1 யோபு மீண்டும், “பூமியில் மனிதனுக்கு மிகுந்த கஷ்டங்களுண்டு வேலைக்கென வாங்கப்பட்ட பணியாளின் நாட்களைப் போன்றது அவன் நாட்கள்.

2 வெப்ப நாளில் மிகுந்த உழைப்பிற்குப்பின் குளிர்ந்த நிழலை நாடும் அடிமையைப் போன்றவன் மனிதன். சம்பள நாளுக்காகக் காத்திருக்கும் அப்பணியாளைப் போன்றிருக்கிறான்.

3 ஏமாற்றந்தரும் மாதங்கள் ஒன்றன்பின் ஒன்றாய் கழிந்தன. துன்பந்தரும் இரவுகளை ஒன்றன்பின் ஒன்றாய் அனுபவித்தேன்.

4 நான் படுக்கும்போது, ‘எழுவதற்கு எத்தனை சமயம் இருக்கிறது?’ என்று எண்ணுகிறேன். ஆனால் இரவு நீண்டுக் கொண்டேபோகிறது. நான் திரும்பியும் புரண்டும் சூரியன் உதிக்கும்வரை படுத்திருக்கிறேன்.

5 என் உடம்பில் புழுக்களும் அழுக்குகளும் படிந்திருக்கின்றன. என் தோல் உரிந்து புண்களால் நிரம்பியிருக்கின்றன.

6 “நெய்பவனின் நாடாவைக் காட்டிலும் என் நாட்கள் வேகமாகக் கழிகின்றன. என் வாழ்க்கை நம்பிக்கையின்றி முடிவடைகிறது.

7 தேவனே, என் வாழ்க்கை ஒரு மூச்சே என நினைவுகூறும். நான் இனிமேல் (மீண்டும்) நன்மையைப் பார்க்கப்போவதில்லை.

8 நீங்கள் என்னை மீண்டும் பார்க்கப்போவதில்லை. என்னைத் தேடுவீர்கள், ஆனால் நான் அழிந்துப்போயிருப்பேன்.

9 மேகம் மறைந்து காணாமற்போகிறது. அதைப் போன்று, ஒருவன் மரித்துக் கல்லறையில் அடக்கம் பண்ணப்படுகிறான், அவன் மீண்டும் வருவதில்லை.

10 அவனது பழைய வீட்டிற்கு அவன் மீண்டும் வரப்போவதில்லை. அவன் வீடு அவனை இனி ஒருபோதும் அறியாது.

11 “எனவே, நான் அமைதியாக இருக்கமாட்டேன்! நான் வெளிப்படையாகப் பேசுவேன்! என் ஆவி துன்புறுகிறது! என் ஆத்துமா கசந்து போயிருப்பதால் நான் முறையிடுவேன்.

12 தேவனே, ஏன் எனக்குக் காவலாயிருக்கிறீர்? நான் கடலா, கடல் அரக்கனா?

13 என் படுக்கை எனக்கு ஆறுதல் தருமென்று நம்பிக்கொண்டிருந்தேன். என் கட்டில் எனக்கு ஓய்வையும் நிம்மதியையும் தருமென்று எதிர்ப்பார்த்தேன்.

14 ஆனால் தேவனே, நான் படுத்திருக்கையில் நீர் என்னைக் கனவுகளால் பயமுறுத்துகிறீர், என்னைத் தரிசனங்களால் அச்சுறுத்துகிறீர்.

15 எனவே நான் வாழ்வதைக் காட்டிலும் மூச்சடைத்து மரிப்பதை விரும்புகிறேன்.

16 நான் என் வாழ்க்கையை வெறுக்கிறேன். நான் என்றென்றும் வாழ விரும்பமாட்டேன். என்னைத் தனிமையாக விட்டுவிடுங்கள்! ஏனெனில் என் வாழ்க்கை பொருளற்றது. (அர்த்தமற்றது)

17 தேவனே, உமக்கு மனிதன் ஏன் அத்தனை முக்கியமானவன்? ஏன் அவனைப் பெருமைப்படுத்துகிறீர்? ஏன் அவனைக் கண்டுக்கொள்கிறீர்?

18 ஏன் அவனைக் கரிசனையோடு காலை வேளைகளில் சந்தித்து, ஒவ்வொரு விநாடியும் சோதிக்கிறீர்?

19 தேவனே, என்னைவிட்டுத் தூர நீர் பார்ப்பதில்லை. என்னைவிட்டு ஒருகணமும் நீர் விலகுவதில்லை.

20 தேவனே, நீர் ஜனங்களை கவனித்து காப்பாற்றுகிறீர். நான் பாவம் செய்திருந்தால், நான் என்ன செய்ய முடியும். நீர் என்னை உமது இலக்காக ஏன் பயன்படுத்துகிறீர்? நான் உமக்குத் தொல்லையாகி போனேனா?

21 ஏன் நீர் என் தவறை மன்னிக்கக் கூடாது? என் பாவங்களை நீர் ஏன் மன்னிக்கக்கூடாது? நான் விரைவில் மடிந்து கல்லறைக்குள் வைக்கப்படுவேன். அப்போது என்னைத் தேடுவீர்கள், நான் அழிந்துப்போயிருப்பேன்” என்றான்.

யோபு 7 ERV IRV TRV