எரேமியா 21 ERV ஒப்பிடு Tamil Easy Reading Version
1 எரேமியாவிற்கு கர்த்தரிடமிருந்து வார்த்தை வந்தது. யூதாவின் அரசனான சிதேக்கியா பஸ்கூர் என்ற மனிதனையும், செப்பனியா என்ற ஆசாரியனையும் எரேமியாவிடம் அனுப்பியபோது இந்த வார்த்தை வந்தது. பஸ்கூர் மல்கியா என்ற பெயருள்ளவனின் மகன். செப்பனியா, மாசெயா என்ற பெயருள்ளவனின் மகன். பஸ்கூரும் செப்பனியாவும் எரேமியாவிற்கு வார்த்தையைக் கொண்டுவந்தனர்.
2 பஸ்கூரும் செப்பனியாவும் எரேமியாவிடம், “எங்களுக்காக கர்த்தரிடம் ஜெபம் செய். என்ன நிகழும் என்று கர்த்தரிடம் கேள். நாங்கள் அறிந்துக்கொள்ள விரும்புகிறோம். ஏனென்றால் பாபிலோனின் அரசனான நேபுகாத்நேச்சர் எங்களைத் தாக்கிக்கொண்டிருக்கிறான். கர்த்தர் கடந்த காலத்தில் செய்ததுபோன்று எங்களுக்குப் பெருஞ்செயல்களை ஒருவேளை செய்வார். நேபுகாத்நேச்சார் எங்களைத் தாக்குவதை நிறுத்தி விலகும்படி கர்த்தர் செய்வார்” என்றனர்.
3 பிறகு எரேமியா, பஸ்கூருக்கும் செப்பனியாவிற்கும் பதில் சொன்னான். அவன், “சிதேக்கியா அரசனுக்குச் சொல்லுங்கள்.
4 ‘இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் சொல்வது இதுதான்: உங்கள் கைகளில் போருக்கான ஆயுதங்கள் உள்ளன. நீங்கள் அந்த ஆயுதங்களை பாபிலோனின் அரசன் மற்றும் பாபிலோனியர்களிடமிருந்து உங்களைக் காத்துக்கொள்ளுகிறீர்கள். ஆனால், நான் அந்த ஆயுதங்களைப் பயனற்றுப்போகும்படிச் செய்வேன். “‘நகரச்சுவர்களுக்கு வெளியே பாபிலோனியப் படை உள்ளது. அப்படை நகரைச் சுற்றிலும் உள்ளது. நான் விரைவில் அப்படையை எருசலேமிற்குள் கொண்டுவருவேன்.
5 யூதாவின் ஜனங்களே, உங்களுக்கு எதிராக நானே போரிடுவேன். உங்களுக்கு எதிராக நான் என் சொந்த வல்லமையான கரத்தினாலேயே போரிடுவேன். உங்களுக்கு எதிராக நான் மிகக் கடுமையாகப் போரிடுவேன். நான் எவ்வளவு கோபமாக உள்ளேன் என்பதைக் காட்டுவேன்.
6 எருசலேமில் வாழ்கிற ஜனங்களை நான் கொல்வேன். நான் ஜனங்களையும் மிருகங்களையும் கொல்வேன். நகரம் முழுவதும் பரவும் பயங்கரமான நோயால் அவர்கள் மரிப்பார்கள்.
7 அது நிகழ்ந்த பிறகு, நான் யூதாவின் அரசனான சிதேக்கியாவைப் பாபிலோனின் அரசனான நேபுகாத்நேச்சாரிடம் கொடுப்பேன். நான் சிதேக்கியாவின் அதிகாரிகளையும் நேபுகாத்நேச்சாரிடம் கொடுப்பேன். எருசலேமில் உள்ள சில ஜனங்கள் பயங்கரமான நோயால் மரிக்கமாட்டார்கள். சில ஜனங்கள் வாளால் கொல்லப்படமாட்டார்கள். சிலர் பசியால் மரிக்கமாட்டார்கள். ஆனால் நான் அந்த ஜனங்களை நேபுகாத்நேச்சாரிடம் கொடுப்பேன். நான் யூதாவின் பகைவர்களை வெல்லவிடுவேன். நேபுகாத்நேச்சாரின் படை யூதாவின் ஜனங்களைக் கொல்ல விரும்புகிறது. எனவே, யூதாவின் ஜனங்களும் எருசலேமின் ஜனங்களும் வாளால் கொல்லப்படுவார்கள். நேபுகாத்நேச்சார் எவ்வித இரக்கமும் காட்டமாட்டான். அவன் அந்த ஜனங்களுக்காக வருத்தப்படமாட்டான்.’”
