யோவான் 3 ERV IRV TRV KJV ASV BBE DBY WBT WEB YLT
1 பரிசேயர் ஒருவர் இருந்தார்; அவர் பெயர் நிக்கதேம். அவர் யூதத் தலைவர்களுள் ஒருவர்.2 அவர் ஓர் இரவில் இயேசுவிடம் வந்து, “ரபி, நீர் கடவுளிடமிருந்து வந்த போதகர் என்பதை நாங்கள் அறிவோம். கடவுள் தம்மோடு இருந்தாலன்றி, நீர் செய்யும் இவ்வரும் அடையாளங்களை யாரும் செய்ய இயலாது” என்றார்.3 இயேசு அவரைப் பார்த்து, “மறுபடியும்* பிறந்தாலன்றி எவரும் இறையாட்சியைக் காண இயலாது என மிக உறுதியாக உமக்குச் சொல்லுகிறேன்” என்றார்.⒫4 நிக்கதேம் அவரை நோக்கி, “வயதானபின் ஒருவர் எப்படிப் பிறக்க முடியும்? அவர் மீண்டும் தாயின் வயிற்றில் புகுந்து பிறக்க முடியுமா?” என்று கேட்டார்.5 இயேசு அவரைப் பார்த்து, “ஒருவர் தண்ணீராலும் தூய ஆவியாலும் பிறந்தாலன்றி இறையாட்சிக்கு உட்பட இயலாது என்று மிக உறுதியாக உமக்குச் சொல்கிறேன்.6 மனிதரால் பிறப்பவர் மனித இயல்பை உடையவர். தூய ஆவியால் பிறப்பவர் தூய ஆவியின் இயல்பை உடையவர்.7 நீங்கள் மறுபடியும் பிறக்கவேண்டும் என்று நான் உமக்குக் கூறியது பற்றி நீர் வியப்படைய வேண்டாம்.8 காற்று விரும்பிய திசையில் வீசுகிறது. அதன் ஓசை உமக்குக் கேட்கிறது. ஆனால், அது எங்கிருந்து வருகிறது என்றும் எங்குச் செல்கிறது என்றும் உமக்குத் தெரியாது. தூய ஆவியால் பிறந்த அனைவருக்கும் இது பொருந்தும்” என்றார்.⒫9 நிக்கதேம் அவரைப் பார்த்து, “இது எப்படி நிகழ முடியும்?” என்று கேட்டார்.10 அதற்கு இயேசு கூறியது: “நீர் இஸ்ரயேல் மக்களிடையே போதகராய் இருந்தும் உமக்கு இது தெரிவில்லையே!11 எங்களுக்குத் தெரிந்ததைப் பற்றியே பேசுகிறோம்; நாங்கள் கண்டதைப் பற்றியே சான்று பகர்கிறோம். எனினும் எங்கள் சான்றை நீங்கள் ஏற்றுக்கொள்வதில்லை என உறுதியாக உமக்குச் சொல்கிறேன்.12 மண்ணுலகு சார்ந்தவை பற்றி நான் உங்களுக்குச் சொன்னதை நீங்கள் நம்பவில்லை என்றால் விண்ணுலகு சார்ந்தவை பற்றிச் சொல்லும் போது எப்படி நம்பப்போகிறீர்கள்?”⒫13 “விண்ணகத்திலிருந்து இறங்கி வந்துள்ள மானிட மகனைத் தவிர வேறு எவரும் விண்ணகத்திற்கு ஏறிச் சென்றதில்லை.14 பாலைநிலத்தில் மோசேயால் பாம்பு உயர்த்தப்பட்டது போல மானிடமகனும் உயர்த்தப்பட வேண்டும்.15 அப்போது அவரிடம் நம்பிக்கை கொள்ளும் அனைவரும் நிலைவாழ்வு பெறுவர்.16 தம் ஒரே மகன் மீது நம்பிக்கை கொள்ளும் எவரும் அழியாமல் நிலைவாழ்வு பெறும் பொருட்டு அந்த மகனையே அளிக்கும் அளவுக்குக் கடவுள் உலகின்மேல் அன்பு கூர்ந்தார்.17 உலகிற்குத் தண்டனைத் தீர்ப்பளிக்க அல்ல, தம் மகன் வழியாக அதை மீட்கவே கடவுள் அவரை உலகிற்கு அனுப்பினார்.18 அவர்மீது நம்பிக்கை கொள்வோர் தண்டனைத் தீர்ப்புக்கு ஆளாவதில்லை; ஆனால், நம்பிக்கை கொள்ளாதோர் ஏற்கெனவே தீர்ப்புப் பெற்றுவிட்டனர். ஏனெனில், அவர்கள் கடவுளின் ஒரே மகனிடம் நம்பிக்கை கொள்ளவில்லை.19 ஒளி உலகிற்கு