ஏசாயா 23 ERV ஒப்பிடு Tamil Easy Reading Version
1 தீருவைப் பற்றிய துயரச் செய்தி: தர்ஷீஸ் கப்பல்களே, துக்கமாக இருங்கள். உங்கள் துறைமுகம் அழிக்கப்பட்டிருக்கிறது. (இந்தச் செய்தி கப்பலில் வந்த ஜனங்களுக்கு, அவர்கள் கித்தீம் தேசத்திலிருந்து வரும்போதே சொல்லப்பட்டது).
2 கடற்கரையில் வாழும் ஜனங்களே, துக்கமாய் இருங்கள். தீரு “சீதோனின் வியாபாரம்” ஆக இருந்தது. அக்கடற்கரை நகரம் கடலைத் தாண்டி வணிகர்களை அனுப்பியது. அவர்கள் உன்னைச் செல்வத்தால் நிரப்பினார்கள்.
3 அந்த மனிதர்கள் கடல்களில் பயணம் செய்து தானியங்களைத் தேடினார்கள். தீருவிலிருந்து வந்த ஜனங்கள் நைல் ஆற்றின் கரையில் விளைந்த தானியங்களை வாங்கி, மற்ற நாடுகளில் அவற்றை விற்றனர்.
4 சீதோனே, நீ மிகவும் துக்கமாக இருக்க வேண்டும். ஏனென்றால், இப்போது கடலும் கடற்கோட்டையும் கூறுகிறது: எனக்குப் பிள்ளைகள் இல்லை. நான் பிள்ளைப் பேற்றின் வலியை உணர்ந்திருக்கவில்லை. நான் பிள்ளைகளைப் பெற்றுக்கொண்டதில்லை. இளம் ஆண்களையும், பெண்களையும் நான் வளர்த்திருக்கவில்லை.
5 தீருவைப் பற்றிய செய்திகளை எகிப்து கேட்கும். இச்செய்திகள் எகிப்தை துக்கத்தினால் துன்புறச் செய்யும்.
6 கப்பல்களே நீங்கள் தர்ஷீசுக்குத் திரும்புங்கள். கடற்கரையில் வாழும் ஜனங்களே, துக்கமாக இருங்கள்.
7 கடந்த காலத்தில், தீரு நகரில் சந்தோஷமாக இருந்தீர்கள். அந்நகரம் துவக்க காலம் முதல் வளர்ந்து வந்தது. அந்நகர ஜனங்கள் தொலை தூரங்களுக்குப் பயணம் செய்து வாழ்ந்திருக்கின்றனர்.
8 தீரு நகரம் பல தலைவர்களை உருவாக்கியிருக்கிறது. அந்நகர வணிகர்கள் இளவரசர்களைப் போன்றிருக்கின்றனர். அதன் வியாபாரிகள் எங்கும் மதிப்பு பெறுகிறார்கள். எனவே யார் தீருவுக்கு எதிராக திட்டங்கள் தீட்டினார்கள்?
9 சர்வ வல்லமையுள்ள கர்த்தர் இருந்தார். அவர்களை அவர் முக்கியத்துவம் இல்லாதவர்களாகச் செய்ய முடிவு செய்தார்.
10 தர்ஷீஸிலிருந்து வந்த கப்பல்களே! உங்கள் நாட்டிற்குத் திரும்பிப்போங்கள். கடலை ஒரு சிறு ஆறு போன்று கடந்து செல்லுங்கள். இப்பொழுது உங்களை எவரும் தடுக்கமாட்டார்கள்.
11 கர்த்தர் அவரது கையைக் கடலுக்கு மேல் நீட்டியிருக்கிறார். தீருவுக்கு எதிராகப் போரிட கர்த்தர் அரசுகளைச் சேகரித்துக்கொண்டிருக்கிறார். தீருவின் அரண்களை அழிக்க கர்த்தர் கானானுக்குக் கட்டளையிட்டார்.
12 கர்த்தர் கூறுகிறார், “கன்னியாகிய சீதோனின் மகளே, நீ அழிக்கப்படுவாய். நீ இனிமேல் மகிழ்ச்சி அடையமாட்டாய். ஆனால் தீரு ஜனங்கள் கூறுகிறார்கள், நமக்கு சைப்ரஸ் உதவும்! ஆனால் நீ கடலைக் கடந்து சைப்ரசுக்குச் சென்றால் நீ ஓய்வெடுக்க ஒரு இடத்தைக் கண்டு கொள்ளமாட்டாய்.”
13 எனவே தீரு ஜனங்கள் கூறுகிறார்கள், “நமக்குப் பாபிலோன் ஜனங்கள் உதவுவார்கள்! ஆனால் கல்தேயருடைய நாட்டைப் பார். இப்பொழுது பாபிலோன் ஒரு நாடாகவே இல்லை. அசீரியா பாபிலோனைத் தாக்கியது. அதைச்சுற்றிலும் போர்க் கோபுரங்களைக் கட்டியது. வீரர்கள், அழகான வீடுகளில் இருந்து எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டனர். பாபிலோனைக் காட்டு மிருகங்களுக்குரிய இடமாக அசீரியா செய்தது. பாபிலோனை அழிவுக்கேற்ற இடமாக மாற்றியது.
14 எனவே, துக்கமாயிருங்கள், தர்ஷீஸிலிருந்து வந்த கப்பல்களே, உங்கள் பாதுகாப்புக்குரிய இடம் (தீரு) அழிக்கப்படும்.”
15 70 ஆண்டுகளுக்கு ஜனங்கள் தீருவை மறப்பார்கள். (இது ஒரு அரசனின் ஆட்சிக்கால அளவு). 70 ஆண்டுகளுக்குப் பிறகு, தீரு இந்தப் பாடலில் வரும் வேசிக்குச் சமானமாய் இருக்கும்.
16 “ஆண்களால் மறக்கப்பட்ட பெண்ணே, உன் வீணையை எடுத்துக்கொண்டு நகரைச் சுற்றி நட, உன் பாடலை நன்றாக வாசி. உன் பாடலை அடிக்கடி பாடு. பிறகு, ஜனங்கள் உன்னை நினைவில் வைத்திருப்பார்கள்.”
17 70 ஆண்டுகளுக்குப் பிறகு, தீருவின் வழக்கை கர்த்தர் மீண்டும் மதிப்பீடு செய்வார். அவர் அவளுக்கு ஒரு தீர்வைக் கொடுப்பார். மீண்டும் தீரு வணிகத்தைப் பெறும் பூமியின் அனைத்து நாடுகளுக்கும் தீரு வேசியாக விளங்கும்.
18 ஆனால் தீரு தான் சம்பாதிக்கும் பணத்தைக் தனக்கென்று வைக்காது. தனது வணிகத்தால் வரும் லாபத்தைத் தீரு கர்த்தருக்காகப் பாதுகாக்கும். தீரு அச்செல்வத்தைக் கர்த்தருக்குச் சேவை செய்யும் ஜனங்களுக்குக் கொடுக்கும். எனவே, கர்த்தருடைய ஊழியக்காரர்கள் முழுமையாக சாப்பிடுவார்கள், அவர்கள் மென்மையான ஆடைகளை அணிந்துகொள்வார்கள்.