1 இதன்பின், பாரசீக மன்னரான அர்த்தக்சஸ்தாவின் ஆட்சிக் காலத்தில் எஸ்ரா பாபிலோனிலிருந்து புறப்பட்டார்.

2 இந்த எஸ்ரா செராயாவின் மகன்; இவர் அசாரியாவின் மகன்; இவர் இல்கியாவின் மகன்; இவர் சல்லூமின் மகன்; இவர் சாதோக்கின் மகன்; இவர் அகித்தோப்பின் மகன்;

3 இவர் அமாரியாவின் மகன்; இவர் அசரியாவின் மகன்; இவர் மெரயோத்தின் மகன்;

4 இவர் செரகியாவின் மகன்; இவர் உசீயின் மகன்; இவர் புக்கீயின் மகன்;

5 இவர் அபிசுவாவன் மகன்; இவர் பினகாசின் மகன்; இவர் எலயாசரின் மகன்; இவர் தலைமைக் குருவான ஆரோனின் மகன்.⒫

6 எஸ்ரா இஸ்ரயேலின் கடவுளான ஆண்டவர் மோசேக்கு அளித்திருந்த திருச்சட்டநூலில் வல்லுநர். அவருடைய கடவுளான ஆண்டவரின் அருட்கரம் அவரோடு இருந்ததால், அவருக்குத் தேவையான அனைத்தையும் மன்னர் அவருக்குக் கொடுத்தார்.

7 அவரோடு இஸ்ரயேல் மக்களில் சிலரும், குருக்கள், லேவியர், பாடகர், வாயிற்காப்போர், கோவில் ஊழியர் ஆகியோரில் சிலரும், மன்னரான அர்த்தக்சஸ்தாவின் ஏழாம் ஆட்சி ஆண்டில் எருசலேமிற்குப் புறப்பட்டனர்.

8 அவர்கள் மன்னரின் ஏழாம் ஆட்சியாண்டில் ஐந்தாம் திங்கள் எருசலேமை அடைந்தார்கள்.

9 ஆண்டவரின் அருட்கரம் எஸ்ராவோடு இருந்ததால், முதலாம் திங்களின் முதல் நாள் பாபிலோனிலிருந்து புறப்பட்ட அவர் ஐந்தாம் திங்கள் முதல் நாள் எருசலேமை வந்தடைந்தார்.

10 எஸ்ரா ஆண்டவரின் திருச்சட்டத்தைக் கற்று அதன்படி நடப்பதிலும், சட்டத்தையும், முறைமையையும் இஸ்ரயேல் மக்களுக்குக் கற்றுக் கொடுப்பதிலும் தன்னை முழுமையாக ஈடுபடுத்தினார்.

11 ஆண்டவரின் கட்டளைகளைச் சார்ந்த காரியங்களிலும், இஸ்ரயேலரின் சட்டங்களிலும் வல்லுநரான குரு எஸ்ராவிடம் மன்னர் அர்த்தக்சஸ்தா வழங்கிய ஆவணத்தின் நகல் பின்வருமாறு;⒫

12 “மன்னர்களின் மன்னரான அர்த்தக்சஸ்தா என்னும் நான் விண்ணகக் கடவுளின் சட்டத்தில் வல்லுநரான குரு எஸ்ராவிற்கு வாழ்த்துக்கூறி எழுதுவது;

13 என் ஆட்சிக்குட்பட்ட இஸ்ரயேல் மக்களினத்திலும், குருக்களிலும், லேவியர்களிலும் விருப்பமுள்ளவர்கள் உம்மோடு எருசலேமிற்குச் செல்ல நான் அனுமதி வழங்குகிறேன்.

14 ஏனெனில், உமது கையிலிருக்கிற உம் கடவுளின் திருச்சட்டத்தின்படி, யூதாவிலும் எருசலேமிலும் விசாரணை செய்யும்படி மன்னராகிய நானும் என் ஆலோசகர் எழுவரும் உம்மை அனுப்புகிறோம்.

15 மேலும் மன்னராகிய நானும் என் ஆலோசகர்களும் எருசலேமில் வாழும் இஸ்ரயேலின் கடவுளுக்கு நாங்கள் மனமுவந்து ஒப்புக்கொடுத்த பொன்னையும், வெள்ளியையும் எடுத்துச் செல்லவும்,

16 மற்றும், பாபிலோன் நாடெங்கும் உமக்குக் கிடைக்கும் பொன்னையும் வெள்ளியையும், அவற்றோடு எருசலேமில் உள்ள தங்கள் கடவுளின் இல்லத்திற்காக ஒப்புக் கொடுக்கும் காணிக்கைகளையும் எடுத்துச் செல்லவும் நாங்கள் அனுமதி அளிக்கிறோம்.

