யோனா 4 IRV ஒப்பிடு Tamil Indian Revised Version
1 யோனாவுக்கு இது மிகவும் வருத்தமாக இருந்தது; அவன் கடுங்கோபம் கொண்டு,
2 கர்த்தரை நோக்கி விண்ணப்பம்செய்து: ஆ கர்த்தாவே, நான் என் தேசத்தில் இருக்கும்போதே நான் இதைச் சொல்லவில்லையா? இதினாலேயே நான் முன்னமே தர்ஷீசுக்கு ஓடிப்போனேன்; நீர் இரக்கமும் மன உருக்கமும் நீடிய சாந்தமும் மிகுந்த கிருபையுமுள்ளவரும், தீங்கிற்கு மனமிரங்குகிறவருமான தேவனென்று அறிவேன்.
3 இப்போதும் கர்த்தாவே, என் உயிரை என்னைவிட்டு எடுத்துக்கொள்ளும்; நான் உயிரோடு இருக்கிறதைவிட சாகிறது நலமாக இருக்கும் என்றான்.
4 அதற்குக் கர்த்தர்: நீ எரிச்சலாக இருக்கிறது நல்லதோ என்றார்.
5 பின்பு யோனா நகரத்திலிருந்து புறப்பட்டு, நகரத்திற்குக் கிழக்கே போய், அங்கே தனக்கு ஒரு குடிசையைப் போட்டு, நகரத்திற்கு நடக்கப்போகிறதைத் தான் பார்க்கும்வரைக்கும் அதின் கீழே நிழலில் உட்கார்ந்திருந்தான்.
6 யோனாவுடைய தலையின்மேல் நிழலுண்டாயிருக்கவும், அவனை அவனுடைய மனவருத்தத்திற்கு நீங்கலாக்கவும் தேவனாகிய கர்த்தர் ஒரு ஆமணக்குச்செடியை முளைக்கக் கட்டளையிட்டு, அதை அவன்மேல் ஓங்கி வளரச்செய்தார்; அந்த ஆமணக்குச் செடியினால் யோனா மிகவும் சந்தோஷப்பட்டான்.
7 மறுநாளிலோ கிழக்கு வெளுக்கும் நேரத்தில் தேவன் ஒரு பூச்சிக்குக் கட்டளையிட்டார்; அது ஆமணக்குச் செடியை அரித்துப்போட்டது; அதினால் அது காய்ந்துபோனது.
8 சூரியன் உதித்தபோது தேவன் வெப்பமான கீழ்க்காற்றைக் கட்டளையிட்டார்; அப்பொழுது வெயில் யோனாவுடைய தலையில் படுகிறதினால் அவன் சோர்ந்துபோய், தனக்குள்ளே சாவை விரும்பி: நான் உயிரோடு இருக்கிறதைவிட சாகிறது நலமாக இருக்கும் என்றான்.
9 அப்பொழுது தேவன் யோனாவை நோக்கி: நீ ஆமணக்குச் செடிக்காக எரிச்சலாக இருக்கிறது நல்லதோ என்றார்; அதற்கு அவன்: நான் சாகும்வரைக்கும் எரிச்சலாக இருக்கிறது நல்லதுதான் என்றான்.
10 அதற்குக் கர்த்தர்: நீ பிரயாசப்படாததும் நீ வளர்க்காததும், ஒரு இரவிலே முளைத்ததும், ஒரு இரவிலே அழிந்துபோனதுமான ஆமணக்குச் செடிக்காக மனதுருகுகிறாயே.
11 வலதுகைக்கும் இடதுகைக்கும் வித்தியாசம் தெரியாத இலட்சத்து இருபதினாயிரம்பேருக்கு அதிகமான மனிதர்களும் அநேக மிருகஜீவன்களும் இருக்கிற பெரிய நகரமாகிய நினிவேக்காக நான் மனதுருகாமல் இருப்பேனோ என்றார்.