1 ஆதாமின் வழிமரபின் அட்டவணை பின்வருமாறு: கடவுள் மனிதரைப் படைத்தபொழுது அவர்களைத் தம் சாயலில் உருவாக்கினார்.

2 ஆணும் பெண்ணுமாக அவர்களைப் படைத்தார். அவர்களைப் படைத்த நாளில் அவர்களுக்கு ஆசி வழங்கி, ‘மனிதர்’ என்று பெயரிட்டார்.⒫

3 ஆதாமுக்கு நூற்று முப்பது வயதானபோது, அவனுக்கு அவன் சாயலிலும் உருவிலும் மகன் ஒருவன் பிறந்தான்; அவனுக்குச் சேத்து என்று பெயரிட்டான்.

4 சேத்து பிறந்தபின் ஆதாம் எண்ணூறு ஆண்டுகள் வாழ்ந்தான். ஆதாமுக்குப் புதல்வரும் புதல்வியரும் பிறந்தனர்.

5 மொத்தம் தொள்ளாயிரத்து முப்பது ஆண்டுகள் வாழ்ந்தபின் ஆதாம் இறந்தான்.⒫

6 சேத்துக்கு நூற்றைந்து வயதானபோது அவனுக்கு ஏனோசு பிறந்தான்.

7 ஏனோசு பிறந்தபின் சேத்து எண்ணூற்று ஏழு ஆண்டுகள் வாழ்ந்தான். சேத்துக்குப் புதல்வரும் புதல்வியரும் பிறந்தனர்.

8 மொத்தம் தொள்ளாயிரத்துப் பன்னிரண்டு ஆண்டுகள் வாழ்ந்தபின் சேத்து இறந்தான்.⒫

9 ஏனோசுக்குத் தொண்ணூறு வயதானபோது அவனுக்குக் கேனான் பிறந்தான்.

10 கேனான் பிறந்தபின் ஏனோசு எண்ணூற்றுப் பதினைந்து ஆண்டுகள் வாழ்ந்தான். கேனானுக்குப் புதல்வரும் புதல்வியரும் பிறந்தனர்.

11 மொத்தம் தொள்ளாயிரத்தைந்து ஆண்டுகள் வாழ்ந்தபின் ஏனோசு இறந்தான்.⒫

12 கேனானுக்கு எழுபது வயதான போது, அவனுக்கு மகலலேல் பிறந்தான்.

13 மகலலேல் பிறந்த பின் கேனான் எண்ணூற்று நாற்பது ஆண்டுகள் வாழ்ந்தான். கேனானுக்குப் புதல்வரும் புதல்வியரும் பிறந்தனர்.

14 மொத்தம் தொள்ளாயிரத்துப் பத்து ஆண்டுகள் வாழ்ந்த பின் கேனான் இறந்தான்.⒫

15 மகலலேலுக்கு அறுபத்தைந்து வயதானபோது, அவனுக்கு எரேது பிறந்தான்.

16 எரேது பிறந்தபின் மகலலேல் எண்ணூற்று முப்பது ஆண்டுகள் வாழ்ந்தான். மகலலேலுக்குப் புதல்வரும் புதல்வியரும் பிறந்தனர்.

17 மொத்தம் எண்ணூற்றுத் தொண்ணூற்றைந்து ஆண்டுகள் வாழ்ந்த பின் மகலலேல் இறந்தான்.⒫

18 எரேதுக்கு நூற்று அறுபத்திரண்டு வயதானபோது, அவனுக்கு ஏனோக்கு பிறந்தான்.

19 ஏனோக்கு பிறந்தபின் எரேது எண்ணூறு ஆண்டுகள் வாழ்ந்தான். எரேதுக்குப் புதல்வரும் புதல்வியரும் பிறந்தனர்.

20 மொத்தம் தொள்ளாயிரத்து அறுபத்திரண்டு ஆண்டுகள் வாழ்ந்த பின் எரேது இறந்தான்.⒫

21 ஏனோக்குக்கு அறுபத்தைந்து வயதானபோது, அவனுக்கு மெத்துசேலா பிறந்தான்.

22 மெத்துசேலா பிறந்தபின், ஏனோக்கு முந்நூறு ஆண்டுகள் கடவுளோடு நடந்தான். ஏனோக்கிற்குப் புதல்வரும் புதல்வியரும் பிறந்தனர்.

23 ஏனோக்கு மொத்தம் முந்நூற்று அறுபத்தைந்து ஆண்டுகள் வாழ்ந்தான்.

24 ஏனோக்கு கடவுளோடு நடந்து கொண்டிருந்தான். பின்பு அவனைக் காணவில்லை. ஏனெனில் கடவுள் அவனை எடுத்துக்கொண்டார்.⒫

25 மெத்துசேலாவுக்கு நூற்று எண்பத்தேழு வயதானபோது அவனுக்கு இலாமேக்கு பிறந்தான்.

26 இலாமேக்கு பிறந்தபின், மெத்துசேலா எழுநூற்று எண்பத்திரண்டு ஆண்டுகள் வாழ்ந்தான். மெத்துசேலாவுக்குப் புதல்வரும் புதல்வியரும் பிறந்தனர்.

27 மெத்துசேலா மொத்தம் தொள்ளாயிரத்து அறுபத்தொன்பது ஆண்டுகள் வாழ்ந்தபின் இறந்தான்.⒫

28 இலாமேக்கிற்கு நூற்று எண்பத்திரண்டு வயதானபோது, அவனுக்கு மகன் ஒருவன் பிறந்தான்.

29 அவன் “ஆண்டவரின் சாபத்திற்குள்ளான மண்ணில் நமக்கு உண்டான கடின வேலையிலும் உழைப்பிலும் நமக்கு ஆறுதல் அளிப்பான்” என்று சொல்லி அவனுக்கு ‘நோவா’* என்று பெயரிட்டான்.

30 நோவா பிறந்தபின் இலாமேக்கு ஐந்நூற்றுத்தொண்ணூற்றைந்து ஆண்டுகள் வாழ்ந்தான். இலாமேக்கிற்குப் புதல்வரும் புதல்வியரும் பிறந்தனர்.

31 இலாமேக்கு மொத்தம் எழுநூற்று எழுபத்தேழு ஆண்டுகள் வாழ்ந்தபின் இறந்தான்.⒫

32 நோவாவிற்கு ஐந்நூறு வயதானபோது, அவருக்குச் சேம், காம், எப்பேத்து ஆகியோர் பிறந்தனர்.

ஆதியாகமம் 5 ERV IRV TRV