1 கர்த்தருடைய ஊழியன் கூறுகிறான், “எனது கர்த்தராகிய ஆண்டவர், என் மீது அவருடைய ஆவியை வைத்தார். தேவன் என்னை ஏழை ஜனங்களுக்கு நற்செய்திகளைச் சொல்லவும், துக்கமுள்ளவர்களுக்கு ஆறுதலளிக்கவும் தேர்ந்தெடுத்தார். கட்டப்பட்டவர்களிடம் அவர்கள் விடுதலை செய்யப்படுகிறார்கள் என்றும் சிறைப்பட்டவர்களிடம் அவர்கள் விடுதலை செய்யப்பட்டிருக்கிறார்கள் என்றும் சொல்ல தேவன் என்னை அனுப்பினார்.
2 கர்த்தர் எப்பொழுது தமது தயவைக் காட்டுவார் என்று தெரிவிக்க தேவன் என்னை அனுப்பினார். தேவன் எப்பொழுது தீயவர்களைத் தண்டிப்பார் என்பதைத் தெரிவிக்க தேவன் என்னை அனுப்பினார். துக்கப்படுகிறவர்களுக்கு ஆறுதல் அளிக்க தேவன் என்னை அனுப்பினார்.
3 சீயோனிலுள்ள துக்கப்பட்ட ஜனங்களிடம் தேவன் என்னை அனுப்பினார். நான் அவர்களைக் கொண்டாட்டத்திற்கு தயார் செய்வேன். நான் அவர்கள் தலையிலிருந்து சாம்பலை எடுத்துவிட்டு அவர்களுக்கு கிரீடத்தைக் கொடுப்பேன்.நான் அவர்களின் துக்கத்தை எடுத்துவிட்டு மகிழ்ச்சியின் எண்ணெயைக் கொடுப்பேன். நான் அவர்களின் துயரத்தை எடுத்துவிட்டு கொண்டாட்டத்தின் ஆடைகளைக் கொடுப்பேன். நான் ‘நல்ல மரங்கள்’ என்றும் ‘கர்த்தருடைய அற்புதமான செடிகள்’ என்றும் அந்த ஜனங்களுக்குப் பெயரிட தேவன் என்னை அனுப்பினார்”.
4 “அந்தக் காலத்தில், அழிந்த பழைய நகரங்கள் மீண்டும் கட்டப்படும். அவை ஆரம்பத்தில் இருந்ததுபோலவே புதியதாக்கப்படும். பற்பல ஆண்டுகளுக்கு முன்பு அழிக்கப்பட்ட நகரங்கள் எல்லாம் புதியவைபோலக் கட்டப்படும்.
5 “பிறகு, உனது பகைவர்கள் உன்னிடம் வந்து உன் ஆடுகளைக் மேய்ப்பார்கள். உனது பகைவர்களின் பிள்ளைகள் உனது வயல்களிலும் தோட்டங்களிலும் வேலை செய்வார்கள்.
6 ‘கர்த்தருடைய ஆசாரியர்கள்’ என்றும், ‘நமது தேவனுடைய ஊழியர்கள்’ என்றும் நீங்கள் அழைக்கப்படுவீர்கள். பூமியின் அனைத்து நாடுகளிலுமுள்ள செல்வங்களும் உனக்கு வரும். நீ இவற்றைப் பெற்றதைப்பற்றி பெருமை அடைவாய்.
7 “கடந்த காலத்தில், மற்றவர்கள் உன்னை அவமானப்படுத்தி, உன்மீது கெட்டவற்றைச் சொன்னார்கள். மற்ற எந்த ஜனங்களையும் விட நீ மிகுதியாக அவமானப்பட்டாய். எனவே, இரண்டு மடங்கு மிகுதியாகப் பெறுவாய். நீ என்றென்றும் மகிழ்ச்சியைப் பெறுவாய்.
8 இது ஏன் நடக்கும்? ஏனென்றால், நானே கர்த்தர்! நான் நியாயத்தை நேசிக்கிறேன். நான் திருட்டையும் தவறான அனைத்தையும் வெறுக்கிறேன். எனவே, நான் ஜனங்களுக்குரிய சம்பளத்தை அவர்களுக்கு கொடுப்பேன். நான் எனது ஜனங்களோடு ஒரு உடன்படிக்கையை என்றென்றைக்குமாகச் செய்வேன்.
9 அனைத்து நாடுகளிலும் உள்ள ஒவ்வொருவரும் எனது ஜனங்களை அறிவார்கள். எனது நாட்டிலுள்ள பிள்ளைகளை ஒவ்வொருவரும் அறிவார்கள். அவர்களைப் பார்க்கிற எவரும் கர்த்தர் அவர்களை ஆசீர்வதிக்கிறார் என்பதை அறிவார்கள்.”
10 “கர்த்தர் என்னை மிக மிக மகிழ்ச்சியுடையவராகச் செய்கிறார். என் தேவனுக்குள் என் ஆத்துமா மகிழ்ச்சியடைகிறது. கர்த்தர் இரட்சிப்பாகிய ஆடையை என் மேல் அணிவிக்கிறார். அந்த ஆடைகள் திருமணத்தில் ஒருவன் அணிகிற மென்மையான ஆடையைப் போன்றது. கர்த்தர் என்மீது நீதியின் சால்வையை அணிவிக்கிறார். அச்சால்வை மணமகளும், மணமகனும் திருமணத்தில் அணியும் அழகிய ஆடையைப்போன்றது.
11 தாவரங்கள் வளர பூமி காரணமாக இருந்தது. ஜனங்கள் தோட்டத்தில் விதைகளைத் தூவினார்கள். தோட்டம் அந்த விதைகளை வளர வைத்தது. அதே வழியில் கர்த்தர் நீதியை வளரச் செய்வார். அனைத்து நாடுகளிலும் கர்த்தர் துதியை வளரச் செய்வார்.”
ஏசாயா 61 ERV IRV TRV