ஆதியாகமம் 12 ERV IRV TRV KJV ASV BBE DBY WBT WEB YLT
1 ஆண்டவர் ஆபிராமை நோக்கி, “உன் நாட்டிலிருந்தும் உன் இனத்தவரிடமிருந்தும் உன் தந்தை வீட்டிலிருந்தும் புறப்பட்டு நான் உனக்குக் காண்பிக்கும் நாட்டிற்குச் செல்.2 உன்னை நான் பெரிய இனமாக்குவேன்; உனக்கு ஆசி வழங்குவேன். உன் பெயரை நான் சிறப்புறச் செய்வேன்; நீயே ஆசியாக விளங்குவாய்.3 உனக்கு ஆசி கூறுவோர்க்கு நான் ஆசி வழங்குவேன்; உன்னைச் சபிப்போரை நானும் சபிப்பேன்; உன் வழியாக மண்ணுலகின் மக்களினங்கள் அனைத்தும் ஆசி பெறும்” என்றார்.⒫4 ஆண்டவர் ஆபிராமுக்குக் கூறியபடியே அவர் புறப்பட்டுச் சென்றார். அவருடன் லோத்தும் சென்றார். ஆபிராம் ஆரானைவிட்டுச் சென்றபொழுது அவருக்கு வயது எழுபத்தைந்து.5 ஆபிராம் தம் மனைவி சாராயையும் தம் சகோதரனின் மகன் லோத்தையும் உடனழைத்துச் சென்றார். அவர்கள் ஆரானில் சேர்த்திருந்த செல்வத்துடனும், வைத்திருந்த ஆள்களுடனும் கானான் நாட்டிற்குப் புறப்பட்டுச் சென்று அந்நாட்டைச் சென்றடைந்தனர்.6 ஆபிரகாம் அந்நாட்டில் நுழைந்து செக்கேமில் இருந்த மோரேயின் கருவாலி மரத்தை அடைந்தார். அப்பொழுது கானானியர் அந்நாட்டில் வாழ்ந்து வந்தனர்.7 ஆண்டவர் ஆபிராமுக்குத் தோன்றி, “உன் வழிமரபினர்க்கு இந்நாட்டைக் கொடுப்பேன்” என்றார். ஆகவே, தமக்குத் தோன்றிய ஆண்டவருக்கு அங்கே அவர் ஒரு பலிபீடத்தை எழுப்பினார்.8 ஆபிராம் அங்கிருந்து புறப்பட்டு, பெத்தேலுக்குக் கிழக்கே இருந்த மலைப்பக்கம் சென்று பெத்தேலுக்கு மேற்கே ஆயிக்குக் கிழக்கே கூடாரம் அமைத்துக் குடியிருந்தார். அங்கே ஆண்டவருக்கு அவர் ஒரு பலிபீடத்தை எழுப்பி ஆண்டவரது திருப்பெயரைத் தொழுதார்.9 இவ்வாறு, ஆபிராம் படிப்படியாக நெகேபு நோக்கிப் பயணம் செய்தார்.10 அப்பொழுது அந்நாட்டில் உணவுப் பஞ்சம் ஏற்பட்டது. பஞ்சம் கடுமையாக இருந்ததால், ஆபிராம் தாம் தங்கி வாழ்வதற்கு எகிப்து நாட்டிற்குச் சென்றார்.11 அவர் எகிப்தை நெருங்கிய பொழுது தம் மனைவி சாராயிடம், “நீ கண்ணுக்கு அழகானவள் என்பது எனக்குத் தெரியும்.12 எகிப்தியர் உன்னைக் காணும்பொழுது “இவள் அவனுடைய மனைவி” எனச்சொல்லி என்னைக் கொன்று விடுவர்; உன்னையோ உயிரோடு விட்டுவிடுவர்.13 உன் பொருட்டு எனக்கு நல்லது நடக்கவும் உன்னால் என் உயிர் காப்பாற்றப்படவும் நீ என் சகோதரி எனச் சொல்லி விடு” என்றார்.14 ஆபிராம் எகிப்தைச் சென்றடைந்தபொழுது, சாராய் மிகவும் அழகானவராக இருப்பதை எகிப்தியர் கண்டனர்.15 பார்வோனின் மேலதிகாரிகள் அவரைக் கண்டு அவரைப்பற்றிப் புகழ்ந்தனர். ஆகவே, அவர் பார்வோனின் அரண்மனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.16 அவர் பொருட்டு ஆபிராமுக்குப் பார்வோன் நன்மை செய்தான்; ஆடு மாடுகளையும் கழுதைகளையும், வேலைக்காரரையும், வேலைக்காரிகளையும், பெண் கழுதைகளையும் ஒட்டகங்களையும் அவருக்குக் கொடுத்தான்.⒫17 ஆனால், ஆண்டவர் ஆபிராமின் மனைவி சாராய்க்கு நேரிட்டதை முன்னிட்டுப் பார்வோனையும் அவன் குடும்பத்தாரையும் கொடிய கொள்ளை நோய்களால் துன்பப்படுத்தினார்.18 பார்வோன் ஆபிராமை அழைத்து அவரிடம், “நீ எனக்கு இப்படிச் செய்து விட்டாயே! அவள் உன் மனைவி என்று ஏன் என்னிடம் சொல்லவில்லை?19 அவள் உன் சகோதரி என்று நீ ஏன் சொன்னாய்? அதனால்தான் நான் அவளை என் மனைவியாக எடுத்துக் கொண்டேன்! இப்பொழுதே, உன் மனைவியைக் கூட்டிக்கொண்டு புறப்படு” என்றான்.20 பின் பார்வோன் தன் ஆள்களுக்குக் கட்டளையிட அவர்கள் அவரை அவர் மனைவியுடனும் அவருக்குரிய எல்லாவற்றுடனும் அனுப்பிவிட்டனர்.