17 இப்பணத்தைகொண்டு காளைகளையும், ஆட்டுக்கிடாய்களையும், செம்மறிக் குட்டிகளையும், தானிய, நீர்மப் படையல்களையும் கவனத்துடன் வாங்கி, எருசலேமில் உள்ள உங்கள் கடவுளின் இல்லப்பீடத்தில் காணிக்கையாக்கும்.

18 எஞ்சிய வெள்ளியையும், பொன்னையும், உமக்கும் உம் சகோதரர்களுக்கும் நலமெனப்பட்டதை உங்கள் கடவுளின் திருவுளப்படி செய்யும்.

19 உம் கடவுளின் இல்ல வழிபாட்டுக்காக உம்மிடம் கொடுக்கப்பட்ட பாத்திரங்களை எருசலேமில் உள்ள உம் கடவுளின் திருமுன் வையும்.

20 மேலும், உம் கடவுளின் இல்லதிற்கு இதற்குமேல் தேவையானவற்றை மன்னரின் கருவூலத்திலிருந்து நீர் பெற்றுக் கொள்ளலாம்.

21 மன்னர் அர்த்தக்சஸ்தா என்னும் நான் யூப்ரத்தீசின் அக்கரைப் பகுதியில் உள்ள பொருளாளர்களுக்குக் கட்டளையிடுவது; விண்ணகக் கடவுளின் திருச்சட்ட வல்லுநரும் குருவுமாகிய எஸ்ரா உங்களிடம் கேட்பதையெல்லாம் உடனடியாகக் கொடுக்கவும்.

22 அவருக்கு நூறு தாலந்து வெள்ளி, நூறு படி கோதுமை, நூறு குடம் திராட்சை இரசம், நூறு குடம் எண்ணெய் ஆகியவற்றைத் தேவையான அளவு கொடுக்கலாம்.

23 நாட்டை ஆளும் மன்னர்மீதும், அவர் மக்கள் மீதும், விண்ணகக் கடவுள் சினம் கொள்ளாதபடி, அவரின் இல்லத்திற்கு, அவர் கட்டளையிட்ட அனைத்தும் கொடுக்கப்படவேண்டும்.

24 மேலும், நான் அறிவிப்பது; குருக்கள், லேவியர், பாடகர், வாயிற்காவலர், கோவிற் பணியாளர், கடவுளது இந்த இல்லத்தின் மற்ற ஊழியர் எவர் மீதும் திறையோ, வரியோ, தீர்வையோ சுமத்துவது முறையன்று.

25 எஸ்ரா, கடவுள் உமக்குக் கொடுத்துள்ள ஞானத்தின்படி யூப்பிரத்தீசின் அக்கரைப் பகுதியில் வாழும் எல்லா மக்களுக்கும் நீதி வழங்க, உம் கடவுளின் திருச்சட்டத்தை அறிந்தவரான நீதிபதிகளையும், ஆளுநர்களையும் ஏற்படுத்தும்; திருச்சட்டம் அறியாதவர்களுக்கு அதைக் கற்பியும்.

26 மேலும் திருச்சட்டத்திற்கும், மன்னரின் கட்டளைகளுக்கும் கீழ்ப்படியாதவருக்குக் கண்டிப்பாய் தண்டனை கொடுக்கப்படவேண்டும்; மரண தண்டனையோ நாடு கடத்தபடுதலோ சொத்துப் பறிமுதலோ சிறைத் தணடனையோ கொடுக்கப்படட்டும்”.

27 எருசலேமிலுள்ள ஆண்டவரின் இல்லத்தை அழகுபடுத்தும்படி மன்னரைத் தூண்டிய நம் முன்னோரின் கடவுளான ஆண்டவர் வாழ்த்தப்பெறுவாராக!

28 மன்னர், அவர்தம் ஆலோசகர், ஆற்றல்மிகு அரச அதிகாரிகள் ஆகியோரின் பார்வையில் தயவுகிடைக்கும்படி செய்தவர் அவரே! என் கடவுளான ஆண்டவரின் அருள்கரம் என்னோடு இருந்ததால், நான் திடம் கொண்டு, இஸ்ரயேலின் தலைவர்களை ஒன்று சேர்த்து, அவர்களை என்னோடு அழைத்துவந்தேன்.

எஸ்றா 7 ERV IRV TRV