யோவான் 18 ERV IRV TRV KJV ASV BBE DBY WBT WEB YLT
1 இவற்றைக் கூறியபின் இயேசு தம் சீடர்களோடு கெதரோன் என்னும் நீரோடையைக் கடந்து சென்றார். அங்கே ஒரு தோட்டம் இருந்தது. தம் சீடர்களோடு இயேசு அதில் நுழைந்தார்.2 அவரைக் காட்டிக் கொடுத்த யூதாசுக்கு அந்த இடம் தெரியும். ஏனெனில், இயேசுவும் அவருடைய சீடர்களும் அடிக்கடி அங்குக் கூடுவர்.3 படைப் பிரிவினரையும் தலைமைக் குருக்களும் பரிசேயரும் அனுப்பிய காவலர்களையும் கூட்டிக் கொண்டு யூதாசு விளக்குகளோடும் பந்தங்களோடும் படைக்கலங்களோடும் அங்கே வந்தான்.4 தமக்கு நிகழப் போகிற அனைத்தையும் இயேசு அறிந்து அவர்கள்முன் சென்று, “யாரைத் தேடுகிறீர்கள்?” என்று கேட்டார்.5 அவர்கள் மறுமொழியாக, “நாசரேத்து இயேசுவைத் தேடுகிறோம்” என்றார்கள். இயேசு, “நான்தான்” என்றார். அவரைக் காட்டிக்கொடுத்த யூதாசும் அவர்களோடு நின்றுகொண்டிருந்தான்.6 ‘நான்தான்’ என்று இயேசு அவர்களிடம் சொன்னதும் அவர்கள் பின்வாங்கித் தரையில் விழுந்தார்கள்.7 “யாரைத் தேடுகிறீர்கள்?” என்று இயேசு மீண்டும் அவர்களிடம் கேட்டார். அவர்கள், “நாசரேத்து இயேசுவைத் தேடுகிறோம்” என்றார்கள்.8 இயேசு அவர்களைப் பார்த்து, “‘நான்தான்’ என்று உங்களிடம் சொன்னேனே. நீங்கள் என்னைத் தேடுகிறீர்கள் என்றால் இவர்களைப் போகவிடுங்கள்” என்றார்.9 “நீர் என்னிடம் ஒப்படைத்தவர்களுள் எவரையும் நான் இழந்து விடவில்லை” என்று அவரே கூறியிருந்தது இவ்வாறு நிறைவேறியது.10 சீமோன் பேதுருவிடம் ஒரு வாள் இருந்தது. அவர் அதை உருவித் தலைமைக் குருவின் பணியாளரைத் தாக்கி அவரது வலக்காதை வெட்டினார். அப்பணியாளரின் பெயர் மால்கு.11 இயேசு பேதுருவிடம், “வாளை உறையில் போடு. தந்தை எனக்கு அளித்த துன்பக் கிண்ணத்திலிருந்து நான் குடிக்காமல் இருப்பேனோ?” என்றார்.12 படைப்பிரிவினரும் ஆயிரத்தவர் தலைவரும் யூதர்களின் காவலர்களும் இயேசுவைப் பிடித்துக் கட்டி,13 முதலில் அவரை அன்னாவிடம் கொண்டுசென்றார்கள். ஏனெனில், அந்த ஆண்டில் தலைமைக் குருவாய் இருந்த கயபாவுக்கு அவர் மாமனார்.14 ‘இந்தக் கயபாதான், “மக்களுக்காக ஒருவர் மட்டும் இறப்பது நல்லது” என்று யூதர்களுக்கு ஆலோசனை கூறியவர்.15 சீமோன் பேதுருவும் மற்றொரு சீடரும் இயேசுவைப் பின்தொடர்ந்து வந்தனர். அந்தச் சீடர் தலைமைக் குருவுக்கு அறிமுகமானவர்; ஆகவே, இயேசுவுடன் தலைமைக் குருவின் மாளிகை முற்றத்தில் நுழைந்தார்.16 பேதுரு வெளியில் வாயிலருகே நின்று கொண்டிருந்தார். அப்போது தலைமைக் குருவுக்கு அறிமுகமாயிருந்த அந்தச் சீடர் வெளியே வந்து, வாயில் காவலரிடம் சொல்லிப் பேதுருவை உள்ளே கூட்டிச் சென்றார்.17 வாயில் காவல் செய்த அப்பணிப்பெண் பேதுருவிடம், “நீயும் இம்மனிதனுடைய சீடருள் ஒருவன் தானே?” என்று கேட்டார். பேதுரு, “இல்லை” என்றார்.18 அப்போது குளிராய் இருந்ததால் பணியாளர்களும் காவலர்களும் கரியினால் தீ மூட்டி அங்கே நின்று குளிர்காய்ந்து கொண்டிருந்தார்கள். பேதுருவும் சென்று அவர்களோடு நின்று குளிர் காய்ந்து கொண்டிருந்தார்.19 தலைமைக் குரு இயேசுவின் சீடர்களைப்பற்றியும் அவருடைய போதனையைப்பற்றியும் அவரிடம் கேட்டார்.20 இயேசு அவரைப் பார்த்து, “நான் உலகறிய வெளிப்படையாய்ப் பேசினேன். யூதர் அனைவரும் கூடிவரும் தொழுகைக் கூடங்களிலும் கோவிலிலும்தான் எப்போதும் கற்பித்து வந்தேன். நான் மறைவாக எதையும் பேசியதில்லை.21 ஏன் என்னிடம் கேட்கிறீர்? நான் பேசியதைக் கேட்டுக் கொண்டிருந்தவர்களிடம் கேட்டுப்பாரும். நான் என்ன சொன்னேன் என அவர்களுக்குத் தெரியுமே” என்றார்.22 