1 இஸ்ரவேல், நீ திரும்புகிறதற்கு மனமிருந்தால் என்னிடத்தில் திரும்பு என்று கர்த்தர் சொல்லுகிறார்; நீ உன் அருவருப்புகளை என் பார்வையிலிருந்து அகற்றிவிட்டால், நீ இனி அலைந்து திரிவதில்லை.
2 நீ உண்மையுடனும், நியாயத்தோடும், நீதியுடனும், கர்த்தருடைய ஜீவனைக்கொண்டு ஆணையிடுவாய்; அந்நியமக்களும் அவருக்குள் ஆசீர்வதிக்கப்பட்டு, அவருக்குள் மேன்மைபாராட்டுவார்கள்.
3 யூதா மக்களுடனும், எருசலேம் மக்களுடனும் கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்: நீங்கள் முட்களுக்குள்ளே விதைக்காதிருங்கள், உங்கள் தரிசு நிலத்தைப் பண்படுத்துங்கள்.
4 யூதா மனிதர்களே, எருசலேமின் குடிமக்களே, உங்கள் செயல்களுடைய பொல்லாப்பினால் என் கடுங்கோபம் நெருப்பைப்போல எழும்பி, அணைப்பார் இல்லாமல் எரியாதபடிக்கு நீங்கள் கர்த்தருக்கென்று உங்களை விருத்தசேதனம்செய்து, உங்கள் இருதயத்தின் நுனித்தோலை நீக்கிப்போடுங்கள்.
5 தேசத்தில் எக்காளம் ஊதுங்கள் என்று சொல்லி, யூதாவில் அறிவித்து, எருசலேமில் கேட்கச்செய்யுங்கள்; நாம் பாதுகாப்பான பட்டணங்களுக்கு வந்துசேருங்கள் என்று சொல்லி, உரத்த சத்தமாகக் கூப்பிடுங்கள்.
6 சீயோனுக்கு நேரே கொடியேற்றுங்கள்; கூடுங்கள்; நிற்காதிருங்கள்; நான் வடக்கேயிருந்து பொல்லாப்பையும், மகா அழிவையும் வரச்செய்கிறேன்.
7 உன் தேசத்தைப் பாழாக்கிவிடுவதற்குச் சிங்கம் தன் புதரிலிருந்து எழும்பி, தேசங்களை அழிக்கிறவன் தன் இடத்திலிருந்து புறப்பட்டுவருகிறான்; உன் பட்டணங்கள் குடியிராதபடி அழிக்கப்படும் என்கிறார்.
8 இதினிமித்தம் சணல்ஆடையை அணிந்துகொள்ளுங்கள்; புலம்பி அலறுங்கள்; கர்த்தருடைய கடுங்கோபம் நம்மைவிட்டுத் திரும்பவில்லையே.
9 அந்நாளில் ராஜாவின் இருதயமும், பிரபுக்களின் இருதயமும் சோர்ந்துபோகும்; ஆசாரியர்கள் திடுக்கிட்டு, தீர்க்கதரிசிகள் திகைப்பார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
10 அப்பொழுது நான்: ஆ! கர்த்தராகிய ஆண்டவரே, உங்களுக்குச் சமாதானமிருக்கும் என்று சொன்னதினால், உண்மையாகவே இந்த மக்களுக்கும் எருசலேமுக்கும் மிகுதியான மோசத்தை வரச்செய்தீர்; பட்டயம் ஜீவன்வரை எட்டுகிறதே என்றேன்.
11 வனாந்திரத்திலுள்ள உயர்நிலங்களிலிருந்து, ஒரு தீக்காற்று என் மக்களாகிய மகளுக்கு நேராக வீசும் என்று அக்காலத்தில் இந்த மக்களுடனும் எருசலேமுடனும் சொல்லப்படும்; அது தூற்றவுமாட்டாது சுத்திகரிக்கவுமாட்டாது.
12 இதைப்பார்க்கிலும் பலமான காற்று என் காரியமாய் வரும்; இப்பொழுது நானும் அவர்களுடன் நியாயம் பேசுவேன்.
13 இதோ, மேகங்களைப்போல எழும்பிவருகிறான்; அவனுடைய இரதங்கள் பெருங்காற்றைப்போல் இருக்கிறது; அவனுடைய குதிரைகள் கழுகுகளிலும் வேகமானவைகள்; நமக்கு ஐயோ! நாம் பாழாக்கப்படுகிறோமே.
14 எருசலேமே, நீ காப்பாற்றப்படுவதற்கு உன் இருதயத்தைப் பொல்லாப்பு நீங்கக் கழுவு; எதுவரை அக்கிரம நினைவுகள் உன் உள்ளத்தில் தங்கும்.
15 தாணிலிருந்து ஒரு சத்தம் வந்து, செய்தியை அறிவிக்கிறது; எப்பிராயீமின் மலையிலிருந்து வந்து, தீங்கைப் பிரசித்தம்செய்கிறது.
