எரேமியா 47 ERV ஒப்பிடு Tamil Easy Reading Version
1 தீர்க்கதரிசியான எரேமியாவிற்கு கர்த்தரிடமிருந்து வந்த வார்த்தை. பெலிஸ்தியர்களைப் பற்றிய செய்தி இது. பார்வோன் காத்சா நகரைத் தாக்குவதற்கு முன்னால் இச்செய்தி வந்தது.
2 கர்த்தர் கூறுகிறார், “வடக்கில் பகை வீரர்களைப் பார். எல்லாம் ஒன்றுக்கூடிக்கொண்டிருக்கிறார்கள். அவர்கள் வேகமான ஆறு கரையை மோதிக்கொண்டு வருவதுபோன்று வருவார்கள். அவர்கள் நாடு முழுவதையும் வெள்ளம்போன்று மூடுவார்கள். அவர்கள் பட்டணங்களையும் அதில் வாழும் ஜனங்களையும் மூடுவார்கள். அந்நாட்டில் வாழும் ஒவ்வொருவரும் உதவிக்காக அழுவார்கள்.
3 அவர்கள் ஓடுகின்ற குதிரைகளின் ஓசையைக் கேட்பார்கள். அவர்கள் இரதங்களின் ஓசையைக் கேட்பார்கள். அவர்கள் சக்கரங்களின் இரைச்சலையும் கேட்பார்கள். தந்தைகளால் பிள்ளைகளைக் காப்பாற்ற முடியாமல் போகும். அவர்கள் உதவ முடியாமல் மிகவும் பலவீனமாவார்கள்.
4 பெலிஸ்தியர்கள் எல்லோரையும் அழிக்கின்ற நேரம் வந்திருக்கின்றது. தீரு மற்றும் சீதோனில் மிச்சமுள்ளவர்களை அழிக்கும் காலம் வந்திருக்கிறது. பெலிஸ்தியர்களை கர்த்தர் மிக விரைவில் அழிப்பார். கிரெட்டே தீவிலுள்ள தப்பிப்பிழைத்த ஜனங்களை அவர் அழிப்பார்.
5 காத்சாவில் உள்ள ஜனங்கள் சோகம் அடைந்து தங்கள் தலைகளை மழித்துக்கொள்வார்கள். அஸ்கலோனிலிருந்து வந்த ஜனங்கள் மௌனமாக்கப்படுவார்கள். பள்ளத்தாக்கிலிருந்து தப்பிப் பிழைத்தவர்களே! நீங்கள் உங்களையே இன்னும் எவ்வளவு காலம் வெட்டுவீர்கள்?
6 “கர்த்தருடைய பட்டயமே! நீ இன்னும் விடவில்லை. நீ எவ்வளவுக் காலத்துக்குச் சண்டையிட்டுக்கொண்டே இருப்பாய்? நீ உனது உறைக்குள்ளே திரும்பிப்போ! ஓய்ந்திரு!
7 ஆனால் கர்த்தருடைய பட்டயம் எவ்வாறு ஓயும்? கர்த்தர் அதற்கு அஸ்கலோன் மற்றும் கடற்கரைகளையும் தாக்கும்படி கட்டளையிட்டார்.”