1 அப்பொழுது, இறைவாக்கினர் ஆகாயும், இத்தோ மகன் செக்கரியாவும் — யூதாவிலும் எருசலேமிலும் வாழ்ந்த யூதருக்கு இஸ்ரயேலின் கடவுள் பெயரால் இறைவாக்கு உரைத்தனர்.2 அப்போது செயல்தியேல் மகன் செருபாபேலும், யோசதாக்கின் மகன் ஏசுவாவும் முன்வந்து, எருசலேமிலுள்ள கடவுளின் கோவிலை மீண்டும் கட்டியெழுப்பத் தொடங்கினர். கடவுளின் இறைவாக்கினர் அவர்களோடு இருந்து உதவி செய்தனர்.⒫3 அக்காலத்தில், பேராற்றின் அக்கரைப்பகுதிக்கு ஆளுநராக இருந்த தத்னாயும், செத்தர்போசனாயும் அவர்களைச் சார்ந்தவர்களும், அவர்களிடம் வந்து, “இக்கோவிலைக் கட்டியெழுப்பவும் இம்மதில்களைக் கட்டி முடிக்கவும் உங்களுக்கு உத்தரவு கொடுத்தது யார்?” என்று வினவினர்.4 மேலும் அவர்கள், “இக்கட்டடத்தைக் கட்டுவோர் யார், யார்?” என்று வினவினர்.5 கடவுளின் கருணைக் கண் யூத மூப்பர்கள் மேல் இருந்ததால் இச்செய்தி தாரியுவைச் சென்றடையும்வரை அவர்களால் தடுத்து நிறுத்த இயலவில்லை. எனவே அவர்கள் தாரியுவுக்கு இதைப்பற்றி ஒரு மடல் அனுப்பினார்கள்.6 பேராற்றின் அக்கரைப் பகுதிக்கு ஆளுநனாக இருந்த தத்னாயும் செத்தர்போசனாயும் அவனைச் சார்ந்தவர்களும் பேராற்றின் அக்கரைப் பகுதிக்கு அதிகாரியானவர்களும் மடலின் நகல் ஒன்றை மன்னர் தாரியுவுக்கு அனுப்பினர்.⒫7 அவருக்கு அனுப்பிய கடிதத்தில் எழுதப்பட்டிருந்தது பின்வருமாறு: “மன்னர் தாரியுவுக்கு எல்லா நலமும் உரித்தாகுக!8 மன்னர் அறியவேண்டியது; யூதா மாநிலத்திலுள்ள மாபெரும் கடவுளின் கோவிலுக்குச் சென்றிருந்தோம்; பெரும் கற்களால் அது கட்டப்பட்டு வருகிறது. சுவரில் மரங்கள் வைக்கப்பட்டுள்ளன. இவ்வேலை நுணுக்கமாகவும் விரைவாகவும் செய்யப்பட்டு வருகின்றது.9 எனவே அம் மூப்பர்களை நோக்கி, ‘இக்கோவிலைக் கட்டவும், இச்சுவர்களைக் கட்டி முடிக்கவும் உத்தரவு கொடுத்தது யார்?’ என்றோம்.10 அவர்கள் தலைவர்கள் யார், யார் என்பதை உமக்கு எழுதி அறிவிக்க அவர்களின் பெயர்களைக் கேட்டோம்.11 அவர்கள் எங்களுக்குச் சொன்ன மறுமொழியாவது; ‘விண்ணுக்கும் மண்ணுக்கும் கடவுளானவரின் ஊழியர்கள் நாங்கள். பல ஆண்டுகளுக்குமுன் இஸ்ரயேலின் பேரரசர் ஒருவர் கட்டிய கோவிலைத் தான் மீண்டும் கட்டியெழுப்புகிறோம்.12 எம் முன்னோர் விண்ணகக் கடவுளுக்குச் சினமூட்டியதால், அவர் பாபிலோனின் மன்னனும் கல்தேயனுமான நெபுகத்னேசரின் கையில் அவர்களையும், இக்கோவிலையும் ஒப்புவித்தார். அவன் இக்கோவிலை அழித்தான். மக்களை பாபிலோனுக்கு நாடு கடத்தினான்.13 ஆனால் பாபிலோன் மன்னர் சைரசு தம் முதலாம் ஆட்சி ஆண்டில் கடவுளின் இக்கோவிலைக் கட்ட ஆணையிட்டார்.14 மேலும் நெபுகத்னேசர் எருசலேமிலுள்ள கோவிலிருந்து பாபிலோன் கோவிலுக்குக் கொண்டு வந்த திருக்கோவில் பொன், வெள்ளிப் பாத்திரங்களை மன்னர் சைரசு பாபிலோன் கோவிலிருந்து எடுத்தார். ஆளுநராகத் தாம் நியமித்த சேஸ்பட்சர் என்பவரிடம் ஒப்படைத்தார்.15 மன்னர் அவரிடம் “இப்பாத்திரங்களை எடுத்துக்கொண்டு போய் எருசலேம் கோவிலில் வை. கடவுளின் கோவில் அது இருந்த இடத்திலேயே கட்டப்படட்டும்” என்றார்.16 எனவே சேஸ்பட்சர் திரும்பி வந்து எருசலேமில் கடவுளின் கோவிலுக்கு அடித்தளம் இட்டார். அதனால் அன்று முதல் இன்று வரை இது கட்டப்பட்டு வருகின்றது. ஆனால் அது முடிவு பெறவில்லை.17 ஆகவே, இப்பொழுது மன்னர் விரும்பினால், பாபிலோனில் உள்ள தமது கருவூலத்தில் தேடிப்பார்க்கட்டும். எருசலேமில் கடவுளுக்குக் கோவில் கட்டச் சைரசு மன்னர் கட்டளை கொடுத்திருக்கின்றாரா என்பதை அறியட்டும். இதைக் குறித்து மன்னர் தம் விருப்பத்தை எங்களுக்குத் தெரிவிக்க வேண்டுகின்றோம்’.”
By continuing to browse the site, you are agreeing to our use of cookies.