16 தேசங்களுக்கு அதை நீங்கள் பிரபலப்படுத்துங்கள்; இதோ, காவற்சேவகர் தூரதேசத்திலிருந்து வந்து, யூதாவுடைய பட்டணங்களுக்கு விரோதமாய் உரத்த சத்தமிடுவார்கள் என்று எருசலேமுக்குக் கூறுங்கள்.
17 அதற்கு விரோதமாய் அவர்கள் வயல்வெளிகளின் காவற்காரரைப்போலச் சுற்றிலுமிருப்பார்கள்; அது எனக்கு விரோதமாய்க் கலகம் செய்தது என்று கர்த்தர் சொல்லுகிறார்.
18 உன் நடக்கையும் உன் செயல்களுமே இவைகளை உனக்கு சம்பவிக்கச்செய்தன; இது இத்தனை கசப்பாயிருந்து, உன் இருதயம்வரை எட்டுகிறதற்குக் காரணம் உன் பொல்லாப்புத்தானே.
19 என் குடல்கள், என் குடல்களே வலிக்கிறது; என் உள்ளம் வேதனைப்படுகிறது, என் இருதயம் என்னில் கதறுகிறது; நான் பேசாமல் அமைதலாக இருக்கமுடியாது; என் ஆத்துமாவே, எக்காளத்தின் சத்தத்தையும், போரின் ஆர்ப்பரிப்பையும் கேட்டாயே.
20 நாசத்திற்குமேல் நாசம் வருகிறதாகக் கூறப்படுகிறது; தேசமெல்லாம் பாழாகிறது; திடீரென்று என் கூடாரங்களும், ஒரு நிமிடத்தில் என் திரைகளும் பாழாக்கப்படுகிறது.
21 நான் எதுவரைக்கும் கொடியைக்கண்டு, எக்காளத்தின் சத்தத்தைக் கேட்பேன்.
22 என் மக்களோ அறிவில்லாதவர்கள், என்னை அவர்கள் அறியாதிருக்கிறார்கள்; அவர்கள் பைத்தியமுள்ள பிள்ளைகள், அவர்களுக்கு உணர்வே இல்லை; பொல்லாப்புச்செய்ய அவர்கள் அறிவாளிகள், நன்மைசெய்யவோ அவர்கள் அறிவில்லாதவர்கள்.
23 பூமியைப் பார்த்தேன், அது ஒழுங்கற்றதும் வெறுமையுமாயிருந்தது; வானங்ளையும் பார்த்தேன், அவைகளுக்கு ஒளியில்லாதிருந்தது.
24 மலைகளைப் பார்த்தேன், அவைகள் அதிர்ந்தன; எல்லாக் குன்றுகளும் அசைந்தன.
25 பின்னும் நான் பார்க்கும்போது, மனிதனில்லை; ஆகாயத்துப் பறவைகளெல்லாம் பறந்துபோயின.
26 மேலும் நான் பார்க்கும்போது, கர்த்தராலும், அவருடைய கடுங்கோபத்தாலும் பயிர்நிலம் வனாந்திரமானது; அதின் பட்டணங்களெல்லாம் இடிந்துபோனது.
27 தேசமெல்லாம் பாழாய்ப்போகும்; ஆகிலும் முற்றிலும் அழிக்கமாட்டேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
28 இதினிமித்தம் பூமி புலம்பும், உயர இருக்கிற வானங்கள் கறுத்துப்போகும்; நான் அதைச் சொன்னேன், அதைத் தீர்மானம்செய்தேன்; நான் மனஸ்தாபப்படுவதும் இல்லை; நான் அதைவிட்டுத் திரும்புவதும் இல்லை.
29 குதிரைவீரரும் வில்வீரரும் இடும் சத்தத்தினால் எல்லா ஊராரும் ஓடி, அடர்த்தியான காடுகளில் புகுந்து, கன்மலைகளிலும் ஏறுவார்கள்; ஒரு மனிதனும் அவைகளில் குடியிராதபடி எல்லா ஊர்களும் விடப்பட்டிருக்கும்.
30 பாழாய்ப்போன நீ இப்பொழுது என்ன செய்வாய்? நீ இரத்தாம்பரம் அணிந்தாலும், பொன் ஆபரணங்களால் உன்னை அலங்கரித்தாலும், உன் கண்களில் மையிட்டுக்கொண்டாலும், வீணாய் உன்னை அழகுபடுத்துவாய்; ஆசைநாயகர்கள் உன்னை அசட்டைசெய்து, உன் உயிரை வாங்கத் தேடுவார்கள்.
31 கர்ப்பவேதனைப்படுகிறவளின் சத்தமாகவும், முதல்முறை பிள்ளை பெறுகிறவளின் வியாகுலமாகவும், மகளாகிய சீயோனின் சத்தத்தைக் கேட்கிறேன்; அவள் பெருமூச்சுவிட்டு, தன் கைகளை விரித்து: ஐயோ! கொலைபாதகர்களால் என் ஆத்துமா சோர்ந்துபோகிறதே என்கிறாள்.
எரேமியா 4 ERV IRV TRV