வந்திருந்தும் தம் செயல்கள் தீயனவாய் இருந்ததால் மனிதர் ஒளியைவிட இருளையே விரும்பினர். இதில்தான் அவர்களுக்கு எதிரான தண்டனைத் தீர்ப்பு அடங்கியுள்ளது.20 தீங்கு செய்யும் அனைவரும் ஒளியை வெறுக்கின்றனர். தங்கள் தீச்செயல்கள் வெளியாகிவிடும் என அஞ்சி அவர்கள் ஒளியிடம் வருவதில்லை.21 உண்மைக்கேற்ப வாழ்பவர்கள் ஒளியிடம் வருகிறார்கள். இதனால், அவர்கள் செய்யும் அனைத்தையும் கடவுளோடு இணைந்தே செய்கிறார்கள் என்பது வெளியாகும்.22 இவற்றுக்குப் பின்பு இயேசுவும் அவர்தம் சீடரும் யூதேயப் பகுதிக்குச் சென்றனர். அங்கே அவர் அவர்களோடு தங்கித் திருமுழுக்குக் கொடுத்து வந்தார்.23 யோவானும் சலீம் என்னும் இடத்துக்கு அருகில் உள்ள அயினோனில் திருமுழுக்குக் கொடுத்துக் கொண்டிருந்தார். ஏனெனில், அங்குத் தண்ணீர் நிறைய இருந்தது. மக்கள் அங்கு சென்று திருமுழுக்குப் பெற்றுவந்தார்கள்.24 யோவான் சிறையில் அடைக்கப்படுமுன் இவ்வாறு நிகழ்ந்தது.⒫25 ஒரு நாள் யோவானின் சீடர் சிலருக்கும் யூதர் ஒருவருக்கும் இடையே தூய்மைச் சடங்குபற்றி விவாதம் எழுந்தது.26 அவர்கள் யோவானிடம் போய், “ரபி, யோர்தான் ஆற்றின் அக்கரைப் பகுதியில் உம்மோடு ஒருவர் இருந்தாரே! நீரும் அவரைக் குறித்துச் சான்று பகர்ந்தீரே! இப்போது அவரும் திருமுழுக்குக் கொடுக்கிறார். எல்லாரும் அவரிடம் செல்கின்றனர்” என்றார்கள்.27 யோவான் அவர்களைப் பார்த்து, “விண்ணிலிருந்து அருளப்படாவிட்டால் எவரும் எதையும் பெற்றுக் கொள்ள முடியாது.28 ‘நான் மெசியா அல்ல; மாறாக அவருக்கு முன்னோடியாக அனுப்பபப்பட்டவன்’ என்று நான் கூறியதற்கு நீங்களே சாட்சிகள்.29 மணமகள் மணமகனுக்கே உரியவர். மணமகனின் தோழரோ அருகில் நின்று அவர் சொல்வதைக் கேட்கிறார்; அதில் அவர் பெருமகிழ்ச்சி அடைகிறார். என் மகிழ்ச்சியும் இது போன்றது. இம்மகிழ்ச்சி என்னுள் நிறைந்துள்ளது.30 அவரது செல்வாக்குப் பெருக வேண்டும்; எனது செல்வாக்குக் குறைய வேண்டும்” என்றார்.31 மேலிருந்து வருபவர், அனைவரையும்விட மேலானவர். மண்ணுலகிலிருந்து உண்டானவர் மண்ணுலகைச் சேர்ந்தவர். மண்ணுலகு சார்ந்தவை பற்றியே அவர் பேசுகிறார். விண்ணுலகிலிருந்து வருபவர், அனைவருக்கும் மேலானவர்.32 தாம் கண்டதையும் கேட்டதையும்பற்றியே அவர் சான்று பகர்கிறார். எனினும் அவர் தரும் சான்றை எவரும் ஏற்றுக்கொள்வதில்லை.33 அவர் தரும் சான்றை ஏற்றுக் கொள்பவர் கடவுள் உண்மையானவர் என்பதை உறுதிப்படுத்துகிறார்.34 கடவுளால் அனுப்பப் பெற்றவர் கடவுளின் வார்த்தைகளைப் பேசுகிறார். கடவுள் அவருக்குத் தம் ஆவிக்குரிய கொடைகளை அளவின்றிக் கொடுக்கிறார்.35 தந்தை மகன் மேல் அன்பு கூர்ந்து அனைத்தையும் அவர் கையில் ஒப்படைத்துள்ளார்.36 மகனிடம் நம்பிக்கை கொள்வோர் நிலைவாழ்வைப் பெறுவர். நம்பிக்கை கொள்ளாதோர் வாழ்வைக் காணமாட்டார். மாறாகக் கடவுளின் சினம் அவர்கள்மேல் வந்து சேரும்