவர்கள்) எழுபது பேரும் அவர்களின் நடுவிலே சாப்பானுடைய மகனாகிய யசனியாவும் தொழுதுகொண்டுஇருப்பதைக்கவனித்தேன். அவர் கள் ஜனங்களுக்கு முன்னால் இருந்தனர்! ஒவ்வொரு தலைவரும் தன் கையிலே தூப கலசத்தை வைத்திருந்தனர். அவற்றிலிருந்து வெளிவந்த புகை காற்றில் எழும்பியது:
12 பிறகு தேவன் என்னிடம் சொன்னார். “மனுபுத்திரனே, இருளிலே இஸ்ரவேலின் மூப்பர்கள் என்ன செய்கிறார்கள் என்பதைப் பார்த்தாயா? ஒவ்வொருவனும் தமது பொய்த் தெய்வத்துக்கு ஒரு சிறப்பான அறை வைத்திருக்கிறான். அம்மனிதர்கள் தங்களுக்குள், ‘கர்த்தரால் நம்மைப் பார்க்கமுடியாது. கர்த்தர் இந்நாட்டை விட்டு விலகிப்போய்விட்டார்’ என்கின்றனர்.”
13 பிறகு தேவன் என்னிடம்: “நீ என்னோடு வந்தால், அம்மனிதர்கள் இதைவிடப் பயங்கரமானவற்றைச் செய்வதை நீ காணலாம்” என்றார்.
14 பிறகு தேவன், கர்த்தருடைய ஆலய வாசலுக்கு அழைத்துச் சென்றார். இந்த வாசல் வடப் பக்கத்தில் இருந்தது. அங்கே பெண்கள் அமர்ந்து அழுதுகொண்டிருப்பதைப் பார்த்தேன். அவர்கள் பொய்த் தெய்வமான தம்மூஸுக்காகத் துக்கப்பட்டுக்கொண்டிருந்தனர்.
15 தேவன் என்னிடம் சொன்னார்: “மனுபுத்திரனே, இப்பயங்கரமானவற்றைப் பார்த்தாயா? என்னோடு வா. இதைவிட மிக மோசமானவற்றை நீ பார்ப்பாய்!” என்றார்.
16 பிறகு கர்த்தருடைய ஆலயத்திலுள்ள உட்பிரகாரத்திற்கு அழைத்துச் சென்றார். அந்த இடத்தில் 25 பேர் குனிந்து தொழுதுகொண்டிருந்ததைப் பார்த்தேன். அவர்கள் கர்த்தருடைய ஆலயத்தின் வாசல் நடையிலே மண்டபத்துக்கும் பலிபீடத்துக்கும் நடுவிலே தவறான திசை நோக்கி இருந்தனர்! அவர்களின் முதுகுகள் பரிசுத்த இடத்தின் பக்கம் திரும்பியிருக்க அவர்கள் சூரியனைப் பார்த்து குனிந்து வணங்கிக்கொண்டிருந்தார்கள்!
17 பிறகு தேவன் சொன்னார்: “மனுபுத்திரனே, இதனைப் பார்த்தாயா? யூதா ஜனங்கள் எனது ஆலயத்தை முக்கியமானதாகக் கருதாமல், என் ஆலயத்தில் இவ்வாறு பயங்கரமான காரியங்களைச் செய்கின்றனர்! இந்நாடு வன்முறையால் நிறைந்துள்ளது. என்னைக் கோபப்படுத்தும்படியான காரியங்களை எப்பொழுதும் செய்கின்றனர். பார்! தம் மூக்கில் வளையங்களை சந்திரன் எனும் பொய்த் தெய்வத்தை கௌரவப்படுத்துவதற்காக அணிந்துள்ளனர்!
18 நான் எனது கோபத்தைக் காட்டுவேன். நான் அவர்களிடம் எவ்வித இரக்கமும் காட்டமாட்டேன்! நான் அவர்களுக்காக வருத்தப்படமாட்டேன்! அவர்கள் அழுது, சத்தமானக் குரலில் என்னைக் கூப்பிடுவார்கள்! ஆனால் நான் அவற்றைக் கவனிக்க மறுக்கிறேன்!”