1 அவர்களுடைய கடவுளாகிய ஆண்டவர் எரேமியா வழியாகச் சொல்லி அனுப்பிய எல்லாச் சொற்களையும் மக்கள் அனைவருக்கும் அவர் அறிவித்து முடித்தார்.2 பின்னர் ஓசயாவின் மகன் அசரியாவும், காரயாகின் மகன் யோகனானும், இறுமாப்புக் கொண்ட எல்லா ஆள்களும் எரேமியாவை நோக்கி, “நீ பொய் சொல்கிறாய். நீங்கள் எகிப்துக்குப் போய் அங்கே தங்கியிருக்க வேண்டாம் என்று சொல்வதற்காக நம் கடவுளாகிய ஆண்டவர் உன்னை அனுப்பவில்லை.3 ஆனால் கல்தேயர் கையில் எங்களை ஒப்புவிக்கவும், எங்களைச் சாவுக்கு உள்ளாக்கவும், எங்களைப் பாபிலோனுக்கு நாடுகடத்தவுமே நேரியாவின் மகன் பாரூக்கு எங்களுக்கு எதிராக உன்னைத் தூண்டிவிட்டுள்ளான்” என்றனர்.4 எனவே காரயாகின் மகன் யோகனானும், எல்லாப் படைத்தலைவர்களும், மக்கள் அனைவரும் ஆண்டவரின் குரலுக்குச் செவிகொடுக்கவில்லை; அதாவது யூதாவிலேயே தங்கவில்லை.5 காரயாகின் மகன் யோகனானும் படைத்தலைவர்கள் அனைவரும் யூதா நாட்டில் வாழும் பொருட்டு, தாங்கள் விரட்டியடிக்கப்பட்டிருந்த அனைத்து நாடுகளினின்றும் திரும்பி வந்திருந்த யூதாவில் எஞ்சினோர் அனைவரையும்6 அதாவது, ஆண், பெண், சிறுவர், அரசனின் புதல்வியர் ஆகியோரையும், சாப்பானின் பேரனும் அகிக்காமின் மகனுமான கெதலியாவின் பொறுப்பில் மெய்க்காப்பாளரின் தலைவர் நெபுசரதான் விட்டுவைத்திருந்த எல்லாரையும், இறைவாக்கினர் எரேமியாவையும் நேரியாவின் மகன் பாரூக்கையும் கூட்டிக்கொண்டு,7 எகிப்து நாட்டுக்குப் போய்த் தகபனகேசை அடைந்தனர்; ஏனெனில் அவர்கள் ஆண்டவரின் குரலுக்குச் செவி கொடுக்கவில்லை.8 தகபனகேசில் ஆண்டவரின் வாக்கு எரேமியாவுக்கு அருளப்பட்டது:9 பெரும் கற்கள் சிலவற்றை உன் கையில் எடுத்துக்கொள். தகபனகேசில் பார்வோன் அரண்மனை வாயில்களத்தில் உள்ள காரையில் யூதா மக்கள் முன்பாக அவற்றை மறைத்து வை.10 பிறகு நீ அவர்களிடம் சொல்ல வேண்டியது: இஸ்ரயேலின் கடவுளாகிய படைகளின் ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்: என் ஊழியனும் பாபிலோனிய மன்னனுமான நெபுகத்னேசரை இங்கு வரவழைப்பேன். நான் மறைத்துவைத்துள்ள இந்தக் கற்கள்மீது அவன்* தன் அரியணையை அமைத்துத் தன் கொற்றக்குடையை விரித்துவைப்பான்.11 அவன் வந்து, எகிப்து நாட்டைத் தாக்கி அழிப்பான்; கொள்ளைநோய்க்குரியோர் கொள்ளைநோய்க்குள்ளாவர்; நாடு கடத்தலுக்குரியோர் நாடுகடத்தப்படுவர்; வாளுக்குரியோர் வாளால் மாள்வர்.12 மேலும் அவன் எகிப்தியத் தெய்வங்களின் கோவில்களைத் தீக்கிரையாக்குவான்; அத்தெய்வச் சிலைகளை எரித்துத் தூக்கிச்செல்வான். இடையன் தன் ஆடையைத் துப்புரவு செய்வதுபோல், அவன் எகிப்தைத் துப்புரவு செய்வான்; அங்கிருந்து நலமே திரும்பிச் செல்வான்.13 எகிப்து நாட்டில் உள்ள பெத்சமேசின் தூண்களை அவன் தகர்த்தெறிவான்; எகிப்தியத் தெய்வங்களின் கோவில்களைத் தீக்கிரையாக்குவான்.
By continuing to browse the site, you are agreeing to our use of cookies.