அவர் இப்படிச் சொன்னதால் அங்கு நின்று கொண்டிருந்த காவலருள் ஒருவர், “தலைமைக் குருவுக்கு இப்படியா பதில் கூறுகிறாய்?” என்று சொல்லி இயேசுவின் கன்னத்தில் அறைந்தார்.23 இயேசு அவரிடம், “நான் தவறாகப் பேசியிருந்தால் தவறு என்னவெனக் காட்டும். சரியாகப் பேசியிருந்தால் ஏன் என்னை அடிக்கிறீர்?” என்று கேட்டார்.24 அதன்பின் அன்னா அவரைக் கட்டப்பட்ட நிலையில் தலைமைக் குரு கயபாவிடம் அனுப்பினார்.25 சீமோன் பேதுரு அங்கு நின்று குளிர் காய்ந்து கொண்டிருந்தார். அப்போது அங்கிருந்தவர்கள் அவரிடம், “நீயும் அவனுடைய சீடர்களுள் ஒருவன் தானே” என்று கேட்டனர். அவர் “இல்லை” என்று மறுதலித்தார்.26 தலைமைக் குருவின் பணியாளருள் ஒருவர், “நான் உன்னைத் தோட்டத்தில் அவரோடு பார்க்கவில்லையா?” என்று கேட்டார். பேதுருவால் காது வெட்டப்பட்டவருக்கு இவர் உறவினர்.27 பேதுரு மீண்டும் மறுதலித்தார். உடனே சேவல் கூவிற்று.28 அதன்பின் அவர்கள் கயபாவிடமிருந்து ஆளுநர் மாளிகைக்கு இயேசுவைக் கொண்டு சென்றார்கள். அப்போது விடியற்காலம். பாஸ்கா உணவை உண்ணுமுன் தீட்டுப் படாமலிருக்க ஆளுநர் மாளிகையில் அவர்கள் நுழையவில்லை.29 எனவே, பிலாத்து வெளியே அவர்களிடம் வந்து, “நீங்கள் இந்த ஆளுக்கு எதிராகக் கூறும் குற்றச்சாட்டு என்ன?” என்று கேட்டார்.30 அதற்கு அவர்கள், “இவன் குற்றம் செய்யாதிருந்தால் இவனை நாங்கள் உம்மிடம் ஒப்புவித்திருக்க மாட்டோம்” என்றார்கள்.31 பிலாத்து அவர்களிடம், “நீங்கள் இவனைக் கொண்டுபோய் உங்கள் சட்டப்படி இவனுக்குத் தீர்ப்பு வழங்குங்கள்” என்றார். யூதர்கள் அவரிடம், “சட்டப் படி நாங்கள் யாருக்கும் மரண தண்டனை விதிக்க முடியாது” என்றார்கள்.32 இவ்வாறு, தாம் எப்படிப்பட்ட சாவுக்கு உட்படப் போகிறார் என்பதைக் குறிப்பிட்டு இயேசு கூறியிருந்ததை நிறைவேறச் செய்தார்கள்.⒫33 பிலாத்து மீண்டும் ஆளுநர் மாளிகைக்குள் சென்று இயேசுவைக் கூப்பிட்டு, அவரிடம், “நீ யூதரின் அரசனா?” என்று கேட்டான்.34 இயேசு மறுமொழியாக, “நீராக இதைக் கேட்கிறீரா? அல்லது மற்றவர்கள் என்னைப்பற்றி உம்மிடம் சொன்னதை வைத்துக் கேட்கிறீரா?” என்று கேட்டார்.35 அதற்கு பிலாத்து, “நான் ஒரு யூதனா, என்ன? உன் இனத்தவரும் தலைமைக் குருக்களும் தானே உன்னை என்னிடம் ஒப்புவித்தார்கள். நீ என்ன செய்தாய்?” என்று கேட்டான்.36 இயேசு மறுமொழியாக, “எனது ஆட்சி இவ்வுலக ஆட்சி போன்றது அல்ல. அது இவ்வுலக ஆட்சி போன்றதாய் இருந்திருந்தால் நான் யூதர்களிடம் காட்டிக் கொடுக்கப்படாதவாறு என் காவலர்கள் போராடியிருப்பார்கள். ஆனால், என் ஆட்சி இவ்வுலக ஆட்சி போன்றது அல்ல” என்றார்.37 பிலாத்து அவரிடம், “அப்படியானால் நீ அரசன்தானோ?” என்று கேட்டான். அதற்கு இயேசு, “அரசன் என்று நீர் சொல்கிறீர். உண்மையை எடுத்துரைப்பதே என் பணி. இதற்காகவே நான் பிறந்தேன்; இதற்காகவே உலகிற்கு வந்தேன். உண்மையைச் சார்ந்தவர் அனைவரும் என் குரலுக்குச் செவிசாய்க்கின்றனர்” என்றார்.38 பிலாத்து அவரிடம், “உண்மையா? அது என்ன?” என்று கேட்டான்.⒯இப்படி கேட்டபின் பிலாத்து மீண்டும் யூதரிடம் சென்று, “இவனிடம் நான் குற்றம் ஒன்றும் காணவில்லையே” என்றான்.39 மேலும், “பாஸ்கா விழாவின்போது உங்கள் விருப்பப்படி ஒரு கைதியை விடுதலை செய்யும் வழக்கம் உண்டே! யூதரின் அரசனாகிய இவனை நான் விடுதலை செய்யட்டுமா? உங்கள் விருப்பம் என்ன?” என்று கேட்டான்.40 அதற்கு அவர்கள், “இவன் வேண்டாம். பரபாவையே விடுதலை செய்யும்” என்று மீண்டும் கத்தினார்கள். அந்தப் பரபா ஒரு கள்வன்.