8 “எருசலேம் ஜனங்களுக்கு இவற்றையும் சொல்லுங்கள். கர்த்தர் இவற்றைக் கூறுகிறார்: ‘நீங்கள் வாழ்வதா அல்லது மரிப்பதா என்பதைத் தேர்ந்தெடுக்க நானே அனுமதிப்பேன்.
9 எருசலேமில் தங்குகிற எவனும் மரிப்பான். அந்த நபர் வாளால் மரிப்பான் அல்லது பசியால் மரிப்பான் அல்லது பயங்கரமான நோயால் மரிப்பான். ஆனால், எவன் ஒருவன் எருசலேமிற்கு வெளியே போகிறானோ, பாபிலோனில் படையிடம் சரணடைகிறானோ அவன் உயிர் வாழ்வான். நகரத்தைச்சுற்றி படை உள்ளது. எனவே, நகரத்திற்குள் எவனும் உணவைக் கொண்டுவர முடியாது. ஆனால், எவன் ஒருவன் நகரத்தை விட்டுப் போகிறானோ அவனது வாழ்வு பாதுகாக்கப்படும்.
10 எருசலேம் நகரத்திற்குத் தொல்லை கொடுக்க நான் முடிவு செய்தேன். நான் நகரத்திற்கு உதவி செய்யமாட்டேன். நான் எருசலேம் நகரத்தைப் பாபிலோன் அரசனிடம் கொடுப்பேன். அவன் அதனை நெருப்பால் எரிப்பான்.’” இந்த வார்த்தை கர்த்தரிடமிருந்து வருகிறது.
11 “யூதாவின் அரசக் குடும்பத்தில் இவற்றைக் கூறுங்கள்: ‘கர்த்தரிடமிருந்து வரும் வார்த்தையை கவனி.
12 தாவீதின் குடும்பத்தினரே, கர்த்தர் இவற்றைக் கூறுகிறார்: “‘ஒவ்வொரு நாளும் நீங்கள் சரியாக ஜனங்களை நியாயம் தீர்க்கவேண்டும். இரக்கமற்ற ஒடுக்குபவர்களிடமிருந்து ஒடுக்கப்படுபவர்களைக் காப்பாற்றுங்கள். நீங்கள் இதனைச் செய்யாவிட்டால் நான் பிறகு கோபம்கொள்வேன். எனது கோபம் நெருப்பைப் போன்றது எவரும் அதனை அணைக்கமுடியாது. இது நிகழும் ஏனென்றால், நீங்கள் தீயவற்றைச் செய்திருக்கிறீர்கள்.’
13 “எருசலேமே, நான் உனக்கு எதிராக இருக்கிறேன். நீ மலையின் உச்சியில் உட்கார்ந்து இருக்கிறாய். இந்தப் பள்ளத்தாக்கின் மீதுள்ள அரசியைப் போன்று நீ உட்கார்ந்து இருக்கிறாய். எருசலேமில் ஜனங்களாகிய நீங்கள், ‘எவராலும் எங்களைத் தாக்க முடியாது! எங்கள் பலமான நகரத்திற்குள் எவராலும் வர இயலாது’” என்று கூறுகிறீர்கள். ஆனால், கர்த்தரிடமிருந்து வருகிற இந்த வார்த்தையைக் கேளுங்கள்.
14 “உங்களுக்கு ஏற்ற தண்டனையை நீங்கள் பெறுவீர்கள். உங்கள் காடுகளில் ஒரு நெருப்பைத் தொடங்குவேன். அது உங்களைச் சுற்றியுள்ள எல்லாவற்றையும் எரித்துவிடும்.”